Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

தஸ்தயேவ்ஸ்கி 100: மாபெரும் விசாரணை அதிகாரி

ரஷ்யாவின் மாஸ்கோவில் 1821-ல் பிறந்த தஸ்தயேவ்ஸ்கி உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இந்த ஆண்டுடன் அவர் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது எழுத்துலகச் சாதனையின் சிகரமாகக் கருதப்படுவது ‘கரமசோவ் சகோதரர்கள்’ (1880). ‘மாபெரும் விசாரணை அதிகாரி’ என்பது அந்த நாவலின் மிக முக்கியமான பகுதி. இயேசு (பெயர் குறிப்பிடப்படாமல்) 16-ம் நூற்றாண்டில் மறு அவதாரம் எடுப்பதாகவும் அதிசயங்கள் நிகழ்த்துவதாகவும் அதைக் கண்ட 90 வயது முதியவரான மாபெரும் விசாரணை அதிகாரி அவரைக் கைதுசெய்து தனியே விசாரிப்பதாகவும் அமைந்திருக்கும் இந்தப் பகுதி மிகவும் தத்துவார்த்தமானது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே…“கெட்டதும் சாமர்த்தியமானதுமான, சுய அழிவும் சூன்ய விழைவும் கொண்ட ஆவி" என்றபடி அந்த முதியவன் தொடர்கிறான், “அந்த மகத்தான ஆவியே உன்னிடம் வனாந்திரத்தில் பேசி, உன்னைச் சபலப்படுத்தியதாக வேதாகமங்களில் நாங்கள் படித்திருக்கிறோம். அப்படி நடந்ததா என்ன? வேதாகமத்தில் 'சபலங்கள்' என்று கூறப்படும் பகுதியில் இருக்கும், மூன்று கேள்விகளாக அந்த ஆவி முன்வைத்த, நீ மறுத்த விஷயங்களைவிட உண்மையானதைச் சொல்வதற்குச் சாத்தியமுண்டா? அதேவேளையில், உண்மையிலேயே அட்டகாசமான அற்புதம் ஒன்று பூமியின் மேல் எப்போதாவது நிகழ்த்தப்பட்டிருக்கும் என்றால், அது அன்றைய தினத்தில்தான், அந்த மூன்று சபலங்களின் தினத்தில்தான். துல்லியமாக, அந்த மூன்று கேள்விகளின் உதயத்தில்தான் அற்புதம் உள்ளது. ஒரு உதாரணமாகவோ பரிசோதனைரீதியாகவோ, கற்பனை செய்து பார்க்கலாம். கெட்ட ஆவி கேட்ட அந்த மூன்று கேள்விகள் தடயமே இல்லாமல் வேதாகமங்களிலிருந்து மறைந்துவிட்டதென்றும், அவற்றை மறுஉருவாக்கம் செய்ய வேண்டியது அவசியமென்றும் கற்பனைசெய்துகொள்வோம். அந்தக் கேள்விகளைக் கண்டுபிடித்து அவற்றைப் புதிதாக இயற்றி, வேதாகமத்தில் ஏற்றுவதற்காக, பூமியில் உள்ள அத்தனை ஞானிகளையும் சேகரிக்க வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள், உயர்நிலையில் உள்ள குருக்கள், தத்துவவாதிகள், கவிஞர்களைத் திரட்டி அவர்களுக்கு இந்த மூன்று கேள்விகளையும் கண்டுபிடித்து, இயற்ற வேண்டிய வேலையைக் கொடுத்துப் பார்த்தால்தான் அந்த நிகழ்ச்சியின் பிரமாண்டம் மட்டுமல்ல, மூன்று வார்த்தைகளில், மனித அடிப்படையில் உருவான அந்த வெறும் மூன்று சொற்றொடர்களில், உலகம் மற்றும் மனித குலத்தின் முழுமையான எதிர்கால வரலாறும் தொடர்புபட்டிருப்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

இந்தப் பூமியின் மாபெரும் ஞானம் அனைத்தையும் சேர்த்து ஒருங்கிணைத்தாலும், மகத்தானதும் சாமர்த்தியமானதுமான அந்தக் கெட்ட ஆவி, வனத்தில் உன்னிடம் கேட்ட அந்த மூன்று கேள்விகளின் சக்திக்கும் ஆழத்துக்கும் சிறிதளவாவது தொடர்புடையதாக இருக்குமா? ஏனெனில், அந்தக் கேள்விகளின் வெளிப்பாட்டின் அற்புதத்தை மட்டும் வைத்தே, அநித்தியமான மனித அறிவோடு அல்ல நித்தியமான, அறுதியான ஒரு மனதுடன் தொடர்புடைய கேள்விகள் அவை என்ற உணர்வை அடைய முடியும். அந்த மூன்று கேள்விகளில் அப்பட்டமாக, அடுத்து நிகழப்போகும் மனிதகுலத்தின் வரலாறு முழுமையாகத் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. பூமி முழுமையும் பொருந்திப்போகக்கூடிய, மனித இயற்கையின் தீர்க்கப்படாத வரலாற்று முரண்பாடுகளின் மூன்று சித்திரங்கள் அவை. அறியப்படாமல் இருந்த எதிர்காலம் துலங்காமல் இருந்தபோது சொல்லப்பட்டவை அவை. ஆனால், கடந்துவிட்ட பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான், அப்போது கேட்கப்பட்ட மூன்று கேள்விகள், எத்தகைய தொலைநோக்கு மற்றும் முன்னுணர்தலின் விளைவு என்று நம்மால் பார்க்க முடிவதோடு, அந்தக் கேள்விகளோடு எதையும் சேர்ப்பதோ எதையும் நீக்குவதோ சாத்தியமே இல்லாமல் இருப்பதற்கான நியாயத்தையும் அந்தக் கேள்விகள் வைத்திருக்கின்றன.

மனிதனின் நேசம் என்பது சுதந்திரமாக இருக்க வேண்டுமென்றும், உன்னை அவன் சுதந்திரமாகப் பின்பற்ற வேண்டுமென்றும் உன்னால் அவன் கவர்ந்திழுக்கப்பட வேண்டுமென்றும் நீ விரும்பினாய். இனிமேலாவது, பழைய, உறுதியான சட்டமிருந்த இடத்தில், உனது பிம்பம் மட்டுமே அவனை வழிநடத்த, சுதந்திர இதயத்துடன் மனிதன் நன்மையையும் தீமையையும் தீர்மானிக்க வேண்டுமெனவும் விரும்பினாய்–அத்துடன் சுதந்திரத் தேர்வு போன்ற அதிபயங்கரமான சுமையால், அவன் அழுத்தி ஒடுக்கப்பட்டிருந்தால் அவன் கட்டக்கடைசியாக உனது பிம்பத்தையும் உனது உண்மையையும் புறக்கணிப்பான் என்பதை நீ நிச்சயமாகக் கனவில்கூடக் கண்டிருக்க மாட்டாய். உண்மை உன்னிடம் இல்லை என்று அவர்கள் இறுதியில் கூச்சலிடுவார்கள். எத்தனையோ கவலைகள், தீர்க்க முடியாத பிரச்சினைகளோடு மக்களை நீ விட்டுச்சென்றபோது இருந்ததைவிடக் கூடுதல் குழப்பம் வதைப்பாடு சூழ அவர்களை விட்டுப்போவது அசாத்தியமானதென்று அதனால்தான் சொல்கிறேன். இப்படித்தான் உன்னுடைய சொந்த ராஜ்ஜியத்தின் அழிவுக்கு நீயே அடித்தளத்தை இட்டாய். அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்லவே முடியாது. அப்படியிருந்தும் உனக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது அதுவா?

அந்தப் பலவீனமான கலகவாதிகளின் மனசாட்சிகளை எப்போதைக்குமாக வெற்றிகொண்டு சிறைப்பிடித்து வைக்க இந்தப் பூமியில் மூன்றே மூன்று ஆற்றல்கள்தான் உள்ளன. அவர்களைச் சந்தோஷப்படுத்தும் அந்த மூன்று ஆற்றல்கள் இவை: அற்புதம், மர்மம், அதிகாரம். நீ முதலாவதையும் இரண்டாவதையும் மூன்றாவதையும் நிராகரித்து அப்படி நிராகரித்ததன் மூலம் முன்மாதிரியாகவும் ஆகிவிட்டாய். ஞானமிக்க அந்தக் கெட்ட ஆவி உன்னை ஆலயத்தின் உச்சிக்கு அழைத்துப் போய் உன்னிடம் கேட்டது: ‘கடவுளின் மைந்தன் நீ என்பதை நீ அறிந்தவன் எனில், இங்கிருந்து கீழே குதி. ஏனெனில், தேவதைகள் அவனுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டு அவனை மேலே தூக்கிவருவார்கள் என்றும் அவன் வீழ்ந்து சிதறிப்போக மாட்டான் என்றும் எழுதப்பட்டுள்ளது. அப்போதுதான் நீ கடவுளின் மைந்தன் என்பதை அறிந்துகொள்வாய். அத்துடன் உனது தந்தையின் மீது உனக்குள்ள விசுவாசமும் நிரூபணமாகும்.’ ஆனால், அந்த ஆவி சொன்னதைக் கேட்ட பின்னர், அது கொடுக்க முன்வந்த வரத்தை நிராகரித்ததோடு, ஆலயத்திலிருந்து நீ கீழே விழவும் இல்லை. ஆமாம், நிஜமாகவே நீ பெருமிதத்துடனும் கம்பீரத்தோடும் கடவுளைப் போலத்தான் நடந்துகொண்டாய். ஆனால் மக்கள், அந்தப் பலவீனமான, கலகக்காரக் கூட்டத்தினர் கடவுளரா என்ன?

ஆனால், ஒரே ஒரு எட்டை, ஆலயத்தின் கோபுரத்திலிருந்து கீழே விழுவதற்கான அந்த எட்டை எடுத்து வைப்பதன் மூலமாக, கடவுளை சபலத்துக்குள்ளாக்குவதோடு, கடவுளிடமிருக்கும் அனைத்து விசுவாசத்தையும் இழந்திருக்கவும் செய்வாய். அத்துடன் நீ மீட்க வந்த பூமியின் மீது மோதிச் சிதறியும் போயிருப்பாய். அத்துடன் உன்னைச் சபலத்துக்குள்ளாக்கிய, சாமர்த்தியமான அந்த ஆவி புளகாங்கிதமும் பட்டிருக்கும். ஆனால், திரும்பவும் சொல்கிறேன், உன்னைப் போல நிறையப் பேர் இருக்கிறார்களா என்ன? ஒரு கணம், அப்படியான சபலத்தை எதிர்த்து நிற்கும் பலத்தைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உன்னால் எண்ண முடிகிறதா? அத்துடன், வாழ்க்கையின் அப்படியான பயங்கரத் தருணங்களில், இதயத்தின் சுதந்திரமான முடிவு மட்டுமே கோரப்படும் நிலையில், மிகப் பயங்கரமான அடிப்படை சார்ந்த, வாதைக்குள்ளாக்கும் ஆன்மிகக் கேள்விகள் எழும் வேளைகளில், அப்படியான அற்புதத்தை மறுக்கும் அளவுக்கு மனித இயற்கை உண்மையிலேயே திறன்கொண்ட தன்மை கொண்டதா? உனது மகத்துவக் காரியம் வேதாகமங்களில் எழுதிப் பாதுகாக்கப்பட்டு, யுகங்களைத் தாண்டி, பூமியின் கடைசி விளிம்புகள் வரை அடையும் என்பதை நீ அறிவாய். அத்துடன் உன்னைத் தொடர்வதன் மூலம், அற்புதம் எதுவும் தேவைப்படாமலேயே மனிதன் கடவுளை அடைய முடியும் என்றும் நீ நம்பினாய். அற்புதங்களைத் தேடாத மனிதன் கடவுளையும் அதிகம் தேடுவதில்லை. மனிதன் அற்புதத்தை நிராகரித்த அந்தக் கணத்திலேயே அவன் கடவுளையும் நிராகரித்துவிடுவான் என்பது உனக்குத் தெரியவில்லை. அற்புதம் இல்லாமல் அவனால் சக்தியுடன் திகழ முடியாது என்பதால், அவன் தனக்கெனப் புதிய அற்புதங்களைப் படைக்கிறான்.

விசாரணை அதிகாரி அமைதியாகிவிடுகிறார். தனது கைதி என்ன சொல்லி எதிர்வினையாற்றப் போகிறான் என்பதற்காக அவர் குறிப்பிட்ட அளவு நேரம் காத்திருக்கிறார். அவனது அமைதியை அவரால் தாங்கவே முடியவில்லை. மௌன பாவத்துடன், நேரடியாகத் தனது கண்களை நோக்கி, எந்தவொரு ஆட்சேபணையையும் எழுப்ப விரும்பாமல், அந்தக் கைதி அவர் சொல்வதையெல்லாம் இத்தனை நேரமும் கேட்டுக்கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்கிறார். கசப்பாகவோ, பயங்கரமாகவோ இருந்தால்கூட மற்றவன் எதையாவது வாய்திறந்து சொல்ல வேண்டுமென்று அந்த முதியவர் விரும்புகிறார். ஆனால், அந்த மற்றவனோ திடீரென்று அருகே நெருங்கிவந்து எதுவுமே உரைக்காமல், முதியவனின் தொண்ணூறு வயதான சோகையான உதடுகளில் அமைதியாக முத்தமிட்டான். அது ஒன்றே அவனாற்றிய எதிர்வினை. முதியவரோ நடுநடுங்குகிறார். அவரது வாயின் மூலைகளில் ஏதொவொன்று கிளர்ந்தது; கதவு அருகே சென்று, திறந்து அவனிடம் கூறுகிறார்: “போ, திரும்பி வந்துவிடாதே... ஒருபோதும் வராதே... ஒருபோதும்... ஒருபோதும்!” அத்துடன் முதியவர் அவனை, ‘நகரின் இருண்ட தெருக்களுக்குள்ளும் சதுக்கங்களுக்குள்ளும்’ விடுவித்துவிடுகிறார். கைதி கிளம்புகிறான்.’

- ஆங்கிலம் வழியாக தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x