Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

மாநில மொழிகள் ஏன் இப்படிப் புறக்கணிக்கப்படுகின்றன?

சமீபத்தில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய இந்தியக் குடிமையியல் பணி (CSE) மற்றும் இந்திய வனப் பணி (IFS) ஆகிய தேர்வுகளுக்கான முதல்கட்டத் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது.

இத்தேர்வு முதல்கட்டத் தேர்வு (Preliminary), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் நேர்முகத் தேர்வு (Personality Test) என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத் தேர்வு காலை, மதியம் என இரண்டு பாகங்களாக ஒவ்வொன்றும் 2 மணி நேரம் நடைபெறும். காலை பொதுஅறிவுக் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில் மொத்தம் 100 கேள்விகள், 200 மதிப்பெண் அடிப்படையில் கேட்கப்படும். தவறான பதிலுக்கு 0.66 மதிப்பெண் எதிர்மறை மதிப்பெண்ணாகக் குறைக்கப்படும்.

மதியம், CSAT (Civil Service Aptitude Test) எனப்படும் கணக்கு மற்றும் ஆங்கிலம் கொண்ட திறன் தேர்வு நடத்தப்படும். கணக்கின் அடிப்படையில் ஏறக்குறைய 50 கேள்விகளும், ஆங்கிலத்தில் ஏறக்குறைய 30 கேள்விகளும் சேர்த்து மொத்தம் 80 கேள்விகள். தலா ஒவ்வொரு கேள்விக்கும் 2.50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்கள். தவறான பதிலுக்குத் தலா 0.83 மதிப்பெண் எதிர்மறை மதிப்பெண்ணாக, எடுக்கப்பட்ட மதிப்பெண்ணிலிருந்து குறைக்கப்படும்.

மதியம் நடத்தப்படும் திறன் தேர்வு, காலை எழுதும் பொதுஅறிவுத் தேர்வைக் கருத்தில் கொள்வதற்கான தகுதித் தேர்வு போன்றது. இதில் மொத்தம் 200 மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் எடுக்கும் பட்சத்தில்தான் காலை எழுதிய பொதுஅறிவுத் தேர்வு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். பொதுஅறிவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியடைகிறார்கள். அப்படியானால், மதியம் எழுதும் அந்தத் திறன் தேர்வில் 33% மதிப்பெண்ணுக்குக் கீழ் குறையும் பட்சத்தில், காலை எழுதிய தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் தேர்ச்சி பெற இயலாது.

மதியம் கேட்கப்படும் திறன் தேர்வின் ஆங்கிலக் கேள்விகள்தான் இதில் சிக்கல். ஒரு பத்தியைக் கொடுத்துவிட்டு, அந்தப் பத்தியின் ‘மையப்பொருள் என்ன?’ என்று கேள்விகள் கேட்கப்படும். அக்கேள்வியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் அணுகுவதற்கு ஆங்கிலம் சரளமாக அறிந்திருப்பது அவசியமாகிறது. அதே கேள்வி இந்தியிலும் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுக் கொடுத்திருப்பார்கள்.

இது இந்தி தெரியாத பிராந்திய மொழி மாணவர்களுக்கும் இந்தி தெரிந்த மாணவர்களுக்கும் பாகுபாட்டை ஏற்படுத்தும் முறையாக அமைகிறது. இந்தி மொழியில் இருப்பது ஏனைய அட்டவணை மொழிகளிலும் இருப்பதுதான் இது போன்ற போட்டித் தேர்வுகளில் அளிக்கப்படும் சம வாய்ப்பு.

அந்தப் பத்தியில் உள்ளதை உணர்வதற்கே ஆங்கிலம் தேவையானதாக இருக்கிறதே. அதே சமயத்தில், இந்தி தெரிந்தவர்கள், இந்தி தெரியாதவர்களைக் காட்டிலும் விரைவாக அக்கேள்வியை அணுகும் கூடுதல் வாய்ப்பாக அமைகிறதே! இது போன்ற போட்டித் தேர்வுகளில் அந்தப் பத்தியை உணரும் வகையிலாவது ஆங்கிலம் தெரிந்திருப்பது கட்டாயமென்றால், பிறகு எதற்கு அங்கே இந்தி?

நீட் தேர்வுகளில் பிராந்திய மொழிகளில் வினாத்தாள் இருக்கிறது, வங்கி மற்றும் பிற மத்தியப் பணிகளுக்கு ஒருங்கிணைந்த முதல்கட்டத் தேர்வாகப் பொதுத் தகுதித் தேர்வை அமல்படுத்த இருக்கும் அரசு, அதில் பிராந்திய மொழிகளில் வினா அமையும் என உறுதி அளித்திருக்கிறது, அப்போது ஏன் இத்தேர்வில் மட்டும் பாகுபாடு?

இந்தி கட்டாயம் இருக்க வேண்டுமானால், அங்கு மீதி இருக்கும் அட்டவணை மொழிகளிலும் மாநில மொழிகளுக்கு ஏற்பக் கேள்விகளைத் தயார் செய்ய வேண்டியதுதானே சம வாய்ப்பு. மேலும், இதன் முதன்மைத் தேர்வில் மற்றொரு பகுதியில் ஆங்கிலம் வருகிறது, அங்கு மட்டும் கேள்வி இந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில், முதல்கட்டத் தேர்வில் இப்படி இருப்பது முரணாக இருக்கிறது.

இந்திய அளவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படும் என்பதற்காக இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றால், தேர்ச்சிக்குப் பிந்தைய பயிற்சிக் காலத்தில் பணியமர்த்தப்படும் மாநிலவாரியாக மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறதே. இந்நிலையில், தேர்ச்சி பெறுவதற்கே இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முதன்மைத் தேர்வில் அட்டவணை மொழிகளில் எழுதும் வாய்ப்பை அளிக்கிறது தேர்வுக் குழு. ஆனால், முதல்கட்டத் தேர்விலேயே மொழிப் பிரச்சினையால் பலரது வாய்ப்பு குறைந்துவிடுகிறதே. ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ள கேள்வியே புரியாமல், நமக்குத் தெரிந்த பிராந்திய மொழியில் பதில் அளித்துக்கொள்ளலாம் என்பது மற்றொரு முரண்.

26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இந்தியாவில், 2017, 2018 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 59% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மற்ற ஆண்டுகளிலும் 50%-க்கும் மேலானோர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் தேர்ச்சி பெறுகிறார்கள். இந்த அவலத்தை அனைவரும் உணர வேண்டும். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக் காட்டிலும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களின் உரிமைகளில் சமத்துவம் ஏற்படுத்துவது அவசியம்.

இவ்வளவு முக்கியமான தேர்வு அமைப்பில் இருக்கும் சிக்கலை, ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் உணர்ந்து களைய வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற மாநில உறுப்பினர்களுடன் இணைந்து, விரைந்து இந்த நெடுங்காலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- சா.கவியரசன். சுயாதீனப் பத்திரிகையாளர், தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x