Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

வேளாண் துறையின் தற்சார்புக்கு வலுசேர்க்குமா கூட்டுறவுச் சங்கங்கள்?

அமுல் நிறுவனத்தின் 75-ம் ஆண்டு நிறைவு விழாவில் சமீபத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறையைத் தற்சார்புள்ளதாக மாற்ற, கூட்டுறவு முறை உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றும் வலிமை கூட்டுறவு முறைக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய மக்கள்தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தையே தங்களது நிலையான வருமான வாய்ப்பாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை விவசாயத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. கூட்டுறவு முறை அதை வலுவாக்கும் திறன் படைத்திருக்கிறது. அதற்கான மிகச் சிறந்த உதாரணமாக அமுல் நிறுவனம் விளங்குகிறது. எனினும், வேளாண் துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் கூட்டுறவு முறை பரவலாகச் சென்றுசேரவில்லை. கூட்டுறவு முறை பின்பற்றப்படும் சில துறைகளிலும் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கவில்லை. கூட்டுறவுச் சங்கங்களை அரசியல் கட்சிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயல்வதும் அவற்றின் செயல்பாடுகளில் தங்களது அபரிமிதமான செல்வாக்கைக் காட்டுவதும் அவற்றைப் பலவீனப்படுத்தியுள்ளது.

உலகமயமாதலின் வருகைக்குப் பின்பு, சில துறைகளில் பொதுத் துறை நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்துவருகின்றன. சில துறைகளில் தனியார் துறை அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றுசேரவில்லை. இத்தகைய எதிர்மறை விளைவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் படைத்ததாகக் கூட்டுறவு முறை மதிப்பிடப்படுகிறது. உள்நாட்டுத் தேவைகளை மட்டுமின்றி உலகமயத்தால் உருவாகியிருக்கும் புதிய சந்தைத் தேவைகளையும் அதனால் எளிதில் நிறைவுசெய்ய இயலும். தற்போது இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும், அவற்றைச் சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் போதாமைகளையும் உள்துறை அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். வேளாண் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும் கூட்டுறவு அமைப்புகளால் எளிதாகும் வாய்ப்புள்ளது. கூட்டுறவு அமைப்புகளால் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும் இயலும். கூட்டுறவு அமைப்புகளின் கீழ் கிராமங்களை ஒருங்கிணைத்து விவசாயத்தில் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கிவிட முடியும். உணவுப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்று பல்வேறு நிலைகளில் கூட்டுறவு முறை நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்கள், கடனுதவிகள் ஆகியவை பெரிதும் கூட்டுறவுச் சங்கங்களின் வழியாகவே அளிக்கப்பட்டுவந்தாலும் அந்த அமைப்புகளின் உள்கட்டமைப்பு பலவீனமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டதும் கூட்டுறவுச் சங்கங்களில் முன்தேதியிட்டு நகைக்கடன்கள் கணக்கில் வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதே கூட்டுறவுச் சங்கங்களின் மோசமான நிர்வாகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஜனநாயகபூர்வமான தேர்தல், எதற்கும் அரசாங்கத்தையே சார்ந்திருக்காமல் தனித்தியங்குவதற்கான முயற்சிகள், தெளிவானதும் வெளிப்படையானதுமான நிர்வாகம் ஆகியவை கைகூடும் எனில், கூட்டுறவு முறையால் விவசாயிகளுக்குப் பெரும் பயன் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகளைச் சீர்திருத்தி, அவை சுயமாக இயங்குவதை உறுதிப்படுத்தாமல் அது சாத்தியமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x