Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

அதிகரிக்கும் தனிநபர் கடன்கள்: பொருளாதார நிலை மோசமாவதன் அறிகுறி

வங்கிகளால் அளிக்கப்பட்டுவரும் பல்வேறு வகையான கடன்களில் தனிநபர் கடன்களின் அளவு மட்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது நாட்டின் பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறியாகத் தோன்றவில்லை. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மற்ற கடன்களைக் காட்டிலும் தனிநபர் கடன்களே அதிகமாக உள்ளன. இதற்கு முன் எப்போதும் இப்படி தனிநபர் கடன்களின் அளவு, தொழில் துறைக் கடன்கள் உள்ளிட்ட மற்ற கடன்களின் அளவைக் கடந்ததில்லை.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டாம் காலாண்டு வரையிலும் வங்கிகளிடமிருந்து அளிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகை ரூ.109.5 லட்சம் கோடி எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், தொழில் துறைக்கு வழங்கப்பட்ட இதுவரையிலுமான மொத்தக் கடன் ரூ.28.3 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது; விகிதாச்சாரக் கணக்கில், மொத்தக் கடனளவில் 27%-லிருந்து 26%- ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், மொத்தத் தனிநபர் கடன்கள் ரூ.29.2 லட்சம் கோடி உயர்ந்தும் 25%-லிருந்து 27%-ஆக அதிகரித்தும் உள்ளன.

தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட கடனளவு குறைந்திருப்பதற்கு, அடிப்படைத் தொழில்களை நடத்துவோர் தாம் வழக்கமாக வாங்கும் கடன்களின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது ஒரு முக்கியமான காரணம். இரும்பு மற்றும் எஃகு, உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் ஆகிய அடிப்படைத் தொழில் துறையினர் வாங்கும் கடன்களின் அளவு குறைந்துள்ளது. சாலைகள், துறைமுகங்கள், மின்சக்தி ஆகிய துறைகள் வாங்கும் கடனளவு அதிகரித்துள்ளது என்றாலுமேகூட அதுவும்கூட உள்கட்டமைப்புத் துறையில் நேர்மறையான கடன் வளர்ச்சியாக பார்க்கப்படவில்லை.

வழக்கமாக ஜூலை தொடங்கி செப்டம்பரில் முடியும் காலாண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நேர்மறையாக மதிப்பிடப்படும். அடுத்த காலாண்டு, பண்டிகைக் காலம் என்பதால் தொழில் துறையில் செய்யப்படும் புதிய முதலீடுகள் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்ற அடிப்படையில் வரவேற்கப்படும். ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், பெருந்தொழில் துறையினர் வாங்கிய கடன்கள் வழக்கத்தைக் காட்டிலும் 5% குறைந்துள்ளது. தொழில் துறையின் கடன் வளர்ச்சி விகிதம் 2.3% குறைந்துள்ளது. அதற்கு மாறாக, இந்த ஆறு மாதங்களில் வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், நகைக் கடன்கள் உள்ளிட்ட தனிநபர் கடன்களின் அளவு வழக்கத்தைக் காட்டிலும் ரூ.73,000 கோடி வரையில் அதிகரித்துள்ளது. வங்கிகளால் இதுவரை வழங்கப்பட்டுள்ள தனிநபர் கடன்கள் மொத்தம் ரூ.29.2 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதற்கும் அதுவே காரணம்.

கடன் வளர்ச்சி, தொழில் துறை உற்பத்தியில் நேரடி விளைவை ஏற்படுத்துவது. கடன் வளர்ச்சி விகிதம் நிலையாக இருந்தால்தான் வட்டியும் நிலையாக இருக்கும். சேமிப்புக்கான சூழலையும் அது உருவாக்கும். தவிர, தனிநபர் கடனளவை அதிகரிப்பதால் குறுகிய கால அளவுக்குப் பணப் புழக்கத்தை ஏற்படுத்தலாமேயொழிய, அதனாலேயே பொருளாதார நிலையை மீட்டெடுத்துவிட இயலாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x