Last Updated : 04 Jun, 2014 12:00 AM

 

Published : 04 Jun 2014 12:00 AM
Last Updated : 04 Jun 2014 12:00 AM

மனித விலங்குகள்

நண்பனுடன் திருவான்மியூர் பீச்சுக்குச் சென்றிருந்தேன். மாலை ஐந்து மணி இருக்கும். நல்ல இதமான வெயில். நல்ல கடல் காற்று. உலகத்தையே புரட்டிப் போடுவதுபோல் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ஒரு பெரிய ஆமை கடற்கரையில் கிடப்பதைப் பார்த்தேன். இறந்து கரை ஒதுங்கியிருந்தது. வயது ஒரு நூறாண்டு இருக்கலாம்; எடை ஒரு இருநூறு முன்னூறு கிலோ இருக்கலாம்! கண்களில் உப்பு சேர்ந்து, பொத்துப் போய், வாய் திறந்துகிடந்தது. சமூகக் கடமையாய் என் போனில் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். பிறகு, தள்ளி அமர்ந்து பழையபடி உலகத்தைப் புரட்டிப் போட ஆரம்பித்தோம்.

அதோடு, அந்த ஆமையைச் சுற்றி நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தோம். என்ன ஒரு வாழ்வாங்கு வாழ்க்கை வாழ்ந்திருக்கும். இத்தனை பெரிய கடலில் ஒரு குட்டியாகப் பிறந்து, எல்லா ஆபத்துகளிலும் தப்பித்து, இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்து... உலகெங்கும் சுற்றியதோ வங்காள விரிகுடாவிலேயே தங்கி யிருந்ததோ... எங்கு பிறந்தததோ, கடைசியில் திருவான்மியூர் பீச்சில் வந்து கரை ஒதுங்கியிருக்கிறது.

அப்போது ஒரு கணவன் தன் குழந்தையுடன் ஆமை அருகில் அமர்ந்து போஸ் கொடுக்க, மனைவி அதை மொபைல் போனில் க்ளிக்கினாள். அடுத்து வந்த ஒருவன் அந்த ஆமையின் ஓட்டின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தான். இன்னொருவன், காலால் அதன் ஓட்டைத் தட்டிவிட்டுக்கொண்டே சென்றான். போகிற வருகிற எல்லோரும் நின்று தங்கள் மொபைல் போனில் போட்டோ எடுத் தார்கள். என் நண்பன் சொன்னான்: “அதற்கு இன்று ஃபேஸ்புக்கில் சரியான அஞ்சலி கிடைத்துவிடும்!”

கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். நம் மக்கள் கூண்டுக்கு அருகில் நின்றுகொண்டு புள்ளி மானுக்கு பாப்கார்ன் வழங்கிக் கொண்டிருந்தார்கள். விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகம் ஆங்காங்கே போர்டும் வைத்திருக்கிறது. கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தால், அதை மீறி விட்டுத்தான் நம்மவர்கள் மறு வேலை பார்க்கிறார்கள். ஒரு பெரிய கூண்டில் ஒரே ஒரு குரங்கு மட்டும் பாவமாக இருக்கிறது. இன்னொரு கூண்டில் வேறு வகையான குரங்குக் கூட்டம் இருக்கிறது. அதன் பின்புறம் சிவப்பாக ஏதோ நோய் வந்ததுபோல் இருக்கிறது. அதன் அருகில் நின்று நம் மக்கள் போஸ் கொடுக்கிறார்கள். மனைவி மக்களின் முன்னால் தங்கள் வீரத்தைப் பறைசாற்றுகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் ஒருவரின் முடியைப் பிடித்து ஒரு குரங்கு இழுத்துவிட்டது. அதன் கண்களில் பயங்கர வெறி “கூண்டுலேயே அடைபட்டுக் கெடக்குதுல்ல, அப்படித்தான் இருக்கும்!” என்று அவர்களே சமாதானம் வேறு செய்து கொள்கிறார்கள். வாத்துகளின் மூக்கைச் சுற்றிக் கொப்பளம் மாதிரி இருக்கிறது. அது வயதானால் வருவதா அல்லது ஏதேனும் நோயா தெரியவில்லை. அவற்றின் கூண்டில் தண்ணீர்கூட இல்லை. அவை கிடந்து கத்துகின்றன. நம் மக்கள் அதோடு சேர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே உற்சாகக் குரல் கொடுக்கிறார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுகிறார்கள். நம் நாட்டில் இந்த மாதிரி இடங்களுக்குச் சென்றால், எனக்கு மன உளைச்சலே மிஞ்சுகிறது!

பிரதீப் http://espradeep.blogspot.in/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x