Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

துல்லியமான வானிலை கணிப்பு ஏன் வேண்டும்?

செல்வமுரளி

உலக அளவில் தொழில் செய்பவர்களில் (சிறு தொழில் முதற்கொண்டு பெரிய தொழில் வரை) 80% பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்தியாவில் 94% பேர் பருவநிலையை நம்பித்தான் வியாபாரம் செய்கின்றனர். இவ்வளவு அதிகமானோர் பருவநிலையை நம்பியிருக்கும்போது, நமக்கு என்ன தேவைகள் இருக்கின்றன, இப்போது இருக்கும் சேவைகள் நம் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்பதே யதார்த்தம்.

சாலையில் செல்லும் வாகனத்தின் எண்ணைக்கூட இந்திய செயற்கைக் கோள்களால் துல்லியமாகப் பார்க்க முடியும் என்று சொல்லப்பட்டாலும், ஒரு மாவட்டத்தின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும் என்று துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியவில்லை. பொதுவாக, மாவட்டந்தோறும் இன்று வானிலை முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. ஆனால், அன்று மாவட்டம் முழுவதும் மழை பெய்கிறதா என்றால் இல்லை. ஒரு கிராமத்தில் மழை பெய்தால், அடுத்த கிராமத்தில் பொழிவதில்லை, அதனால் என்ன பாதிப்பு நேர்ந்துவிடப்போகிறது? சில உதாரணங்களைப் பார்ப்போம்.

அறுவடைக்கு முன்னர், அதிக மழை பெய்யும் அல்லது அதிக வெப்பம் ஏற்படும் என்று விவசாயிகளுக்குத் துல்லியமாக எச்சரிக்கை கொடுக்கப்படுவதில்லை. பயிர் விளையும்போது அதிக மழை பெய்தால் பயிர்களில் அழுகல் நோய் வரலாம், அவை தொற்றுக்குள்ளாகலாம் அல்லது சாய்ந்தேவிடலாம். அறுவடைக்குப் பின்பு நெற்பயிர்களைக் காய வைக்கும்போதோ வித்து வகைகளைக் காய வைக்கும்போதோ திடீரென மழை பெய்தால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப் போய்விடுகின்றனர்.

இந்தக் கட்டுரையை என்னை எழுதத் தூண்டியது ஒரு சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வர மடம் அருகே தென்பெண்ணை ஆற்றின் மேலே கட்டப்பட்ட பாலத்தில் விவசாயிகள் நெல்லைக் காய வைத்துக்கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்து அந்த இடத்துக்குத் திரும்பிச் சென்றபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது பல இடங்களில் இருந்த விவசாயிகள் ஓடிவந்தும் கூட்டவும் முடியாமல், முழு தார்பாலின் போடவும் முடியாமல் தவித்தது இன்னமும் மனதில் தங்கியிருக்கிறது. அந்தப் பாலத்தில் காயப் போடப்பட்டிருந்த நெல் முழுவதும் நனைந்துவிட்டது, அது சந்தையில் முழு விலைக்குப் போகுமா என்று தெரியாது. ஒரு சிறு பாலத்திலேயே சில ஆயிரமோ, லட்சங்களோ நஷ்டமாகும்போது மாவட்டம் முழுதும், மாநிலம் முழுதும், நாடு முழுதும் எவ்வளவு நஷ்டப்படுவார்கள்.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை உழைத்து உருவாக்கிய பயிரை நாளை பணமாக்கிவிடலாம் எனும்போது, மழையோ அதிவெப்பமோ வந்து 100% நஷ்டமானால் யார் விவசாயம் செய்வார்கள்? இப்படி அறுவடைக்குப் பின்னுள்ள பொருட்களின் சேதம் மட்டும் ஆண்டுக்கு ரூ.65,000 கோடி என்று ஆய்வறிக்கைகள் சுட்டுகின்றன. ஆனால், எவருடைய காதுகளுக்கும் அது எட்டவேயில்லை.

கால்நடை வளர்ப்போருக்கும் அதே கதைதான். திடீரென பெய்யும் மழையால் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுபோக முடியாமல் தடுமாறும் விவசாயிகள் பலர். மழை மட்டுமல்ல, மிதமிஞ்சிய வெப்பமும் பிரச்சினைதான்.

வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவோருக்குத் திடீர் மழையால் நேரும் நஷ்டத்தை நாம் கணக்கிட முடியாது. தவிர, கனிமத் துறை, சுற்றுலா, போக்குவரத்து என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் கணிப்பில்லாத மழையும் வெப்பமும் தொழிலுக்குப் பெரும் பாதிப்பை விளைவிக்கும்.

இன்று மழை வரும் என்று சொல்லும் நமது கைபேசிச் செயலிகள், வானிலை அறிவிப்புகள் ஏதும் சாதாரண மனிதர்களுக்கு இன்னமும் துல்லியமான தகவல்களைச் சொல்வதில்லை. வானிலை மாற்றம் பற்றி நமக்கு 100% துல்லியமாக வேண்டாம், ஒரு 75% துல்லியமாகக் கொடுத்தால்கூடப் போதுமானது. ஏனெனில், பருவநிலை மாறும்போது வானிலையும் மாறும். எனவே, நமக்கு துல்லியமான தகவல்களைக் கொடுக்கும் தொழில்நுட்பம் மிக அவசியம். அமெரிக்கா போன்ற நாடுகளில் துல்லியமான வானிலைத் தகவல்கள் கொடுக்கப்படும்போது உலகுக்கே மென்பொறியாளர்களைக் கொடுக்கும் இந்தியாவால் அது முடியாதா?

காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்றின் வேகம், ஈரப்பதம், மழையின் வேகம் போன்றவற்றையும் வானிலை முன்னறிவிப்புகள் உள்ளடக்க வேண்டும். இப்போது நம்மிடையே தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

வானிலை முன்னறிவிப்பு குறித்த பயிற்சிகளை நாம் மாவட்டவாரியாகக் கொடுத்தே ஆக வேண்டும். ஏனெனில், மொத்தமாக மாநில வானிலை தெரிவித்தால் மாவட்டவாரியாக நம்மை எச்சரிக்க மாவட்டந்தோறும் ஆர்வலர்கள் பலர் தேவை. அதையே வேலைவாய்ப்பாகக்கூட அறிவிக்கலாம். தமிழ்நாடு வெதர்மேன் ஒரு தன்னார்வலராக இது தொடர்பாக முக்கியமான பங்களிப்பு செய்கிறார். வேறு சிலரும் அவ்வப்போது தகவல் கொடுக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்ற இன்னும் பலர் தேவை, அவர்களுக்கு அரசே பயிற்சியளித்து நிர்வகிக்கலாம்.

இன்னொரு புறம், நமது நாட்டின் வானிலை அறிக்கையைத் தெரிந்துகொள்ள நாம் இதர நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து அதனை வாங்க வேண்டிய தேவை இருக்கிறது, நமது வானிலை பற்றி அரசே அறிவிக்கும்போது அதற்காக நாம் தனியே செலவு செய்ய வேண்டியதில்லை.

தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. ஆனால், அந்தத் தொழில்நுட்பங்கள் இன்னமும் கடைக்கோடியில் உள்ள மனிதர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. விவசாயத்தின் மிகப் பெரும் பிரச்சினைகளில் ஒன்று வானிலை அறிவிப்பு. இதை அரசும் தொழில்நுட்ப நிறுவனங்களும் உணர வேண்டும்

- செல்வமுரளி, தொழில்நுட்ப ஆலோசகர்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x