Published : 11 Mar 2016 10:17 AM
Last Updated : 11 Mar 2016 10:17 AM

என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?- தலித், பழங்குடியினர்

பழனி, செருப்புத் தைக்கும் தொழிலாளி, தாந்தோணிமலை, கரூர்.

எனக்கு 5 மகள்கள். இன்னும் 2 மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். செருப்புத் தைத்துக் கிடைக்கிற சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. என்னைப் போன்ற வயதான தொழிலாளர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

எஸ்.தேவதாஸ், சர்ப இருளர் தொழிலாளர் சங்கம், காட்டுமன்னார்கோவில், கடலூர்.

பழங்குடியின மக்களான இருளர்களுக்கு மனையுடன், வீடு கட்டித்தர வேண்டும். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை எங்கள் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளித்து வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். நிரந்தரமான வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முரளி, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி, வேலூர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி வழங்க வேண்டிய சம்பளத்தில் கமிஷனைப் பிடித்துக்கொண்டு கொடுக்கிறார்கள். தட்டிக்கேட்டால் உனக்கு வேலை இல்லை என்று மிரட்டுகிறார்கள்.

டி.அந்தோணிசாமி, துப்புரவுப் பணியாளர், கெங்கைகொண்டான்.

கையுறை, காலணி, சலவைப்படி உள்ளிட்டவை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. அவற்றை மீண்டும் வழங்குவதோடு, எங்களின் பணிச் சூழலைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விஷவாயு தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வேண்டும்.

வேணுகோபால், விவசாயக் கூலி, இச்சிலடிநல்லூர், நாகை மாவட்டம்.

ஆதிதிராவிடர்களுக்கான உதவிகளைத் திரும்பத் திரும்ப ஒரு சாராருக்கு மட்டுமே வழங்காமல், அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அரசின் நிதி முழுமையாக அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு பயன்பாட்டுக்குத் திருப்பக் கூடாது.

குபேந்திரன்,தமிழ்நாடு ஷெட்யூல்டு ட்ரைப் மலையாளிகள் பேரவை. (முன்னாள் தலைவர்).

தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில், மலைவாழ் மக்களுக்கான நிலஉரிமை, சமுதாய உரிமைக்கான வனஉரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிலங்களை இழந்த தமிழக மலைவாழ் மக்கள், வெளிமாநிலங்களுக்கு புரோக்கர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, செம்மரக் கடத்தல் வழக்கில் சிக்கும் கொடுமை தொடர்கிறது. மலைவாழ் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் அவர்கள் இருப்பிடத்தில் வாழ வகை செய்ய வேண்டும்.

எம். மாரியப்பன், மூங்கில் தட்டி பின்னுபவர், பாளையங்கோட்டை.

என்னைப் போன்று குடிசைத் தொழில் செய்து பிழைப்பு நடத்துவோருக்குக் கடனுதவி கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. வங்கிகளில் அலைக்கழிக்கிறார்கள். தொழில் கடனுக்கான நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

வடிவேலு, குடுகுடுப்பைக்காரர், கல்மேடு, மதுரை.

பழங்குடியினருக்குத் ரூ. 2.20 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு நிதி வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், அதனைப் பெற்றுத் தர வேண்டிய மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். நாங்கள் மரத்தடியிலும், விஷப்பூச்சிகள் உலாவும் கண்மாய்களிலும் குடியிருக்கிறோம்.

பெருமாள், செருப்புத் தைக்கும் தொழிலாளி, வேலூர்

அரசாங்க அலுவலகங்களுக்குப் போனால், என்னைப் போன்ற தொழிலாளிகளை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது. அரசு சலுகைகளைப் பெற லஞ்சம் கேட்கக் கூடாது. அதுபோதும் எங்களுக்கு.

ஜி.ராஜேந்திரன், காலணி தைக்கும் தொழிலாளி, தஞ்சாவூர்.

குறைந்த விலையில் ரெடிமேட் செருப்புகள் அதிகம் வந்துவிட்டதால், அன்றாட வருமானத்துக்கே திண்டாட வேண்டியுள்ளது. பெட்டிக்கடை வைத்து தொழில் செய்ய வங்கிக் கடன் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி, ஸ்கூல் பேக், கண்டக்டர் பேக், ஆஸ்பத்திரி மெத்தை தைக்கும் ஆர்டரை நேரடியாக எங்களுக்கு வழங்க வேண்டும். இவற்றைத் தைக்கக் கூட்டுறவு தொழிற்கூடங்களை ஏற்படுத்தி வேலையும் மாத ஊதியமும் வழங்க வேண்டும்.

சமூகத்தின் அடித்தட்டில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் வாழ்க்கையில் மேம்பாடு இல்லாமல், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றம் சாத்தியம் இல்லை. தமிழகத்தின் மக்கள்தொகையில் 20%-க்கும் அதிகமானோர் தலித்துகள் மற்றும் பழங்குடிகள். ஆனால், உடலுழைப்புத் தொழிலாளர்களிலும் விவசாயத் தொழிலாளர்களிலும் துப்புரவுப் பணியாளர்களிலும் பெரும்பாலானவர்கள் இவர்கள்தான். இவர்களுடைய கோரிக்கைகள் என்ன?

ப.செல்வக்குமார், உதவிப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, அரியலூர்.

தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட எளிய மக்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வியாண்டின் தொடக்கத்தில் அரசு அறிக்கை விடுகிறது. ஆனால், கல்வியாண்டு முடிகிறபோது, அனைத்து தனியார் பள்ளிகளிலும் அந்த ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என ஆராய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x