Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

வள்ளியப்பாவின் கொடையும் தவறவிடும் வாய்ப்புகளும்

‘தோசையம்மா தோசை’, ‘அம்மா இங்கே வா வா’, ‘மாம்பழமாம் மாம்பழம்’ – அச்சு இதழ், நூல் தொடங்கி இன்றைய காணொளி வடிவம் வரை, தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு வடிவத்திலும் இடம்பெற்ற, தலைமுறைகளைத் தாண்டிய இதுபோன்ற பாடல்களை எழுதியவர் அழ.வள்ளியப்பா. சிறு வயதுக் குழந்தைகளிடம் மொழியைப் பழக்கப்படுத்தவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கவும் சந்தத்தோடு பாடப்படும் இதுபோன்ற பாடல்கள் பெரும் துணைபுரிகின்றன. மழலையர் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளிகளிலும் இப்படிப் பல பாடல்கள் இன்றைக்கும் பாடப்படுகின்றன.

1930-களில் முன்னோடிப் பதிப்பகமாகவும் இதழ் அலுவலகமாகவும் செயல்பட்டுவந்த வை.கோவிந்தனின் சக்தி காரியாலயத்தில் பணிபுரிந்த பலரும் பிற்காலத்தில் புகழ்பெற்ற இதழாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் உருமாறினார்கள். அந்த மரபில் வந்தவர் அழ.வள்ளியப்பா. சக்தி காரியாலயத்தில் காசாளராகப் பணியிலிருந்த அழ.வள்ளியப்பா, தி.ஜ.ர. மூலம் எழுத்துத் துறையில் கால்பதித்தார். பின்னால், வங்கிப் பணியில் சேர்ந்த பிறகும் சிறார் இலக்கியப் பணியை இடையறாது மேற்கொண்டுவந்தார்.

அவருடைய முதல் பாடல் தொகுப்பு ‘மலரும் உள்ளம்’ 1944-ல் வெளியானது. அதே காலத்தில், புதுக்கோட்டையிலிருந்து வெளியான ‘பாலர் மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய மூன்று சிறார் இதழ்களின் நிழல் ஆசிரியராக வள்ளியப்பா செயல்பட்டார். அந்த இதழ்கள் நின்ற பிறகு, ‘பூஞ்சோலை’ இதழின் கௌரவ ஆசிரியரானார். சிறார் இதழ்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், பல புதிய எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகள் எழுதவும் பெருமளவு வாய்ப்பு வழங்கி ஊக்குவித்தார் வள்ளியப்பா.

வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்திலேயே சிறப்பு அனுமதி பெற்று, ‘தென் மொழிகள் புத்தக அறக்கட்டளை’யில் குழந்தை இலக்கியச் சிறப்பு அலுவலராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டார். வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் 1983-ல் ‘கோகுலம்’ சிறார் மாத இதழின் கௌரவ ஆசிரியராகச் செயல்பட்டார். அந்தக் காலத்தில் ‘கோகுலம் சிறுவர் சங்கம்’ மூலமாக மாணவர்களைப் பெருமளவு வாசிப்பு நோக்கியும் எழுத்து நோக்கியும் வள்ளியப்பா ஈர்த்தார்.

காலம் கடந்த பாடல்கள்

குழந்தைகளால் பெரிதும் விரும்பப்பட்ட அவருடைய பாடல்கள் ‘மலரும் உள்ளம்’ இரண்டு தொகுதிகள், ‘சிரிக்கும் பூக்கள்’ ஆகிய பெயர்களில் வெளியாகிப் புகழ்பெற்றன. ‘பாட்டிலே காந்தி கதை’ என்கிற குழந்தைகளுக்கான காவியம், ‘நேரு தந்த பொம்மை’, ‘சுதந்திரம் பிறந்த கதை’ என்கிற நீண்ட பாடல் ஆகியவை அவருடைய புதுமையான குழந்தைப் பாடல் முயற்சிகள். அன்று தொடங்கி இன்று வரை அவருடைய பாடல்கள் குழந்தைகளால் பாடப்படுவதற்கு முக்கியக் காரணம் பாடுவதற்கேற்ற சந்தம், இனிமை, எளிமையான மொழிநடை, தெளிவு ஆகியவற்றுடன் இருப்பதுதான். குழந்தைகள் பெரிதும் விரும்பும் உயிரினங்கள் எழுப்பும் ஒலி, கருவிகள் எழுப்பும் ஓசைகளைப் பாடல்களில் அவர் சேர்த்திருந்ததால், அவருடைய பாடல்கள் உயிர்ப்புடன் திகழ்கின்றன.

அழ.வள்ளியப்பா காலத்தில், சிறார் இலக்கியம் இன்று வந்தடைந்துள்ள முற்போக்கான புரிதல்களைப் பெற்றிருக்கவில்லை. அதேநேரம் நமது நிலம், மரபு, நாட்டுத் தலைவர்களைக் குறித்துக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்கிற அடிப்படைப் பண்புகள் வலியுறுத்தப்பட்டன. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், மாணவப் பருவத்திலேயே ஒற்றுமை உணர்வை ஓங்கச் செய்வதிலும் அன்றைய சிறார் இலக்கியம் பெரும் பங்காற்றியது. பாடநூல்களுக்கு வெளியே உள்ள உலகத்தை அந்த நூல்கள் சிறாருக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தின.

தொலைநோக்குப் பார்வை

இன்றைய சிறார் இலக்கிய எழுத்தாளர்களிடம் அரிதாக உள்ள ஒரு பண்பு, அழ.வள்ளியப்பாவிடம் இயல்பிலேயே இருந்தது. பல தலைமுறைக் குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்களை இயற்றியுள்ள அவர், தன் முதல் பாடல் தொகுப்பான ‘மலரும் உள்ளம்’ நூலைத் தமிழ்ப் பேராசிரியர் ஐயன் பெருமாளிடம் காட்டித் திருத்தங்களைப் பெற்ற பிறகே வெளியிட்டது பதிவாகியிருக்கிறது. பிற்காலத்தில், உயிரினங்களைப் பற்றி அவர் எழுதிய ‘மிருகங்கள் பேசினால்’ என்னும் நூலை வனவிலங்கு அதிகாரி எம்.ஏ.பாட்சாவிடம் திருத்தத்துக்குக் கொடுத்து வாங்கிய பிறகே பிரசுரித்துள்ளார்.

இப்படிக் கருத்துப் பிழை, மொழிப் பிழை, இலக்கணப் பிழையின்றிப் படைப்புகளை அவர் எழுதியதால், குழந்தைகளால் சிறு வயதிலேயே தமிழை எளிமையாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. இத்துடன், மனிதர்கள் மதிப்பீடுகளுடன் வாழ்வதன் அவசியத்தையும், ஒற்றுமை உணர்வையும் அவருடைய படைப்புகள் வலியுறுத்தின. இன்றைய சிறார் எழுத்தில் இது போன்ற தன்மைகளுடன் படைப்பு முதன்மை பெறாமல், சிறார் இலக்கியத் துறையில் பெயர் பெற்றுவிட வேண்டும் என்கிற நோக்கம் பலரிடமும் தூக்கலாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

சிறார் இலக்கியம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்குத் தெளிவான தொலைநோக்குப் பார்வையை அழ.வள்ளியப்பா வெளிப்படுத்தினார் என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்டலாம். முதலாவது, ‘வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்’ எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, உலக நீதி போன்ற நீதி நூல்களைச் சிறுவர் இலக்கியத்தில் சேர்ப்பது ஏன் தவறு எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த வாதத்தை பெ.தூரன் போன்றோர் வழிமொழிந்து பாராட்டியிருக்கின்றனர்.

அடுத்ததாக, 1951-ல் ‘கல்கண்டு’ இதழில் துப்பாக்கிக் கதைகள் வெளியாகப்போவது தொடர்பான அறிவிப்பை அதன் ஆசிரியர் தமிழ்வாணன் வெளியிட்டிருந்தார். ‘இதுபோல் குழந்தைகளுக்குத் தேவையின்றி வன்முறையை அறிமுகப்படுத்துவது தவறு’ என்று எழுத்து மூலம் அழ.வள்ளியப்பா வலுவாக இதைக் கண்டித்துள்ளார். இவ்வளவுக்கும் அழ.வள்ளியப்பாவுக்குக் ‘குழந்தைக் கவிஞர்’ என்கிற அடைமொழியை முன்பு வழங்கியிருந்தவரே தமிழ்வாணன்தான்.

தொலைந்துபோன அக்கறை

வாழ்ந்த காலம் முழுவதும் சிறார் எழுத்தாளர்களையும் மாணவ எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் உந்துசக்தியாகத் திகழ்ந்த வள்ளியப்பா, சிறார் எழுத்தாளர்கள் கூட்டாகச் செயல்படுவதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். 1950-லேயே குழந்தை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி, சிறார் இலக்கியத்தை வளர்ப்பதற்குப் பல்வேறு முன்னோடி முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகக் குழந்தைப் புத்தகக்காட்சி, குழந்தை நூல் வெளியீட்டு நாள், குழந்தைகள் நாடக விழா, குழந்தை எழுத்தாளர்களுக்கான தனி மாநாடுகள், குழந்தை எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பரிசுகள் - பதக்கங்கள், ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ நூல் போன்றவை குழந்தை எழுத்தாளர் சங்கம் புரிந்த சில சாதனைகள்.

இதுபோல் கடந்த நூற்றாண்டில், சிறார் இலக்கியம் முக்கியமான பல கட்டங்களைக் கடந்துவந்துள்ளது. அன்றைய தமிழ் இலக்கியவாதிகளில் பலர் சிறாருக்கும் அக்கறையுடன் எழுதிவந்தனர். சிறார் இலக்கியம் குறித்த அலட்சியமோ, எள்ளல் தொனியோ அந்தக் கால இலக்கியவாதிகளிடம் காணப்படவில்லை. இன்றைய நவீன இலக்கியவாதிகளில் பலரும் சிறார் இலக்கியத்தை அக்கறையுடன் கணக்கிலெடுத்துக்கொண்டதுபோல் தோன்றவில்லை. சிறார் இலக்கியத்தை ஆக்கபூர்வமாக அணுகுவதும் விமர்சனபூர்வமாக அதை வளர்த்தெடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது கேள்விக்கு உரியதாக இருக்கிறது.

இலக்கிய வாசிப்பென்றாலும் சரி, அச்சு இதழ் வாசிப்பென்றாலும் சரி, முதல்நிலை வாசகர்கள் உருவாக்கப்படவில்லை என்றால், எதிர்காலத்தில் இந்தத் துறைகள் ஆட்டம் கண்டுவிடும். அதற்கான அறிகுறிகள் கடந்த 10 ஆண்டுகளில் வலுவாகவே தெரிகின்றன. ஒரு சமூகத்துக்கு இலக்கியப் படைப்புகளும் அச்சு இதழ்களும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முதல்நிலை வாசகர்களும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அடித்தளம் வலுவாக இருந்தால் மட்டுமே, நாம் நினைக்கும் உயரத்துக்கு கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியும். வாசிப்புக்கான அத்தகைய சில அடித்தளங்களை அழ.வள்ளியப்பா உள்ளிட்டோர் கையளித்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், அந்த அடித்தளங்கள் காலந்தோறும் மேம்படுத்தப்படவும் வளர்த்தெடுக்கப்படவும் வேண்டிய கடமை நம் தலைமுறைக்கு இருக்கிறது.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

நவ. 7 :அழ.வள்ளியப்பா நூற்றாண்டுத் தொடக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x