Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

கிடைக்கப் போகும் பலன்களில் கவனம் செலுத்துங்கள்!

பி.தியாகராஜன்

‘ஐம்பது காசு பலன் கிடைக்க ஒரு ரூபாய் செலவு செய்யும் நிறுவனம் உண்டென்றால், அது அரசாங்கம்தான்’ என்ற ஒரு பழமொழி உண்டு. எல்லாப் பழமொழிகளையும்போல, ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த அளவானது வழக்கமாக மிகைப்படுத்தப்படுகிறது. அரசின் செலவினத்தில் ஒரு பகுதியானது, அது எந்த நோக்கத்துக்கு உருவாக்கப்பட்டதோ அதற்கும், கிடைக்கும் பலனுக்கும் இடையே சிறிது இழப்பு ஏற்படும் என்பதைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இத்தகைய இழப்பானது ஊழல் அல்லது முறைகேட்டால் ஏற்படுவதாகும். இது பரவலாக பெரும்பாலான நாடுகளில் நிகழும் ஒன்று. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

ஒன்றிய, மாநில அரசுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் உள்ள எல்லை வரையறை காரணமாக அவை கொண்டுவரும் திட்டங்கள், கொள்கை முடிவுகள் இலக்கை எட்டாமல் போவது மற்றும் பகுதியளவில் பலன் கிடைப்பது தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் விவாதித்திருக்கிறேன். அரசியல் கட்சிகளின் மாறுபட்ட கொள்கைகள், கூட்டாட்சி காரணமாக சட்டமன்றங்களிலும், அரசியல் பேரணிகளிலும் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட கொள்கை அல்லது இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாக எத்தகைய பலன், தீர்வு கிடைத்துள்ளது என்பதன் மீது மிகக் குறைந்த அளவே கவனம் செலுத்தப்படுகிறது.

ஒன்றிய - மாநில அரசுகள் தாக்கல்செய்யும் வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகளைவிட வேறெங்கிலும் இதைத் தெளிவாகக் காண முடியாது. ஒரு நிதியாண்டில் அரசு செய்த செலவினம் குறித்த இறுதிக் கணக்கு அறிக்கையானது, ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 18 மாதங்கள் அல்லது 24 மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவரும். ஆனாலும், எதிர்வரும் நிதி ஆண்டில் அறிவிக்கப்படும் சலுகைகள் பிரதானமாகக் கவனத்தை ஈர்க்கும். முந்தைய நிதி ஆண்டில் செலவிடப்பட்ட தொகைக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு குறித்த விவரங்கள் குறைந்த அளவில் கவனத்தை ஈர்க்கும். நிதிநிலை அறிக்கை மீது செலுத்தப்படும் கவனத்தில் சிறிய அளவே அதன் பலன் மீது செலுத்தப்படும். இது நிதியாண்டு முடிந்து பல மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவரும்.

இந்தியாவில் காலம் காலமாகப் பழமையான ரொக்கக் கணக்கு முறையை (Cash Accounting) பின்பற்றிவருகிறார்கள். மற்ற நாட்டு நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் திரட்டுக் கணக்கு (Accrual Accounting) முறையைப் பின்பற்றுகின்றன. அதாவது, செய்யப்பட வேண்டிய செலவு, வரவு ஆகியவை அதற்குரிய கணக்கியல் முறையில் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், ரொக்கக் கணக்கு முறையில் செலவுசெய்யும்போதுதான் அல்லது வரவாகப் பெறப்படும்போதுதான் அது பதிவேற்றப்படுகிறது. இந்த முறை மூலம் ஆண்டு இறுதியில் புதுமையான மற்றும் வித்தியாசமான விளைவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

இதன் விளைவாக இறுதிக் கணக்கு என்பதை நாம் இப்போது கணக்கீடு செய்வதைப் போல அது இருக்காது. குறிப்பிட்ட செலவினத்துக்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியானது - பாதி அளவிலான கணக்கு அறிக்கையில் இடம்பெறாது. இந்த விவரம்தான் நிதித் துறைக்கு அளிக்கப்படும். ஆண்டு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையைத் தாக்கல்செய்யும் சிஏஜி ஆண்டுதோறும் இந்த விவரங்களைச் சுட்டிக்காட்டுவார். உதாரணத்துக்கு 2015-16-ம் நிதி ஆண்டில் தேசியப் பேரிடர் மேலாண் குழு அல்லது மாநிலப் பேரிடர் மேலாண் குழுவுக்கு ரூ.1,863 கோடி நிதி மாற்றப்பட்டிருக்கும். ஆனால், இந்த நிதி செலவிடப்பட்டதா அல்லது அது இருப்பில் உள்ளதா என்ற விவரம் நிதித் துறைக்கோ அல்லது சிஏஜி-க்கோ தெரியாது.

அரசின் செயல்பாடுகளில் உள்ள வரம்புகளைத் தெரிந்துகொண்டு உபயோகப்படுத்தப்படாத நிதியைக் கண்டறிந்து, அதையும் சேர்த்து ஆகஸ்ட் 13 திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை உரையில் தெரிவித்தோம். முதலமைச்சர் செயல்படுத்த உள்ள 5 முக்கிய சீர்திருத்தங்களில் மூன்றாவது சீர்திருத்தம் இதுவாகும். ஒன்றிய - மாநில நிதி உறவு குறிப்பாக ஜிஎஸ்டி, தகவல் தொகுப்பு அடிப்படையிலான நிர்வாகம், பொதுச் சொத்து மற்றும் ஆபத்து நிர்வாகம், அதிகரித்துவரும் கணக்குப் பொறுப்பு மற்றும் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பேரவையின் செயல்பாடுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவையாகும்.

கடந்த சில வாரங்களாக நாங்கள் மேற்கொண்ட இத்தகைய செயல்பாடுகளால் மிகப் பெருமளவிலான பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. முதலாவதாக ரூ.2,000 கோடி நிதியானது செலவிடப்படாமல் (ஒதுக்கப்பட்ட துறை அதை அப்படியே வைத்திருந்தது) மாநிலக் கருவூலத்துக்குத் திரும்பியுள்ளது. இந்தத் தொகையானது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பதற்காக மதிப்புக் கூட்டு வரியை முதல்வர் குறைத்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டப் பெரிதும் உதவும். இதனால், அரசுக்கு ரூ.1,100 கோடி வரி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. இதைப் போல இறுதிக் கணக்கீட்டின்போது பல்வேறு பயன்படுத்தப்படாத நிதிகள் அரசுக்குத் திரும்ப வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்போது புதிய நடைமுறையைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி செலவின நிதி மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி (நிதி ஆண்டு இறுதியில்) எதுவும் நிதித் துறைக் கணக்கிலிருந்து விடுபடாத வகையில் கொண்டுவரப்படும். இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பலனைத் தரும் என்பதோடு, இத்தகைய நிதிகள் நெருக்கடியான நேரத்தில் சிறப்பான நிதி ஆதாரமாக இருக்கும். இதில் மற்றொரு முக்கிய அம்சமாகத் தகவல் ஒருங்கிணைப்புத் திட்டம் தேர்தலில் வாக்களித்தபடி பயிர்க் கடன் ரத்துக்கும் நகைக்கடன் ரத்துக்கும் உதவியாக இருக்கும் நடவடிக்கையாகும். இது மிகச் சிறந்த பலனைத் தந்துள்ளது. மாநில அரசின் பல்வேறு துறைகளிலிருந்து குறிப்பாக நிலப் பத்திரப் பதிவு, பொது விநியோக முறை மூலம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. போலியாக ஓய்வூதியம் பெறுவோர், ரேஷன் கார்டு மூலம் இலவச அரிசி பெறுவோர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டன. இதன் மூலம் போலியான பயனாளிகள் தவிர்க்கப்பட்டனர். அதேபோல பயிரிடாத நிலத்தின் பேரில் பயிர்க் கடன் பெற்றவர்கள், நகைக்கடன் பெற்றவர்கள் விவரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்தகையோர் பலன் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசின் நிதிச் செலவு கணிசமாகக் குறைந்தது. அத்துடன் உரிய பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் உதவி சென்றடைந்துள்ளது. இத்தகைய பல நடவடிக்கைகளில் ஒன்றுதான் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டமாகும்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளை மீண்டும் வகுப்பறைகளுக்குத் திரும்பக் கொண்டுவரும் திட்டமாகும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் மாநில அளவிலான வங்கிக் குழுக்களின் உதவியோடு இது செயல்படுத்தப்படுகிறது. மாநிலப் பொருளாதார ஆலோசகர்களான பேராசிரியர் ழீன் தெரசே, எஸ்தர் டுஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், எஸ்.நாராயண் ஆகியோரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மிகப் பெருமளவில் பயன் தருவதாக உள்ளது. எங்களது செயல்பாடுகள் முழுவதும் 5 அடுக்கு அணுகுமுறையிலான சீர்திருத்த நடவடிக்கைகளாகவும் மேம்பாட்டுத் திட்டங்களாகவும் பதவியேற்ற நாள் முதலாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் தகவல்களைச் சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வது.

கிடைத்த பலன்களைப் பொது அரங்கில் வெளியிட்டு மக்கள் மத்தியில் விவாதிக்கும் சூழலை ஏற்படுத்துவது.

விவாதம் மூலம் கிடைத்த தகவல்களையும் நிபுணர்கள் அளித்த கருத்துகளையும் பெறுவது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் கொள்கைகள் வகுத்து அவற்றைச் செயல்படுத்துவது.

எதிர்வினைகளைத் தொடர்ந்து பெறுவது, அதன் மூலம் தேவையான சமயங்களில் தேவையான திருத்தங்களைச் செய்வது.

எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி சொல்வார் - ‘‘நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்.’’ எங்களது தனித்துவமிக்க கொள்கையைச் செயல்படுத்துவது மட்டும்தான் திராவிடக் கட்சியின் அரசியல் இலக்காகும். இதைத்தான் தற்போதைய தலைவரும் வலியுறுத்துவதோடு அதற்கேற்பக் கொள்கையையும் திட்டங்களையும் வகுத்து அதைச் செயல்படுத்தும் முனைப்பில் உள்ளார். இதன் நோக்கமே அனைத்து மக்களும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பலன் பெறுவதாகும்.

- பி.தியாகராஜன், தமிழ்நாட்டின் நிதியமைச்சர்.

தமிழில்: எம்.ரமேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x