Last Updated : 01 Nov, 2021 03:06 AM

 

Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி, உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும், அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சிகளைச் செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுச் சமூகத்தில் மாரடைப்பு பற்றிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சிகள் உதவுவது உண்மைதான். குறிப்பாக, இதயப் பாதுகாப்புக்குத் தினமும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியமே. ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு. நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற மிதமான உடற்பயிற்சிகள் எல்லா வயதினருக்கும் பாதுகாப்பானவை. உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் தசைப் பயிற்சிகள் உள்ளிட்ட சில தீவிரமான பயிற்சிகளால் (HIIT) 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

யாருக்கு, ஏன் வாய்ப்பு அதிகம்?

உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சரியான காரணங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஆனாலும், சில காரணிகள் மாரடைப்பைத் தூண்டலாம் என்று கருதப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே குடும்பப் பின்னணியில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள், இதயத் துடிப்பில் மாறுபாடு உள்ளவர்கள், இதய வீக்கம் இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம். நீரிழிவு, ரத்த மிகு கொலஸ்ட்ரால், மிகு தைராய்டு போன்ற பிரச்சினை உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், பிறவியிலேயே இதய வால்வுகளிலும், இதயத் தமனிகளிலும், இதயத் தசையிலும் பிறழ்வுகள் உள்ளவர்கள் ஆகியோர் தங்கள் வயதுக்கு மீறித் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது மாரடைப்பு தூண்டப்பட வாய்ப்புண்டு.

இவர்களுடைய இதயத் தமனி உட்சுவர்களில் தீவிரமான உடற்பயிற்சிகளால் அழுத்தம் தரப்படும்போது, அந்தச் சுவர்கள் திடீரெனச் சுருங்கிவிடுகின்றன (Coronary artery spasm). இதனால், இதயச் சுவர்களுக்கு ரத்தம் செல்வது குறைந்துவிடுகிறது. அடுத்ததாக, ‘கேட்டகாலமின்’ எனும் ஹார்மோன்கள் இந்தப் பயிற்சிகளின்போது மிக அதிகமாகச் சுரக்கின்றன. ரத்தத்தில் தனித்தனியாகச் சுற்ற வேண்டிய தட்டணுக்களை இவை திராட்சைக் கொத்துபோல் இணைத்துவிடுகின்றன. தண்ணீர்க் குழாய்க்குள் பாசி அடைத்துக்கொள்வதுபோல் இந்தக் கொத்துகள் இதயத் தமனிகளை அடைத்துவிடுகின்றன. மற்றொரு முக்கியக் காரணம், தீவிரமான பயிற்சிகளின்போது, இதயச் சுவர்களுக்குத் தேவையான ரத்தம் கடுமையாக அதிகரிக்கும். அதை ஈடுகட்ட இதயத் துடிப்பும் அதிகரிக்கும். ஏற்கெனவே இதயத் துடிப்பில் மாறுபாடு உள்ளவர்களுக்கும் இதய மின்னோட்டப் பகுதியில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றவர்களைவிட இதயத் துடிப்பு அதிகரிப்பதால், உடலில் உருவாகியிருக்கும் ரத்த உறைவுக் கட்டிகள் இடம்பெயர்ந்து, இதயத் தமனிகளுக்கு வந்து அடைத்துக்கொள்கின்றன. இப்படியான காரணிகளால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

தீவிரமான உடற்பயிற்சிகள், பந்தய விளையாட்டுகள், பளு தூக்கும் பயிற்சிகள், ஓட்டப் பந்தயங்கள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் முன், தங்களுடைய உடல் அவற்றுக்குத் தகுதியானதா என்பதை ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, ட்ரட்மில் போன்ற இதயத்துக்கான பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்குப் பிறகு, வருடத்துக்கு இரண்டு முறை இந்தப் பரிசோதனைகளை மறுபடியும் மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். ஆனால், உடல்தகுதி சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்கிறவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடல் தகுதியின் மேல் உள்ள மிகை நம்பிக்கையால் இம்மாதிரியான பரிசோதனைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் மேற்கொள்வதில்லை.

பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கும்போதும் மருத்துவ ஆலோசனை அவசியம். அவரவர் வயது, உடல் தன்மையின் அடிப்படையில் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். ஆனால் நடைமுறையில், ஏற்கெனவே தசைப் பயிற்சிகளை மேற்கொள்கிறவர்களைப் பார்த்தும் – முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள் - அவர்களின் வழிகாட்டுதல்களிலும்தான் பலரும் பயிற்சிகளைப் பின்பற்றுகின்றனர். இணையவழியிலும் பயிற்சிகளைக் கற்கின்றனர். இந்த முறைமைகள் தவறானவை.

இப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஒருவர் ஓய்வாக உள்ளபோது அவரது இதயம் நிமிடத்துக்கு 60-லிருந்து 100 முறை வரைத் துடிக்க வேண்டும். இதுபோல், உடற்பயிற்சிகளின்போது அவருக்கு அதிகரிக்க வேண்டிய இதயத் துடிப்பின் எண்ணிக்கைக்கும் ஓர் அளவு உண்டு. அதாவது, 220-லிருந்து அவரவர் வயதைக் கழித்தால் கிடைக்கும் விடைதான் அந்த அளவு. உதாரணத்துக்கு 30 வயதுக்காரருக்கு உடற்பயிற்சியின்போது 190 முறைதான் (220 - 30 = 190) மிக அதிகபட்சமாக இதயம் துடிக்க வேண்டும். பயிற்சி செய்பவர் புகைபிடிப்பவராக இருந்தாலோ வேறு நலக்குறைவு இருந்தாலோ இந்த எண்ணிக்கையில் பாதி அளவு வரைதான் இதயம் துடிக்க வேண்டும். இதற்கும் அதிகமென்றால், இதயத்துக்கு ஆபத்து வரக்கூடும். வழக்கத்தில், சாதாரண உடற்பயிற்சிகளின்போது, இந்த அதிகபட்ச எண்ணிக்கையில் 60 - 80% வரைதான் துடிப்பு அதிகரிக்கும்; மிதமான உடற்பயிற்சிகளின்போது 70–85% அதிகரிக்கும்; தீவிரமான உடற்பயிற்சிகளின்போது 80–95% அதிகரிக்கும். கடைசியாகச் சொன்னதில்தான் ஆபத்து காத்திருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. பொதுவாக, வாரத்தில் 5 மணி நேரம் மிதமான உடற்பயிற்சிகள் போதுமானவை. நீண்டநேரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடுமையான பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

அலட்சியம் வேண்டாம்!

உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் கீழ்க்காணும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. 1.பயிற்சிகளைச் செய்யும்போது வாந்தி, கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்படுவது. 2.நடுநெஞ்சில் ஏற்படும் வலி, நெஞ்செரிச்சல். 3.மூச்சுவிடுவதில் சிரமம். 4.நெஞ்சு படபடப்பு. 5.வழக்கத்தைவிட அதிக வியர்வை. 6.பகலில் களைப்பு, செரிமானமின்மை போன்ற இனம் புரியாத நலக் குறைவு. 7.இரவில் உறக்கமின்மை. இவற்றில் ஒன்றோ பலவோ காணப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதயத்துக்கு ஆபத்து இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே, மறுபடியும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து, உடற்பயிற்சிக் கூடங்களில் தகுதியான பயிற்சியாளர்களின் கீழ்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சிகளின்போது பயனாளிகளுக்கு நெஞ்சுவலி அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக ‘இதய சுவாச மறுஉயிர்ப்புச் சிகிச்சை’ (சி.பி.ஆர்.) வழங்கப்பட வேண்டும். அதற்கான பயிற்சிச் சான்றிதழை அந்தப் பயிற்சியாளர் பெற்றிருக்க வேண்டும். மேலும், AED (Automated Electric Defibrillator) எனும் கருவி அங்கு இருக்க வேண்டும். இந்த இரண்டும் பயனாளிக்குத் திடீர் மாரடைப்பால் ஏற்படும் உயிராபத்தைத் தவிர்க்க உதவும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x