Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

சத்யஜித் ரேயின் நூற்றாண்டு

ஆண்ட்ரூ ராபின்சன்

ஃப்ரண்ட்லைன்: தி வேர்ல்டு ஆஃப் ரே - எ கமெமரேட்டிவ் இஷ்யூ
தொகுப்பு: 'ஃப்ரண்ட்லைன்' ஆசிரியர் ஆர். விஜயசங்கர்
‘தி இந்து’ வெளியீடு
விலை: ரூ.125

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கலைஞர்களில் ஒருவர் இயக்குநர் சத்யஜித் ரே. ‘ஃப்ரண்ட்லைன்’ இதழ் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியிட்டிருக்கும் சிறப்பிதழில் எழுதப்பட்ட புகழஞ்சலிக் கட்டுரையின் சுருக்கம் இது.

சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘சத்யஜித் ரே: தி இன்னர் ஐ’-க்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, 1987-ல் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் ஜான் ஹஸ்டனிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. 1954-ல், தனது திரைப்படத்துக்காக லொகேஷன் தேடி கல்கத்தா வந்திருந்தபோது, சத்யஜித் ரேயின் முதல் திரைப்படமான ‘பதேர் பாஞ்சாலி’யின் எடிட் செய்யப்படாத, இசை, உரையாடல் இல்லாத கரட்டு வடிவத்தின் ஒரு பகுதியை - அப்புவும் துர்காவும் முதல் முறையாகப் புகைவண்டியைப் பார்க்கும் காட்சி அதில் இருந்திருக்கிறது - பார்த்திருக்கிறார். “அந்தக் காட்சி ஒன்றே, ஒரு மகத்தான திரைப்படக் கர்த்தாவின் படைப்பு அது என்பதை எனக்குக் காட்டிவிட்டது. முதல் சந்திப்பிலேயே அவரை நான் மிகவும் விரும்பத் தொடங்கினேன். அந்தப் படத்தை முழுமையாகப் பார்த்தபோது அவர் செய்ததும் சொன்னதெல்லாம் எனது முந்தைய உணர்வை சரிதான் என்று நிரூபித்தன’’ என்று ஹஸ்டன் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகத்துக்கு அந்தத் திரைப்படத்தைப் பரிந்துரைத்தார் அவர். 1955-ல் அங்குதான் ‘பதேர் பாஞ்சாலி’யின் உலகத் திரையிடல் நிகழ்ந்தது. அதன் வழியாகத்தான் ரேயின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது.

சத்யஜித் ரேயின் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது நூலுக்கான மூன்றாவது பதிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்காவின் முன்னணி இயக்குநரான மார்ட்டின் ஸ்கார்ஸேஸீயிடமிருந்து இன்னொரு அற்புதமான செய்தியைப் பெற்றேன். அவர் சினிமா இயக்குநராவதற்கு முன்பே 1960-ல் தொடங்கி சத்யஜித் ரேயின் படைப்புகளைப் பார்த்துவருபவர். “மேற்கத்தியத் திரைப்படங்களில் வரலாற்றுரீதியாகப் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்க்கைகளைப் பார்ப்பதற்கான கண்கள், ‘பதேர் பாஞ்சாலி’யை முதல் முறை பார்த்தபோதுதான் திறந்தன. அது ஒன்றே அர்த்தப்பாடு. அப்படியான தாக்கம் ராயின் அபரிமிதமான கலை நிபுணத்துவமின்றிச் சாத்தியமாகியிருக்காது. ‘ஜல்சாகர்’ படத்தையும் அல்லது ‘சாருலதா’ படத்தையும் அவரது பிற படங்களையும், திரும்பத் திரும்பப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், இன்னொரு விதமான மதிப்பு உருவாவதையும், உணர்வின் இன்னொரு பரிமாணத்தையும் நான் பார்க்கிறேன். காலத்தில் அவரது படைப்புகள் மேலும் மேலும் மதிப்பு மிக்க தன்மையைப் பெற்றுவருகின்றன. சத்யஜித் ரேயின் திரைப்படங்கள் சினிமாவின் மெய்யான புதையல்கள், அத்துடன் திரைப்படத்தில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியவை அவை.”

நடிகரும் திரைப்பட இயக்குநருமான ரிச்சர்ட் அட்டன்பரோ, ரேயின் ஆராதகர்களில் ஒருவர். ரேயின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1991-ல் ரேயைப் பாராட்டும் விரிவான குறிப்பொன்றை எனக்கு அனுப்பியிருந்தார். “ஒவ்வொரு தலைமுறையிலும் தனித்துவமான ஒரு சினிமா மேதை எழுகிறார். அவர் தனது சமகாலத்தவர்களைவிட உயர்ந்திருப்பது மட்டுமல்லாமல், தனது படைப்புகளை எல்லா காலத்துக்கும் உந்துதல் அளிக்கும்படியாகத் தீர்மானகரமான முறையில் சினிமா ஊடகத்தை மேம்படுத்தவும் செய்கிறார் அவர். அப்படியான அரிதான ஒரு ஆளுமை சத்யஜித் ரே. தற்போது வரையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் சினிமா என்ற ஊடகம் சார்ந்த மிக நேர்த்தியான படைப்புகளில் ஒன்றென ‘பதேர் பாஞ்சாலி’யை மிக நீண்டகாலமாகப் பாராட்டிவந்திருக்கிறேன். 1977-ல் அவர் என்னைத் தனது ‘செஸ் ப்ளேயர்ஸ்’ படத்தில் நடிக்கச் சொன்னபோது, எந்தத் தயக்கமும் இன்றி அந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டேன்.”

அட்டன்பரோ தனது அனுபவத்தைத் தொடர்கிறார்.

“மாணிக்தா என்று அழைக்கப்படும் ரே என்னை விமான நிலையத்தில் சந்தித்தார். படப்பிடிப்புக்கான அத்தனை உடைகளையும் நான் பெட்டியில் வைத்திருந்தேன். நான் வந்த நாளில் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு அரங்குகளில் குளிர்சாதன வசதி கிடையாது. நான் என் வாழ்க்கையில் அவ்வளவு உஷ்ணத்தில் இருந்ததே இல்லை. ரேயோ கட்டற்ற ஆற்றலுடன், படத்தயாரிப்பின் ஒவ்வொரு முனையிலும் அவரது முத்திரையை வைத்தபடி இருந்தார். என்னைப் போன்ற தயாரிப்பாளர்/ இயக்குநருக்குப் பலவிதமான அனுபவங்களைக் கொண்ட ரேயின் படத் தயாரிப்புக் குழு புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ரேயின் மேதைமை, தனக்கான சுயமுத்திரையோடு, சாத்தியமான எல்லாத் தொழில்நுட்பத்தையும் தழுவிக்கொண்டது. அவர் திரைக்கதையை எழுதினார். அரங்கை வடிவமைத்து ஒப்பனை செய்தார். பின்னர் படத்தைத் தொகுக்கவும் இசைக்கோர்ப்பிலும் ஈடுபட்டார். அதேபோல, ஒளிப்பதிவுக் கருவியை இயக்குவதோடு நடிகர்களை இயக்கவும் செய்தார். இப்படித்தான் அவரது அந்தப் படமும் சரி, பிற எல்லாப் படங்களும் சரி, சத்யஜித் ரேயின் முழுமையான படைப்பாக மாற்றம் கொள்கிறது. அவருக்காக வேலை செய்தது அபரிமிதமான மகிழ்ச்சியாகவும் கல்வியாகவும் இருந்தது.”

‘மேதை’ என்ற சொல் மூலம் எதை நாம் அர்த்தப்படுத்துகிறோம்? ஹோமர், லியனார்தோ டா வின்சி, ஷேக்ஸ்பியர், மோசார்ட், தாகூர், லியோ டால்ஸ்டாய், கலீலேயோ, நியூட்டன், டார்வின், மேரி க்யூரி, ஐன்ஸ்டைன், ராமானுஜன். கலைகளிலும் அறிவியல் துறைகளிலும் மேதைகள் என்று சொல்லப்படும் உலகம் அறிந்த இந்த மனிதர்களிடம் உள்ள பொதுமை என்ன? இந்தப் பன்னிரண்டு பேரும், மனிதகுலம் உலகை ஏற்கெனவே பார்த்த பார்வையை நிரந்தரமாக மாற்றியவர்கள் என்று வேண்டுமானால் சொல்லிப் பார்க்கலாம். ஆனால், துல்லியமாகச் சொல்லக் கோரினால், மேதைமை என்பதை வரையறுப்பது மிகவும் கடினமானது.

டா வின்சியின் ஓவியங்கள், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், மோசார்ட்டின் இசை அவர்களது சொந்தப் பிரதேசங்களான இத்தாலி, இங்கிலாந்து, ஆஸ்திரியாவைத் தாண்டியும் பிற மொழிகள், கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களை நெகிழ வைக்கின்றன. டார்வினின் கருத்துகளும், ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளும், ராமானுஜனின் தேற்றங்களும் உயிரியலர்கள், இயற்பியலர்கள், கணிதவியலர்களிடம் தாக்கத்தைச் செலுத்திவருகின்றன. மோஸ்தர், புகழ் மற்றும் பிரபலத்தைக் கடந்த படைப்பின் தரத்துக்குத்தான் மேதை என்ற பெயரைக் கொடுக்கிறோம். படைப்பு உருவான காலம், படைப்பு உருவான இடம் இரண்டையும் மேதை அழித்துவிடுகிறார்.

சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக ஆய்வுப் பணிகளுக்காக நான் செலவிட்ட ஏழு ஆண்டுகளில், ராய் தனது எழுபது ஆண்டுகளில் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் மனத்தால் அவரைப் பின்தொடர்ந்தவன் என்பதால் சொல்கிறேன்... அந்தப் பயணத்தில், நோபல் பரிசு பெற்றவர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் மற்றும் படைப்பாளிகள் ரேயின் திரைப்படங்களைப் பாராட்டியதைப் பார்த்துள்ளேன். அட்டன்பரோ, நைபால், ஹென்றி கார்த்தியே பிரஸோன், ஆர்தர் சி.கிளார்க், அகிரா குரோசவா, ஆர்.கே.நாராயணன், அமர்த்தியா சென் போன்றவர்கள். அகிரா குரோசவா என்னிடம் பேசும்போது, “ரே அற்புதமான, மரியாதைக்குரிய மனிதர். திரைப்படத் துறையின் ராட்சச ஆளுமை அவர்’’ என்று கூறினார்.

எனக்கு நேரடியாகத் தெரியவந்த ஒரேயொரு மேதையாக ரே மட்டுமே இருக்கிறார். மெய்யான தனித்துவம், பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையான சத்யஜித் ரே, வங்கத்தின் ஆபரணம் மட்டும் அல்ல. சுதந்திர இந்தியாவின் கோஹினூர் வைரம் அவர். அத்துடன் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கலைஞர்களில் ஒருவரும்கூட. ரேயின் கடைசிப் படத்துக்கு முந்தைய திரைப்படமான ‘சாக ப்ரசகா’வைத் தயாரிப்பதற்கு உதவிசெய்த பிரெஞ்சு நடிகர் ஜெராத் தெபார்தியூ, ரேயின் திரைப்படங்களை மோசார்ட்டின் இசையோடு ஒப்பிட்டிருக்கிறார். தனது வளரிளம் பருவத்து நாட்களிலிருந்தே இசையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்த ரே மோசார்ட்டின் தாக்கத்தை இறுதிநாள் வரை கொண்டிருந்தவர். சாருலதா திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் சேர்ந்து நிகழ்த்திய ஒத்திசைவான நடிப்பு மோசார்ட்டின் ஒபராக்களின் தாக்கத்திலிருந்து உருவானதை வானொலி நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார். சாப்ளினின் ‘தி கோல்ட் ரஷ்’ திரைப்படத்தை மோசார்ட்டின் ‘தி மேஜிக் ப்ளூட்’ ஒபராவோடு ரே ஒப்பிட்டிருக்கிறார். தெள்ளிய எளிமை, தூய்மையான பாணி, அசாத்தியமான செய்நேர்த்தி என்று அதைக் குறிப்பிடுகிறார். ரேயின் சிறந்த திரைப்படங்களிலும் இந்தத் தன்மைகள் இருக்கும். மோசார்ட்டுக்கு அடுத்த நூற்றாண்டில் பிறந்த சத்யஜித் ரேயை அவருடன் ஒப்பிடுவதே சரியான ஒப்பீடாக இருக்கும். அவரிடமும் அவர் படைப்புகளிலும் வங்கப் பண்புகள் முழுமையாக இருந்தாலும் சினிமாவின் மோசார்ட் அவர்.

- தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

*************

சத்யஜித் ரேயைப் பற்றி ஆளுமைகள்

அடூர் கோபாலகிருஷ்ணன்

‘பதேர் பாஞ்சாலி’ இந்திய சினிமாவின் இலக்கணத்தை மாற்றி எழுதியது… பார்வையாளர்களைத் திரையரங்கத்துக்கு ஈர்ப்பதற்காக அவர் எந்த சமரசங்களையும் செய்துகொள்ளவில்லை. உண்மைத்தன்மையும் கலைத்தன்மையும் ரேயின் ஒவ்வொரு படத்தின் முத்திரையாக இருந்தன.

ஷர்மிளா தாகூர்

ரே தனது நாயகிகளுக்கு ஆண்களை வெறித்துப் பார்க்கும் சுதந்திரத்தை வழங்கினார். ஆணின் வேட்கை காட்சியாகவும், பெண்ணுடையது புலன்தன்மையிலும் காட்டப்படும் பழைய வழக்கத்தை அவர் ஒழித்தார். அவர்கள் தங்களது உணர்வுரீதியான, பாலியல்ரீதியான, அறிவுரீதியான ஏக்கங்களை வெளிப்படுத்துவதில் தனித்துவமானவர்கள்.

அபர்ணா சென்

ரே அவரைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொண்டவராகவும் அந்த உலகத்தால் உண்மையாகவே தாக்கம் பெற்றவராகவும் இருந்தார். வங்க மறுமலர்ச்சியின் கடைசி மனிதர் என்று அவரைச் சொல்கின்றனர். அது சரிதான் என்பதை உணர்கிறேன்.

ஷியாம் பெனகல்

நான் நீச்சல் போட்டிக்குப் பங்கேற்பதற்காக கல்கத்தாவுக்குப் போனேன். ஆனால், திரும்பத் திரும்ப டஜன் தடவை பதேர் பாஞ்சாலியைப் பார்ப்பதாக அந்தப் பயணம் அமைந்தது. ஒவ்வொரு நாளும் முதல் காட்சியையும் கடைசி காட்சியையும் பார்த்தேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x