Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

ஷமி தன் தேசப் பற்றை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை என்கிற வரலாறு முடிவுக்கு வந்தது. அக்டோபர் 24 அன்று துபாயில் நடந்த 20 ஓவர் 2021 டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இந்திய அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் 13 பந்துகள் மீதம் இருக்கையிலேயே 152 ரன்களை அடித்து வெற்றிவாகை சூடியது. பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, மட்டையாளர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம் உள்ளிட்டோர் தன்னம்பிக்கையுடன் விளையாடித் தங்கள் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும்போலவே இந்தப் போட்டியிலும் மைதானத்தின் தன்மை, டாஸ் முடிவு, வீரர்களின் செயல்பாடு, அணித் தேர்வு ஆகியவையே வெற்றி அல்லது தோல்விக்குக் காரணமாக அமைந்தன. ஆனால், கிரிக்கெட்டை அரசியலுடனும் மதத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்கிறவர்களுக்கு இந்தக் கள உண்மைகள் எதுவும் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.

பொதுவாக, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்கள் பலரும் அதை ஒரு போரைப் போலக் கருதுவார்கள். இன்றைய சமூக ஊடகப் பெருக்கம் இந்தத் தீவிர மனநிலையை இன்னும் பூதாகரமாக்கியிருக்கிறது. கிரிக்கெட் போட்டியை வெறும் விளையாட்டாகக் கருத வேண்டும்; விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்னும் முதிர்ச்சியான அணுகுமுறை பெரும்பாலான தேசிய ஊடகங்களிடமும் வெளிப்படுவதில்லை. அதோடு, பயங்கரவாதத் தாக்குதல்கள், எண்ணற்ற ராணுவ அத்துமீறல்கள் ஆகியவற்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு மிக மோசமான நிலையை அடைந்திருப்பது கிரிக்கெட் உலகிலும் எதிரொலிக்கிறது. பிசிசிஐ-யினால் நடத்தப்படும் ஐபிஎல்லில் எந்த அணியிலும் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் அனைத்து அணிகளும் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துக்கொள்கின்றன. இந்தப் போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டும் என்று கங்கைக் கரையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். இவை எல்லாம் இணைந்து களத்தில் விளையாடும் வீரர்களின் அழுத்தத்தைப் பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த ஒரே ஒரு போட்டியில் தோற்றதற்காக கோலியும் மற்ற வீரர்களும் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தந்துவிட்டார்கள், பிரதமர் மோடியை அவமதித்துவிட்டார்கள் என்றெல்லாம் பலர் வசைபாடுகிறார்கள். மத அடையாளத்தை வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் பிரிவினருக்கு இந்தப் போட்டியில் இந்தியாவின் முதன்மைப் பந்துவீச்சாளரான முகமது ஷமியின் இஸ்லாமிய அடையாளம் அவர்களின் மதவெறியை வெளிப்படுத்தத் தோதான வாய்ப்பாகிவிட்டது. ஷமி இந்திய அணியில் இருந்தபடியே பாகிஸ்தானுக்காக விளையாடியதாக அவரை வசைபாடும் பதிவுகளும் மீம்களும் ட்விட்டரில் ட்ரெண்டாகின. பொது விஷயங்களில், குறிப்பாக சிறுபான்மையினர் மீதான மதரீதியான தாக்குதல்களின்போதெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், இர்ஃபான் பதான் ஆகியோர் ஷமி எப்போதும் தங்களில் ஒருவர் என்று கூறியிருப்பதோடு, முந்தைய பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முதன்மையாகப் பங்களித்ததை நினைவுகூர்ந்திருந்தனர். ஷமியின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதே நேரம், கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி வெற்றிகொள்ளும்போது பெருமிதத்தை வெளிப்படுத்தும் ஆளும் பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளரான ஷமி மீதான மோசமான தாக்குதலுக்கு எதிராக இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம்வரை வாய் திறக்கவில்லை.

ஆட்டத்தின் 18-வது ஓவரை வீசிய முகமது ஷமி, 17 ரன்களைக் கொடுத்துவிட்டதால் அந்த ஓவரிலேயே பாகிஸ்தான் வென்றுவிட்டது. இது ஒன்றும் கிரிக்கெட்டில் நடக்கவே நடக்காத விஷயம் அல்ல. இறுதி ஓவர்களில் பந்து பழையதாகியிருக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிதாகச் சோபிக்க முடியாது. அதுவும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வந்த மட்டையாளர்கள் அந்தச் சூழலில் வரும் பந்துகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் இலகுவாக எதிர்கொள்வார்கள். மேலும், ஷமி அந்த ஓவரில் அவ்வளவு ரன்களைக் கொடுக்கவில்லை என்றாலும் போட்டியை பாகிஸ்தான் மிக எளிதாக வென்றிருக்கும். ஏனென்றால், அடுத்து வீசப்பட இருந்த ஓவர்களில் அடிக்கப்பட வேண்டிய ரன்கள் பந்துகளைவிடக் குறைவாகவே இருந்தன. பாகிஸ்தானின் கையில் பத்து விக்கெட்டுகளும் இருந்தன. ரன்னே அடிக்காத ரோஹித் சர்மாவும் மட்டைவீச்சிலும் பந்துவீச்சிலும் மோசமாகச் செயல்பட்ட மற்ற வீரர்களும் அவர்களின் மோசமான ஆட்டத்துக்காக மட்டுமே விமர்சிக்கப்படுகின்றனர். ஆனால், முகமது ஷமியை மட்டும் அவர் பின்பற்றும் மதத்தின் காரணமாகத் தாய்நாட்டின் மீதான அவருடைய விசுவாசத்தை ஒரு தரப்பினர் கேள்விக்கு உட்படுத்துவதும் அதை எதிர்க்கும் தரப்பினர்கூடத் தரவுகளின் மூலம் அவருடைய விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருப்பதுமான சூழல் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வெட்கமடையச் செய்துள்ளது. உண்மையில், முகமது ஷமி கிரிக்கெட்டை ஒழுங்காக விளையாடினால் போதும். அவர் தன்னுடைய தேசப்பற்றை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதில்லை.

மறுபுறம் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் அரசியலையும் மதத்தையும் கலப்பவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தரப்பினரிடமிருந்து சமூக ஊடகங்களில் சில எல்லை மீறல்களைக் காண முடிந்தது. பாகிஸ்தான் அணியின் தலைவரும் அவ்வணி இந்தியாவை வென்றதற்குத் தன் அபாரமான மட்டைவீச்சின் மூலம் பங்களித்தவருமான பாபர் ஆஸமின் பெயரை முகலாயப் பேரரசர் பாபருடன் ஒப்புமைப்படுத்தி ‘பாபர் மீண்டுமொருமுறை இந்தியாவைக் கைப்பற்றினார்’ (Babar Conquers India again) என்னும் மீம்களையும் பதிவுகளையும் காண முடிந்தது. பாபர் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது மன்னராட்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அப்போது மன்னர்கள் அந்நிய நாடுகளின் மீது படையெடுப்பதும் போர்களில் வென்று ஆட்சியமைப்பதும் சாதாரண நிகழ்வுகளாக இருந்தன. ஆனால், இது ஜனநாயக யுகம். இன்றைக்கு ஒரு கிரிக்கெட் போட்டியின் வெற்றியை மன்னர்களின் நாடு பிடிக்கும் மனநிலையைச் சுட்டும் ‘கைப்பற்றுதல்’ என்னும் சொல்லைக் கொண்டு வர்ணிப்பதும் அதை விதந்தோதுவதும் முற்றிலும் நிராகரிக்கத்தக்க மன வெளிப்பாடுகள்.

விளையாட்டின் முக்கிய நோக்கமே அது எல்லோரையும் இணைப்பதே. ஆனால், அதுவே பிரிக்கும் சக்தியாகச் சில நேரங்களில் ஆகிவிடுவது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், முன்னுதாரணமாகச் சில நிகழ்வுகளும் இருக்கின்றன. சென்னையில் இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தபோது சென்னை ரசிகர்கள் கைதட்டிப் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டார்கள். 1999-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றபோதும் சென்னை ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாகிஸ்தான் வீரர்களையே நெகிழ்ச்சி அடையச் செய்தனர். இதுதான் ‘விளையாட்டின் நோக்கம்’ (spirit of the game). வெற்றிபெற்றவரை எந்த மனமாச்சரியமும் இல்லாமல் பாராட்டுவதும் தோல்வியடைந்தவரைத் தூற்றாமல் ஆறுதல் சொல்வதும்தான் முதிர்ச்சியான மனநிலை. அந்த மனநிலையைக் கொண்ட சென்னை ரசிகர்கள் ஏனைய இந்திய ரசிகர்களுக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். தற்போதைய டி-20 போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களைப் பாராட்டிய விதத்தில் இந்திய அணித் தலைவர் கோலி, வெறுப்புப் பிரச்சாரகர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்தியிருக்கிறார். ‘நல்லுறவுதான் விளையாட்டின் உயரிய நோக்கம்’ என்பதுதான் அது.

மட்டைவீச்சு, பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால் வலுநிறைந்த இந்திய அணியை பாகிஸ்தான் வென்றுவிட்டது. விராட் கோலி, ரிஷப் பந்த் இருவரைத் தவிர முதன்மை மட்டையாளர்கள் தடுமாறியது, பந்துவீச்சாளர்கள் யாரும் ஒரு விக்கெட்டைக்கூட எடுக்காமல் இருந்தது ஆகியவற்றோடு அணித் தேர்வின் தவறுகளும் இந்தியாவின் தோல்விக்குப் பங்களித்திருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். காயமடைந்த ஹார்திக் பாண்டியாவைக் களமிறக்கியது. பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வினுக்கு வாய்ப்பளிக்காதது, மூன்று வேகவீச்சாளர்களுடன் களமிறங்கியது உள்ளிட்ட முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி தன் தவறுகளைச் சரிசெய்துகொண்டு வெல்லும் என்ற நம்பிக்கையைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். அதற்கான திறமை இந்திய அணியிடம் இருக்கிறது.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x