Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

பொறியியல் படிப்புகளால் வேலைவாய்ப்புக்கு ஏன் உறுதியளிக்க முடியவில்லை?

வழக்கம்போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை. 56,801 இடங்கள் காலியாக உள்ளன. 2016-17-ல் 1,85,000 ஆக இருந்த மொத்த இடங்கள், நடப்புக் கல்வியாண்டில் 1,51,870 ஆகக் குறைந்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரியின் எண்ணிக்கையும் 525-லிருந்து 440 ஆகக் குறைந்துள்ளது. தொழிற்கல்வியில் முதன்மை இடத்தில் இருந்த பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலைக்கு, அவற்றால் வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்க முடியாதது ஒரு முக்கியமான காரணம்.

மத்திய அரசின் மனித வளத் துறை வெளியிட்ட உயர் கல்வி குறித்த அனைத்திந்திய அறிக்கை 2019-ல், நாட்டிலுள்ள பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் மொத்தம் 38.52 லட்சம் மாணவர்கள் சேர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பு தொடர்பான கணக்கெடுப்புகளை நடத்திவரும் ‘ஆஸ்பைரிங் மைன்ட்ஸ்’ நிறுவனம் 2019-ல் வெளியிட்ட அறிக்கை, 80% பொறியாளர்கள் வேலைவாய்ப்பில்லாத நிலையில் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி), தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) தவிர்த்து, மிகச் சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் தொழில் நிறுவனங்களுடன் பேசித் தங்களது வளாகத்திலேயே வேலைவாய்ப்பை உறுதிசெய்ய முயற்சிகளை எடுத்தாலும், அதனால் பயன்பெறும் மாணவர்களின் விகிதாச்சாரம் முழுமையானது அல்ல.

மொத்தத்தில் பொறியியல் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், படிப்பை முடித்துவிட்டு கிடைக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டிய நெருக்கடியை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். நிலையான வேலை என்ற காரணத்துக்காக அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்குப் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இளநிலைப் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட அரசுப் பணிகளுக்குப் பெருமளவில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலையைப் பார்க்க முடிகிறது. பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பில் நிலவும் சிக்கல் கலை, அறிவியல் மாணவர்களின் வேலைவாய்ப்பையும் பாதிக்கும் சூழல் உருவாகிறது.

பொறியியல் படிக்கும் மாணவர்களில் கணிசமானவர்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டுதான் பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இனி வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பொறியியல் கல்வியின் தரத்தைக் குறித்து விவாதிக்கும்போது, தொழிற்சாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான உறவில் நிலவும் விரிசல் குறித்தும் பேசப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தொழில் வளாகங்களின் தொழிற்திறன் கொண்ட பணியாளர் தேவையை அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்து நிரப்புவதற்கான கொள்கைகளை வகுப்பது குறித்தும் யோசிக்கலாம். அப்போதும்கூட, பணியாளர் தேவை நிலையானதாக இருக்க பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கும். உழைப்புச் சந்தையின் உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவைகளை அவ்வப்போது மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை இடங்களை நிர்ணயிப்பதே பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x