Published : 26 Oct 2021 03:06 am

Updated : 26 Oct 2021 05:26 am

 

Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 05:26 AM

மறுகுடியமர்வு அறிக்கை – மக்களின் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்துமா?

resettlement-report

தமிழ்நாடு அரசின் ‘மறுகுடியமர்வு - மறுவாழ்வுக் கொள்கை வரைவு அறிக்கை’ சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகி, அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர், தமிழ் அறிக்கை இணையத்தில் பதிவேற்றப்பட்டது. கொடுத்த வாக்குறுதிப்படி நீர்நிலைகள் உள்ளிட்ட அரசின் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடிசையமைத்து வாழ்வோரை மறுகுடியமர்த்தும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வரைவு அறிக்கையாக அரசு வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது.

‘தமிழ்நாடு 2-வது சாலை வசதித் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கும் நகர ஏழைகளுக்கான பேரிடரைத் தாங்கும் நீடித்த வீட்டுவசதித் திட்டம்’ போன்றவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள மறுகுடியமர்வு நடைமுறைகள், நீதிமன்றங்களின் அவ்வப்போதைய வழிகாட்டும் தீர்ப்புகள், மறுகுடியமர்வு செய்யப்படும்போது நிலையாக செயல்படுத்தப்படும் வழிமுறைகளை வெளியிட்டு - இவற்றில் உள்ள அம்சங்களையும் மறுகுடியமர்வு செய்வதற்கான நடைமுறைகளாகக் கருதப்படும் என வரைவு அறிக்கை குறிப்பிடுகிறது. இதிலிருந்து வரைவு அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவற்றைத் தாண்டியும் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரியவருகிறது. ஆக வரைவு அறிக்கையின் நோக்கமே, வரைவு அறிக்கையை உருவாக்கியவர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

‘ஆக்கிரமிப்பில் இருப்பவர்கள்’, ‘தன்முயற்சியின்றி மேற்கொள்ளப்படும் மறுகுடியமர்வு’, ‘திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பம்’, ‘மறுகுடியமர்வு’, ‘எளிதில் பாதிக்கக்கூடிய குடும்பங்கள்’ ஆகிய வார்த்தைகளுக்குப் பொருள் விளக்கங்கள் அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த வார்த்தைகள் மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இல்லை. உதாரணத்துக்கு, ‘ஆக்கிரமிப்பில் இருப்பவர்கள்’ என்கிற வார்த்தைக்கு எந்த காலகட்டத்திலிருந்து என்று குறிப்பிடப்படவில்லை. மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் ‘தன்முயற்சியின்றி செய்யப்படும் மறுகுடியமர்வு’ என்று குறிப்பிட்டு, வார்த்தை ஜாலத்தில் வரைவு அறிக்கை மூழ்கியுள்ளது.

மூன்று கட்டங்கள்

‘மக்களை அடையாளம் காண்பது’, ‘மறுகுடியமர்வின்போது மனிதாபிமானத்தோடு நடத்துவது’, ‘மறுவாழ்வு என்பது நீண்டகாலச் செயல்முறை என்பதால், அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு செயல்படுத்துவது’ என மறுகுடியமர்வை மூன்று கட்டங்களில் செயல்படுத்தப் போவதாக வரைவு அறிக்கை பேசுகிறது. ஆனால், ‘எந்த அளவுக்கான மனிதாபிமானம்’ என்பதை அறிக்கை வரையறுக்கவில்லை. கடந்த ஆண்டு சென்னை சத்தியவாணிமுத்து நகர் கூவம் கரையோரக் குடியிருப்புகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயாரானபோது, கழிவுகளைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கும் கூவம் ஆற்றில் இறங்கி அப்பகுதியைச் சேர்ந்த 11 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களோடு எந்தவித உரையாடலையும் மேற்கொள்ளாமல், எந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களோ அவர்களின் வீடுகள்தான் முதலில் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

வார்த்தை விளையாட்டுகள்

‘மறுகுடியமர்வு மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, மறுகுடியமர்வுக்கான முடிவு மிக கவனத்தோடு எடுக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காக மறுகுடியமர்வு மேற்கொள்ளப்படுகிறதோ, அதை சம்பந்தப்பட்ட மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.’ ‘மக்கள் நல அரசாகச் செயல்பட வேண்டும்’ என்பன போன்ற வார்த்தைகள், அதைச் செயல்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது முரணாக அமைந்துள்ளது. முதலாவதாக, ஆக்கிரமிப்புகளை அடையாளப்படுத்துவது, வரையறுப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்பது, புதிதாகக் குடியேறவுள்ள மாற்று இடங்கள் போன்ற முடிவெடுக்கக்கூடிய, எவ்விடத்திலும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை வரைவு அறிக்கை நிராகரித்துள்ளது.

இரண்டாவதாக, மறுகுடியமர்வு செய்யப்படக்கூடிய இடமானது 3 முதல் 5 கிலோமீட்டருக்குள் அமைய வேண்டுமென மக்கள் இயக்கங்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், வரைவு அறிக்கையோ ‘அருகமை நகரப் பகுதிக்குப் பேருந்து அல்லது ரயில்கள் மூலம் செல்லும் பயண நேரம் அரை மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறது.

வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், அருகமை நகரப் பகுதியிலிருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் முப்பது நிமிடப் பயணத்தில் மாற்றுக் குடியிருப்பு என்பது முரணானது. தற்போது சென்னை மாநகரத்தின் மையப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு இந்த விதி அதிகாரிகளின் பார்வையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்திலிருந்து சென்னை மாநகர எல்லையான சோழிங்கநல்லூருக்கு வருவதற்கு 10 நிமிடங்கள்தான் பயணம். மேலும் 30 நிமிடப் பயண நேரம் என்பது நள்ளிரவிலா நடுப்பகலிலா? ஏனென்றால், எப்படிப் பார்த்தாலும் அரை மணி நேரத்தில் சென்னை மாநகருக்கு வருவது சாத்தியமில்லை. மூன்றாவதாக, ஒரு குடியிருப்புப் பகுதியை ஆக்கிரமிப்புப் பகுதியென வரையறுக்கும் உரிமையை ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்மானிக்கக்கூடிய வகையில் வரைவு அறிக்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளை வரையறுப்பது சரியாக இருக்கும். அத்துடன் ஆக்கிரமிப்புப் பகுதி குறித்து பாதிக்கப்படும் மக்கள், பொதுச் சமூகம் கருத்துத் தெரிவிக்கும் வகையில் வழிவகைகளை உருவாக்க வேண்டும்.

நான்காவதாக, ஆக்கிரமிப்புகளை அடையாளப்படுத்துவது, கணக்கெடுக்கும் பணி, மறுகுடியமர்த்துவது போன்றவற்றுக்கான காலவரையறைகள் அவசரக் கோலத்தில் செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு வரைவு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி குறித்துக் கேட்கப்பட்டாலும், கல்வியாண்டின் இடையில் மறுகுடிமயர்வு நடத்தப்படாது என உறுதியளிக்கவில்லை.

ஐந்தாவதாக, மறுகுடியமர்வை மேற்கொள்ள 2 பேர் கொண்ட மாநில வாழ்விட மேம்பாட்டுக் குழு, 22 பேர் கொண்ட சென்னை பெருநகர வாழ்விட மேம்பாட்டுக் குழு, 21 பேர் கொண்ட மாவட்ட வாழ்விட மேம்பாட்டுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இக்குழுக்களில் தன்னார்வலர் குழு, தொண்டு நிறுவனம், தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் உறுப்பினர்களாகப் பரிந்துரைத்துள்ள வரைவு அறிக்கை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதிகளைச் சேர்க்காததன் பின்னணி என்ன?

பேசப்படாத சொற்களும், செய்ய வேண்டியவையும்

ஆக்கிரமிப்புகள் என வரையறுக்கப்பட்ட இடத்திலிருந்து நகரத்துக்கு வெளியே மறுகுடியமர்வை உருவாக்குவது என்ற இலக்கை மையமாக வைத்தே வரைவு அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, அப்புறப்படுத்தப்படும் இடங்களிலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்குவது அல்லது அகற்றப்படும் இடத்துக்கு அருகிலேயே குடியிருப்புகளைக் கட்டுவது குறித்து எவ்விதமான ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வரைவு அறிக்கையில் பேசப்படவில்லை. பொதுநல வழக்குகளில் நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகள் மூலமும் ஆக்கிரமிப்புகள் வரையறுக்கப்படும் என வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்விடம் பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு நீதிமன்ற வழக்குகளும் தீர்ப்புகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்கு வாய்ப்பற்ற மக்களின் வாழ்வுரிமையை மக்கள்நல அரசு பறிக்கலாமா?

மறுகுடியமர்வுக்கு உள்ளாக வேண்டிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அரசின் பொதுச் சேவைகளும், வேலைவாய்ப்புகளும் பறிபோகாமல் இருப்பதற்கான வழிவகைகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் உரிய அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைபெற்ற மறுகுடியமர்வுப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில், புதிய மறுகுடியமர்வுக்கான திட்டமிடல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

- ஜி.செல்வா, செயல்பாட்டாளர், தொடர்புக்கு: selvacpim@gmail.com




மறுகுடியமர்வு அறிக்கைவாழ்விட உரிமைResettlement Reportமறுகுடியமர்வு - மறுவாழ்வுக் கொள்கை வரைவு அறிக்கைதமிழ்நாடு 2-வது சாலை வசதித் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

oyil-kummi-dance

ஒயில் கும்மி ஆடலாமா?

கருத்துப் பேழை

More From this Author

x