Last Updated : 20 Oct, 2021 03:07 AM

 

Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

மலேரியா தடுப்பூசி இந்தியாவுக்குப் பயன்படுமா?

முப்பது ஆண்டு கால கடுமையான ஆய்வுக்குப் பின்பு, மலேரியாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் கொடுத்துள்ள செய்தி அண்மையில் வைரல் ஆனது. RTS,S/AS01 எனும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி. ‘மஸ்குயுரிக்ஸ்’ (Mosquirix) எனும் வணிகப் பெயரில் கிளாக்ஸோஸ்மித்லைன் (GlaxoSmithKline) நிறுவனமும் ‘பாத்’ (PATH) உலக நலச்சேவை அமைப்பும் இணைந்து இதைத் தயாரித்துள்ளன. யுனிசெஃப் உள்ளிட்ட பல அறக்கட்டளைகளின் நிதியுதவியுடன் இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

2001-ல் இந்தத் தடுப்பூசியை ஆய்வு நோக்கில் குழந்தைகளுக்குப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இதன் மூன்று கட்ட ஆய்வு முடிவுகள் திருப்தியாக இருந்ததால், 2015-ல் ஐரோப்பிய மருந்துகள் முகமை (EMA) இந்தத் தடுப்பூசியின் அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்தன. ஆப்பிரிக்காவில் கானா, கென்யா, மலாவி ஆகிய நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட 8 லட்சம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தி முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அங்கு இதைச் செலுத்திக்கொண்டவர்களில் 10-ல் 4 பேருக்குக் கடந்த 4 ஆண்டுகளாக மலேரியா ஏற்படவில்லை; மரணத்தை நெருங்கிய குழந்தைகளில் 10-ல் 3 பேர் பிழைத்துக்கொண்டனர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதனால், இப்போது ஆப்பிரிக்கா முழுவதிலும் இதைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி 2019-ல் மட்டும் உலகில் 22.9 கோடிப் பேரை மலேரியா தாக்கியது. 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். இவர்களில், 2,74,000 பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பதுதான் பெருந்துயரம். அதிலும் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்கக் குழந்தைகளிடம் இந்த மரண விகிதங்கள் மிக அதிகம்.

தடைகளைத் தாண்டிய தடுப்பூசி

‘பிளாஸ்மோடியம்’ எனும் ஒட்டுண்ணிகள்தான் மலேரியாவுக்கு மூல காரணம். இந்தக் கிருமிகள் உள்ள பெண் அனாபிலிஸ் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும். அதைச் சரியாக கவனிக்காவிட்டால், கடுமையான ரத்தசோகை ஏற்படும். மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு வரும். உயிருக்கு ஆபத்து நெருங்கும்.

மனித இனத்துக்கு இத்தனை ஆபத்துகளை ஏற்படுத்துகிற மலேரியாவுக்குத் தடுப்பூசி தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருந்தன. காரணம், பிளாஸ்மோடியம் கிருமிகளில் ஃபால்சிபேரம், ஓவேல், விவாக்ஸ், மலேரியே என மொத்தம் 4 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக் கிருமிக்கும் தனித்தனியாகத் தடுப்பூசி தயாரிப்பது கடினம். அடுத்து, தவளை, வண்ணத்துப்பூச்சி போன்றவற்றுக்குப் பல வளர்ச்சிப் பருவங்கள் உள்ளதுபோல் மலேரியா கிருமிகளுக்கும் ஸ்போராசாய்ட், மீராசாய்ட் எனப் பல பருவங்கள் உண்டு. இவற்றில் எந்தப் பருவத்தைத் தடுக்கத் தடுப்பூசி தயாரிப்பது என்பதிலும் ஆய்வாளர்களுக்குத் தடுமாற்றம் இருந்தது. இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி ‘மஸ்குயுரிக்ஸ்’ தடுப்பூசி செயல்முறைக்கு வந்துள்ளது நவீன மருத்துவத்தின் முன்னேற்றத்தையே காட்டுகிறது.

மரபணு மறுஇணைப்பு

மலேரியா ஒட்டுண்ணிகளில் நோய்ப் பரவல் புள்ளிவிவரப்படி ஃபால்சிபேரம் வகைதான் அதிக ஆபத்தைத் தருகிறது. ஆப்பிரிக்கக் குழந்தைகளிடம் இந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது. எனவே, இந்த வகைக் கிருமிகளுக்கு எதிரான தடுப்பூசியை ‘மரபணு மறுஇணைப்புத் தொழில்நுட்பம்’ (Recombinant DNA Technology) மூலம் தயாரித்தனர்.

ஃபால்சிபேரம் கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும் முன்பு ஸ்போராசாய்ட் பருவத்தில் இருக்கிறது. அப்போது அதன் RTS எனும் புரதம் சார்ந்த மரபணுவின் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்துக்கொள்கின்றனர். பின்னர். ஈஸ்ட் செல் மரபணுவில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் முதலில் பிரித்தெடுத்த மரபணுவை இணைத்துவிடுகின்றனர். இப்படி இணைக்கப்பட்ட புதிய மரபணுவுடன் ஹெபடைட்டிஸ்–பி கிருமியின் S எனும் புரதக்கூறை இணைத்து, ஈஸ்ட் செல்களுக்குள் செலுத்துகின்றனர். பிறகு, இந்த ஈஸ்ட்டுகளைச் சோதனைச்சாலையில் வளர்த்து, ASO1 எனும் துணைப்பொருளைக் (Adjuvant) கலந்து தடுப்பூசி தயாரிக்கின்றனர். இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஃபால்சிபேரம் கிருமிகளுக்கு எதிரணுக்கள் (Antibodies) தோன்றிவிடுகின்றன. அதனால் இவர்களுக்கு அடுத்த முறை கொசுக்கடி மூலமாக அந்தக் கிருமிகள் ரத்தத்துக்கு வரும்போது, இந்த எதிரணுக்கள் அவற்றை அழித்து, கல்லீரலுக்குச் செல்வதைத் தடுத்துவிடுகின்றன. இதன் பலனால், மலேரியா ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இப்போதைக்கு இந்தத் தடுப்பூசியை ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவுக்குப் பயன்படுமா?

2019-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 56 லட்சம் பேருக்கு மலேரியா ஏற்பட்டது. இவர்களில் ஃபால்சிபேரம் வகையால் எத்தனை பேருக்கு மலேரியா வந்தது எனும் புள்ளிவிவரம் இல்லை. ‘மஸ்குயுரிக்ஸ்’ தடுப்பூசியைக் கண்டுபிடித்தது மருத்துவச் சாதனைதான் என்றாலும், இப்போதைக்கு இது ஃபால்சிபேரம் மலேரியாவை மட்டுமே தடுக்கும். அதிலும் 40% வரைதான் தடுப்பாற்றல் கொடுக்கும். இனிமேல் இதன் மேம்பட்ட வடிவங்கள் வரலாம். அப்போது பிறவகை மலேரியா ஒட்டுண்ணிகளைத் தடுக்கலாம். இதைக் குழந்தை பிறந்த 5-ம் மாதம் தொடங்கி 4 தவணைகள் செலுத்த வேண்டும். நான்கு தவணைகளும் சரியாகச் செலுத்திக் கொண்டவர்களுக்குத்தான் ஃபால்சிபேரம் மலேரியா ஏற்படுவதில்லை. ஆகவே, மலேரியா ஒழிப்புக்குத் தடுப்பூசியை மட்டும் நம்பாமல், தெருக்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்துவதும் முக்கியம்.

அடுத்து, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்க முன்வந்துள்ளது. நோய்த்தடுப்பாற்றல் தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதால், இதை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மூன்று கட்ட ஆய்வுகள் இங்கும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றின் தரவுகளைத் தீர ஆய்வு செய்து, இந்தியாவுக்கு இது பயன்படுமா என்பதை 100% உறுதிசெய்து அனுமதிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கொடுப்பதில் அரசு அவசரம் காட்டியதுபோல் ஆகிவிடக் கூடாது என்பது முக்கியம். இந்தியாவில் பொதுச்சுகாதாரத்துக்குச் சவாலாக இருப்பதில் மலேரியா முக்கியமானதுதான் என்றாலும், 2000-ல் 2 கோடிப் பேருக்கு ஏற்பட்ட மலேரியா இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது என்பதால், தடுப்பூசி அனுமதி தரும் விஷயத்தில் வணிக நோக்கம் முதன்மையாகிவிடக்கூடாது என்பது மிக முக்கியம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x