Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

இந்திய நிலவியல் - பாரம்பரியத்தைக் காப்போம்

இந்தியாவின் சமூகப் பன்மைத்துவத்தைப் போலவே அதன் நிலவியல் பன்மைத்துவமும் தனித்துவமானது. இந்தியா உயரமான மலைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், செதுக்கியதுபோன்ற நில அமைப்புகளையும், நீண்ட, நெடிய கடற்கரைகளையும், கனிமங்களைக் கொண்ட வெப்பநீர் ஊற்றுகளையும், அணையாத எரிமலைகளையும், பல்வேறுபட்ட மண் வகைகளையும், கனிமங்கள் நிரம்பிய நிலப் பரப்புகளையும், உலக அளவில் முக்கியமான தொல்படிமங்களைக் கொண்ட இடங்களையும் கொண்டிருக்கிறது. நிலவியல்-அறிவியலைப் பொறுத்தவரை உலகின் ‘இயற்கை ஆய்வகம்’ என்று இந்தியா வெகு காலம் அறியப்பட்டுவருகிறது.

இந்திய நிலத்திரள், பெருங்கண்டம் ஒன்றிலிருந்து தனது தாவரங்கள், விலங்குகளுடன் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து விடுபட்டது. அடுத்த 10 கோடி ஆண்டுகளுக்கு அது வடக்கு நோக்கித் தானே நகர்ந்து, ஆசிய கண்டத்தின் தெற்கு எல்லையில் நிலைத்தது. அது, உலகத்தின் மிகவும் இளமையான, கண்டத் தட்டு எல்லையோடு பின்னிப் பிணைந்துகொண்டது. புவி மேலோட்டு அமைப்பு, பருவநிலை ஆகியவற்றின் எண்ணற்ற கொந்தளிப்புகளின் விளைவாகப் பல கோடி ஆண்டு காலமாக உருவான இந்த நிலவியல் அம்சங்களும் நிலப்பரப்புகளும் இந்தியாவின் பாறைகளிலும் தரைகளிலும் பதிவாகியிருக்கின்றன. இவையெல்லாம் நம் நாட்டின் நிலவியல் பாரம்பரியமாக ஆகிவிட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குஜராத்தின் கட்ச் பகுதி டைனசோர் தொல்படிமங்களைக் கொண்டிருக்கிறது. அது நமது ஜுராசிக் பார்க் ஆகத் திகழ்கிறது. திருச்சிராப்பள்ளியில் ஆதிகாலத்தில், மீஸோஸாயிக் யுகத்தில் பெருங்கடல் இருந்தது; அந்தப் பகுதி கிரிட்டேஷஸ் (6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய யுகம்) யுகத்தின் கடல் தொல்படிமங்களின் களஞ்சியமாக இருக்கிறது. புவியியலானது ஒரு பண்பாட்டு உருவமாக எப்படி மாறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, மனித நாகரிகத்தின் தொட்டில்களுள் ஒன்றான சிந்துவெளியின் சூழலியல் வரலாற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியா இது போன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளைத் தருகிறது.

நிலவியல்-பாரம்பரியத் தலங்களெல்லாம் நமக்குக் கல்வியைக் கற்றுத்தரும் வகுப்பறைகளாகும். ஆனால், இந்திய வகுப்பறைகளெல்லாம் இயற்பியல், உயிரியல், வேதியியல் போன்ற பாடங்களை அணுகுவது போலல்லாமல் சூழலியல், நிலவியல் போன்ற துறைகளை வெறுப்புடனே அணுகுகின்றன. புவி வெப்பமாதல் போன்ற பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கியிருக்கும் காலகட்டத்தில் அரசும் நமது கல்வித் துறையினரும் நிலவியல் மீது காட்டும் அலட்சியம் வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தின் பருவநிலை நிச்சயமற்றுக் காணப்படும் நிலையில் முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மியோசின் சகாப்தத்தை (2.3 கோடியிலிருந்து 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய சகாப்தம்) போன்ற வெப்பமான இடைக்காலங்களை முன்மாதிரியாகக் கொண்டு எதிர்காலப் பருவநிலை மாதிரிகளைக் கணிக்கலாம். நிலவியல்-பாரம்பரியப் பூங்காக்களின் மூலம் பெறும் விழிப்புணர்வானது கடந்த காலத்தின் பருவநிலை மாற்றங்களை நாம் நினைவுகூர உதவும். மேலும், நாம் தப்பிப் பிழைப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய உணர்வையும் அது ஏற்படுத்தும்.

நம் புவிக்கோளின் நிலவியல் பாரம்பரியத்தின் முக்கியத்துவம் முதன்முதலில் 1991-ல் ‘நமது நிலவியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான முதல் சர்வதேச மாநாடு’ என்ற யுனெஸ்கோ நிகழ்வொன்றில் அடையாளம் காணப்பட்டது. “மனித குலமும் புவியும் ஒரு பொதுவான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன. அதற்கு நாமும் நமது அரசுகளும் பாதுகாவலர்கள்” என்ற கருதுகோளை பிரான்ஸின் டீன்யே நகரத்தில் கூடியிருந்த அந்தப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர். இந்தத் தீர்மானமானது அந்தந்த நாடுகளில் தனித்தன்மை கொண்ட நிலவியல் பகுதிகளில் நிலவியல் பூங்காக்கள் அமைவதற்கும் நிலவியலின் முக்கியத்துவம் குறித்து இந்த இடங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் காரணமானது. இவ்வாறாக, இந்த இடங்கள் நிலவியல்-சுற்றுலாக்களுக்கும் அதன் மூலமாக வருமானம், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கும் வழிவகுத்தது. டீன்யே தீர்மானத்தின் தொடர்ச்சியாகக் கருதத்தக்க விதத்தில் 1990-களின் இறுதியில் யுனெஸ்கோ ஒரு திட்டத்தை முன்னெடுத்தது. உலகெங்கும் உள்ள நிலவியல்-பாரம்பரிய இடங்களுக்கான உலகளாவிய வலைப்பின்னலை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் அது. இதன் அடிப்படையில் 44 நாடுகளில் இன்று 169 உலகளாவிய நிலவியல்-பூங்காக்கள் உள்ளன.

வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளெல்லாம் தங்கள் நிலவியல், இயற்கைப் பாரம்பரியத்தைக் காப்பதற்குச் சட்டம் இயற்றியுள்ளன. ‘ஜியலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா’ (ஜிஎஸ்ஐ) நாடெங்கும் 32 இடங்களைத் தேசிய நிலவியல் சின்னங்களாக அடையாளம் கண்டிருந்தாலும் அவற்றுள் ஒன்றுகூட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்படவில்லை. இத்தனைக்கும் யுனெஸ்கோவின் உலகளாவிய நிலவியல்-பூங்காக்கள் வலைப்பின்னலை உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. நிலவியல்-பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக 2014-ல் ஜிஎஸ்ஐ சுரங்கத் துறை அமைச்சகத்திடம் ஒரு சட்ட வரைவைச் சமர்ப்பித்தது, ஆனால், அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை.

வளர்ச்சி எனும் பிரம்மாண்டம்

இந்தத் துறையில் உலக அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்தாலும் நிலவியல்-பாரம்பரியம் என்ற கருத்தாக்கத்தை இந்தியா அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. தொல்படிமங்களைக் கொண்டிருக்கும் இடங்களில் பலவும் வளர்ச்சியின் பெயரால் சிதைக்கப்பட்டுவிட்டன. தற்போது ஆட்சியில் உள்ள கட்சியானது இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி அடித்தொண்டையில் கூவுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நிலவியல்-பாரம்பரியத்தின் மீது அது காட்டும் அலட்சியம் விசித்திரமாக இருக்கிறது. இதனால் நமது பாரம்பரியத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படப்போகிறது. வளர்ச்சி எனும் பூதம் கூடிய விரைவில் நமது நிலவியல்-பாரம்பரிய இடங்களையெல்லாம் விழுங்கப்போகிறது. எடுத்துக்காட்டாக, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிக அளவில் இரிடியம் காணப்படும் அஞ்சார் பகுதியில் 6.50 கோடி ஆண்டுகளுக்கும் முன்பு டைனசோர் இனத்தின் அழிவுக்குக் காரணமாகும் விதத்தில் புவி மீது மோதிய எரிகல் குறித்த தடயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், இருப்புப் பாதை போடுகிறோம் என்ற பெயரில் நிலவியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தையே சேதப்படுத்திவிட்டார்கள். அதேபோல், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் நெஃப்லின் சையனைட் என்ற தனித்தன்மை கொண்ட பாறையானது சாலையை அகலப்படுத்தும்போது அழிக்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் எரிகல் தாக்கியதால் ஏற்பட்ட லோனார் பெரும் பள்ளமும் சர்வதேச முக்கியத்துவமும் கொண்ட நிலவியல்-பாரம்பரியத் தலமாகும். அதுவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. எனினும், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அதைப் பாதுகாக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

நமது நிலவியல்-பாரம்பரியத் தலங்கள் பெரும்பாலானவற்றையும் இழந்துவிடக்கூடிய நிலையை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். திட்டமிடப்படாததும், புற்றீசல்போலப் பெருகுவதுமான ரியல் எஸ்டேட் தொழிலால், அப்படிப்பட்ட இடங்கள் பலவும் அழிக்கப்பட்டுவிட்டன. கட்டுப்படுத்தப்படாத கல்குவாரிகளாலும் அப்படிப்பட்ட இடங்கள் அழிக்கப்படுகின்றன. ஆகவே, உயிரிப் பன்மைத்தன்மையைக் காப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இந்த இடங்களைக் காப்பதற்காக எடுக்கப்பட வேண்டும். இயற்கையின் சொத்துகள் ஒருமுறை அழிக்கப்பட்டுவிட்டால் மறுபடியும் உருவாக்க முடியாதவை.

நிலவியல்-பாரம்பரியம் கொண்ட தலங்களைக் காப்பதற்குச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். உயிரிப் பன்மைச் சட்டம் 2002-ல் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளங்கள் 18 இருக்கின்றன. நிலப் பயன்பாடுகளைப் பொறுத்தவரை நிலவியல்-பாதுகாப்பு என்பது மிக முக்கியமான வழிகாட்டு நெறிமுறையாக இருக்க வேண்டும். இதற்கு முற்போக்கான சட்டங்கள் இயற்ற வேண்டும். பாரம்பரிய இடங்களுக்கான தேசிய ஆணையம் ஒன்றை அமைப்பதற்காக 2009-ல் மாநிலங்களவையில் அரை மனதுடன் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா இறுதியில் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டாலும் குறிப்பிடப்படாத சில காரணங்களால் அரசு பின்வாங்கிக்கொள்ளவே அந்த மசோதா விலக்கிக்கொள்ளப்பட்டது. 2019-ல் ‘சொஸைட்டி ஆஃப் எர்த் சயன்ட்டிஸ்ட்ஸ்’ ஆதரவுடன் நிலவியலாளர்களின் குழுவொன்று பிரதமருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் ஒரு மனுவை அனுப்பியது. தேசிய அமைப்பொன்றின் நேரடி மேற்பார்வையில் நிலவியல்-பாரம்பரியத் தலங்களையெல்லாம் பாதுகாப்பதற்குத் தேசியப் பாதுகாப்புக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் உள்ளடக்கம். அரசின் பாராமுகமோ இன்னும் தொடர்கிறது.

- சி.பி.ராஜேந்திரன், உதவிப் பேராசிரியர்,

‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், பெங்களூரு.

‘தி இந்து’, தமிழில்: ஆசை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x