Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

சித்த மருத்துவக் கல்வியில் அக்கறை கொள்ளுமா அரசு?

கரோனா பெருந்தொற்றின் முதல் அலையை கபசுரக் குடிநீரின் துணையோடுதான் சமாளித்தோம். ‘வருமுன் காப்போம், வந்த பின் மீட்போம்’ என்ற நோக்கில் இதனைப் பயன்படுத்தினோம். ஆனால், இந்தியாவில் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையின்போதுதான் உயிர்ப் பலிகள் அதிகம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மருத்துவம் என்கிற சித்த வைத்தியம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

மருத்துவத் துறையின் அத்தனை சாத்தியங்களையும், சாதனைகளையும் நிகழ்த்தும் ஆற்றல்மிக்க அடிப்படைக் கூறுகளைக் கொண்ட தமிழ் மருத்துவம், ஆயிரம் ஆண்டு காலப் பழமையும் வலிமையும் தனிச்சிறப்பும் கொண்டது. உயிர் காக்கும் மருந்துகளுடன் யோகா, வர்மக்கலை என்கிற இரு இயங்குமுறை சிகிச்சை முறைகளையும் உபரியாகக் கொண்டது அது. இதனைத் தோற்றுவித்தவராகச் சொல்லப்படும் அகத்தியரும், பதினெட்டு சித்தர்களும் பல்வேறு இயங்கு நிலைகளில் கோட்பாட்டு முறையில் மருத்துவ முறையை உருவாக்கினார்கள். அனைத்து நோய்க் குறிகளையும் செய்யுள் வடிவில் பாடி வைத்துள்ளனர். வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று பிரிவுகளாக, உடலின் அமைப்பை உணர்ந்தும், ஐவகை நிலங்களின் சூழலால் ஏற்படும் நோய்களை அனுபவரீதியாக அறிந்தும் மூலிகையை அடிப்படையான கச்சாப் பொருளாகக் கொண்டு சிகிச்சை அளித்தார்கள். அதனைப் பின்பற்றியே இன்று வரையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இத்தனை ஆண்டு காலப் பழமையும் பெருமையும் தீய விளைவுகள் இல்லாத நோய் தீர்க்கும் ஆற்றலும் கொண்ட ஒரு மருத்துவம், இன்னும் ஏன் படித்தவர்கள் மத்தியில் கேலிக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது? எளியவர்கள் தொடங்கி மேல்தட்டு வர்க்கம் வரை அது பற்றி நம்பிக்கையற்ற கருத்துகள் அவர்கள் மத்தியில் எப்படி ஊன்றப்பட்டன? இது குறித்து நாம் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் என்று பார்த்தால், சென்னையில் உள்ள அயோத்திதாசப் பண்டிதர் சித்த மருத்துவக் கல்லூரியும் நெல்லை - பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியும் மட்டும்தான். இதனைத் தவிர, 5 சுயநிதிக் கல்லூரிகள். இதுதான் எட்டு கோடி மக்களைக் கொண்ட தமிழர்களின் நலம் காக்கும் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் திருநெல்வேலியிலும் பழனியிலும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சித்த மருத்துவர்களுக்கும் அதனை விருப்பமாகக் கொண்டவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், மற்றொரு கசப்பான உண்மையையும் இந்த நேரத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 2020 - 2021 கல்வியாண்டு முதல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆயுர்வேதிக், சித்தா, ஹோமியோபதி, யுனானி, உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. அலோபதி மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனவர்கள், வேறு வழியின்றி சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பயின்றுவருகிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அரசே அனைத்து செலவுகளையும் ஏற்றுப் படிக்க வைத்துவருகிறது. இது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய மருத்துவப் படிப்புகளைப் பயின்றுவரும் மாணவர்கள் அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை. சுயநிதிக் கல்லூரிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அவர்களே சுயமாக நிர்ணயித்துக்கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், சித்த மருத்துவ மாணவர்களிடத்திலும் அவர்களது பெற்றோரிடத்திலும் அதிருப்தி நிலவுகிறது. ஆங்கில மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சலுகைகளை அளிக்கும் தமிழ்நாடு அரசு, சித்த மருத்துவ மாணவர்களைக் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தீய விளைவுகள் இல்லாத மருந்துகளைக் கொண்ட மருத்துவத்தை மக்கள் புறக்கணிப்பது ஏன் என்பதும் இன்னும் புதிரான ஒன்றாக உள்ளது. இது குறித்து அரசும் சித்த மருத்துவ நிறுவனங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சித்த மருத்துவப் படிப்புகள் குறித்த அறியாமையும் நிலவுகிறது. பி.எஸ்.எம்.எஸ். படித்துப் பட்டம் பெற்று, சிகிச்சை அளிப்பவர்களைக்கூட கண்மூடித்தனமாக போலி மருத்துவர்கள் என்று முத்திரை குத்துவதும் நடக்கிறது. ஆர்.எம்.பி. போன்ற பட்டயப் படிப்புகளைப் படித்தவர்களும், பாரம்பரியமான பரம்பரை வைத்தியர்கள் சிலரும் இன்னும் சித்த மருத்துவச் சிகிச்சைகளை அளித்துவருகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரையும் உரிய முறையில் ஒழுங்குபடுத்தவும் வேண்டியிருக்கிறது. சில பரம்பரை வைத்தியர்கள் தீராத நோய்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பவர்களாக உள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கலாம்.

இந்திய மருத்துவ முறைகளை நவீனப்படுத்தும் முறையில் ஆயுர்வேதிக், சித்தா படிப்புகளையும் அலோபதி படிப்பையும் ஒன்றாக்கி, பன்முக ஆளுமையுடன் மருத்துவர்களை உருவாக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்வைத்தது. அதற்கு, இந்திய அலோபதி மருத்துவச் சங்கங்களும், மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பாரம்பரிய மருத்துவ முறைகளையும் நவீன மருத்துவ வசதிகளையும் ஒருங்கிணைக்கும் அத்திட்டம், விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

இன்று, சூழலியல் காரணமாகப் புதிய வகை நோய்கள் தோன்றி, மனிதர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. அதில், சில நோய்களுக்கு இயற்கை மருத்துவ முறைகளில் நல்ல தீர்வு எட்ட முடிகிறது என்கிறார்கள் மருத்துவத்தை அறிவியல்பூர்வமாக அணுகும் விஞ்ஞானிகள். தீராத நோய்க் கூறுகள் பலவற்றுக்கும் சித்த மருத்துவ முறைகளில் சிறந்த தீர்வைத் தரும் மருந்துகளைக் கண்டறிய முடியும். அதற்கான அத்தனை அடிப்படைக் கூறுகளும் ஏராளமாய் இருக்கின்றன என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். ஆனால், அத்தகைய சித்த மருந்துகளைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்குப் போதிய நிதியுதவிகள் கிடைப்பதில்லை. பெரிய அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் நல்ல முடிவுகளைத் தர முடியும். ஆனால், அதற்கெல்லாம் சித்த மருத்துவக் கல்வியின் தரமும் உள்கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இப்போது சுயநிதிக் கல்லூரிகளில் பல லட்சங்களைக் கட்டணமாகச் செலுத்தி, சித்த மருத்துவம் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் அச்சமூட்டும் வகையில் உள்ளது. காரணம், தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ வளர்ச்சிக்கு உரிய அடிக்கட்டுமானங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. தற்போதுள்ள சித்த மருத்துவ சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தகுதியான பேராசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறதா, போதிய ஆய்வுக்கூடங்கள் உள்ளனவா என்று அரசு கண்காணிக்க வேண்டும். வருங்காலத்தில், இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு சித்த மருத்துவக் கல்லூரியையாவது அரசு தொடங்க வேண்டும். அதில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையிலான வசதிகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் மருத்துவம் தமிழர் மருத்துவமாகவும் நீடித்திருக்க முடியும்.

- சிவகுமார் முத்தையா, எழுத்தாளர், தொடர்புக்கு: sivakumarsivatamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x