Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

இந்திய விவசாயிகளின் வருமானம் ஏன் பரிதாபமாக உள்ளது?

அ.நாராயணமூா்த்தி

இந்தியப் புள்ளியியல் அலுவலகத்தால் செப்டம்பா் 2021-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் வேளாண் குடும்பங்கள் பற்றிய நிலை மதிப்பீடு-2019 அறிக்கை, விவசாயிகளின் பரிதாபமான வருமான அளவை வெளிப்படுத்தியுள்ளது. ஜூலை 2018 முதல் ஜூன் 2019 வரையிலான காலகட்டத்தில், விவசாயக் குடும்பத்துக்கு மொத்தமாக வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் சராசரி மாத வருமானம் ரூ.8,337. இதன்படி பார்த்தால், விவசாயக் குடும்பங்களின் நாள் வருமானம் வெறும் ரூ.277 மட்டுமே. இதை வைத்து விவசாயக் குடும்பங்கள் வாழ முடியுமா? விவசாயிகளின் வருமானம் ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது? தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வருமான நிலை என்ன?

வேளாண் பொருட்களின் மொத்த உற்பத்தியில் உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா உள்ளபோதிலும், விவசாயக் குடும்பங்களின் வருமானம் தொடர்பான புள்ளிவிவரங்கள் 2002-03 வரை அரசால் வெளியிடப்படவில்லை. விவசாயிகளின் பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்கு, வருமானம் ஒரு முக்கிய அளவாக இருப்பதால், வேளாண் அமைச்சகத்தின் முன்முயற்சியுடன், தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பானது (NSSO), விவசாய வருமானம், அதன் தொடர்புடைய அளவுருக்கள் பற்றிய தரவை 2002-03-ல் முதன்முறையாக விவசாயிகளின் நடப்பு நிலை மதிப்பீடு (Situation Assessment Survey) என்ற பெயரில் வெளியிட்டது. இதன் தொடா்ச்சியாக, விவசாயிகளின் நடப்பு நிலை மதிப்பீடு 2012-13-க்கும், தற்போது 2018-19-க்கும் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய நிலை

இந்திய விவசாயிகளின் வருமானம் தொடா்ந்து அதிகரித்துவந்தபோதிலும், அதன் வளா்ச்சியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில், அனைத்து மூலங்களிலிருந்தும் ஒரு விவசாயக் குடும்பத்துக்குக் கிடைக்கும் சராசரி ஆண்டு வருமானம் (தற்போதைய விலையில்) 2002-03-ல் ரூ.25,380-லிருந்து 2012-13-ல் ரூ.77,112 ஆகவும், 2018-19-ல் ரூ.1,22,616 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆனால், 2002-03-க்கும் 2012-13-க்கும் இடையில், மொத்த வருமானத்தின் சராசரி ஆண்டு அதிகரிப்பு 20.38% ஆக இருந்தது, இது 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையில் 11.90% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

விவசாயக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு வருமான ஆதாரங்களில் (கூலி, பயிர்ச் சாகுபடி, கால்நடைத் தொழில், விவசாயம் அல்லாத வணிகம்), பயிர்ச் சாகுபடியின் மூலம் பெறப்பட்ட வருமானத்தின் வளர்ச்சி 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையில் கடுமையாகக் குறைந்துள்ளது. உதாரணமாக, பயிர்ச் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானத்தின் சராசரி வருடாந்திர அதிகரிப்பு 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையில் வெறும் 4.65% மட்டுமே. அதே நேரத்தில், முந்தைய காலகட்டமான 2002-03-க்கும் 2012-13-க்கும் இடையில், இதன் வளா்ச்சி 21.80%.

ஆகவே, விவசாயக் குடும்பங்கள் எங்கிருந்து வருமானம் பெறுகின்றன என்ற கேள்வி எழலாம்? விவசாயிகளின் வருமானம் பெரும்பாலும் கூலி மற்றும் கால்நடை வளா்ப்புத் தொழில்களில் கிடைப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2012-13-க்கும் 2018-19-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், சராசரியாக 19.24% மற்றும் 21.47% இவ்விரு ஆதாரங்களில் வருமானம் முறையே உயா்ந்துள்ளது. ஒருவேளை, இவ்விரு ஆதாரங்களில் வளா்ச்சி ஏற்படாமல் இருந்திருந்தால், விவசாயக் குடும்பங்களின் வருடாந்திர வருமானம் அதன் முந்தைய காலத்தைவிட 2018-19-ல் கணிசமாகக் குறைந்து இருக்கும்!

மாநிலங்களின் நிலை

எதிர்பார்த்ததுபோலவே, வேளாண் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 2018-19-ல் மாநிலங்களுக்கிடையே கடுமையாக வேறுபட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஒடிஷாவின் மாத வருமானம் ரூ.4,013 ஆகவும், அதிகபட்சமாக மேகாலயாவின் வருமானம் ரூ.26,265 ஆகவும் பதிவாகியுள்ளது. தரவுகள் கொடுக்கப்பட்டுள்ள 28 மாநிலங்களில், 12 மாநிலங்களில் மட்டும் வருமானம் ரூ.10,000–க்கும் மேலாக உள்ளது. இவற்றில் நான்கு, வடகிழக்குப் பிராந்தியத்தைச் சோ்ந்தவை. மீதமுள்ள 16 மாநிலங்களின் வருமானம் ரூ.4,013–லிருந்து ரூ.9,995ஆக உள்ளது. விவசாயத்தைப் பெரிதும் சார்ந்துள்ள பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் மாத வருமானம், தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது. ரூ.10,448 மாத வருமானத்துடன் தமிழ்நாடு மாநிலங்களின் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது.

தரவுகள் கொடுக்கப்பட்டுள்ள 28 மாநிலங்களில், ஐந்தில் மட்டுமே, விவசாயக் குடும்பங்களின் மொத்த மாத வருமானத்தில், பயிர்ச் சாகுபடி வருமானப் பங்கு 50%-க்கும் அதிகமாக உள்ளது; 16 மாநிலங்களில், வருமானம் 40%-க்கும் கீழே உள்ளது. குறிப்பாக, பயிர் வருமானத்தின் பங்கு 9 மாநிலங்களில் 25%-க்கும் குறைவாக உள்ளது. மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் பயிர்ச் சாகுபடியின் மூலம் கிடைக்கும் வருமானம் வெறும் 20% மட்டுமே. இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்வது என்னவென்றால், பெரும்பாலான மாநிலங்களில் பயிர்ச் சாகுபடி வருமானம் மிகவும் குறைவு.

அதிகரிக்க வழிகள்

இப்படிப்பட்ட மிகவும் குறைவான பயிர்ச் சாகுபடி வருவாயுடன், இந்திய அரசின் இலக்கான, 2022-23-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மிகவும் கடினம். மேலும், இந்த வருமானத்துடன் விவசாயிகளை விவசாயத்தில் தக்கவைத்துக்கொள்வதும் எதிர்காலத்தில் கடினமாக இருக்கும்.

முதலில், மத்திய - மாநில அரசுகள் உற்பத்தியை மட்டும் உயா்த்தும் அணுகுமுறையிலிருந்து விலகி, வேளாண் சந்தையைச் செம்மைப்படுத்த வேண்டும். வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பால், நீா்ப்பாசனம் அதிகமுள்ள பகுதியில்கூட விவசாயிகளின் மேம்பட்ட வருமானத்துக்கு உத்தரவாதம் கிடைப்பதில்லை என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இரண்டு, கொள்முதல் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படாவிட்டால், பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும். நெல், கோதுமை தவிர, பெரும்பாலான பயிர்களின் கொள்முதல் அளவு மிகவும் மோசமாக உள்ளது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த ஒவ்வொரு பயிரிலும் 20-25% உற்பத்தியைக் கொள்முதல் செய்வது அவசியம். தமிழகத்தின் நெல் கொள்முதல், நமது அண்டை மாநிலமான ஆந்திரம், தெலங்கானாவைவிட மிகவும் குறைவாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று, இந்திய அரசு சந்தை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திலிருந்து, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக விலைக் குறைவுக்கேற்பப் பணம் செலுத்தும் திட்டத்தை (Price Deficiency Payment Scheme) அமல் படுத்தியுள்ளது. இத்திட்டத்தில், சந்தை விலைகள் MSP-க்குக் கீழே போகும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்கிறது. மாநில அரசுகள் இத்திட்டத்தை முழு மனதுடன் அமல்படுத்த வேண்டும். நான்கு, தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்களில், உழவா் சந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, தேசிய விவசாயக் கொள்கை 2000-ல் கோடிட்டுக் காட்டியுள்ளபடி, இச்சந்தைகளை நாடு முழுவதும் தொடங்க வேண்டும். ஐந்து, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 2007-ல் அமைக்கப்பட்ட விவசாயிகள் கடன்படுதல் பற்றிய நிபுணர் குழு பரிந்துரைப்படி, வேளாண் பொருள்கள் விலை சந்தையில் குறையும்போது சந்தைத் தலையீட்டு முறையை அமல்படுத்தி, குறிப்பிட்ட அளவு வேளாண் பொருட்களை அரசு வாங்க வேண்டும். ஆறு, இடு பொருட்களின் விலை உயர்வால் பயிர்ச் சாகுபடிச் செலவு தொடா்ந்து உயா்ந்துவருவதாக, வேளாண் செலவுகள் மற்றும் விலை ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால், விவசாயிகளுக்குப் பயிர்ச் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் பொருட்களுக்கான MSP விலையை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விவசாயப் பணிகளோடு இணைப்பதன் மூலம் சாகுபடிச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

- அ.நாராயணமூா்த்தி, இந்திய விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் முழு நேர உறுப்பினா், புதுடெல்லி, தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x