Published : 17 Oct 2021 03:07 am

Updated : 17 Oct 2021 04:41 am

 

Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 04:41 AM

தமிழ்நாட்டின் குடிசையெல்லாம் வீடாகுமா?

slum-clearance-board

குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வுக்கும் மறுவாழ்வுக்கும் வகை செய்யும் புதிய கொள்கையைத் தமிழ்நாடு அரசு வகுத்துவருகிறது. அதற்கான வரைவு அறிக்கையை அக்டோபர் 12 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையின் மீது இம்மாத இறுதி வரை பொதுமக்கள் கருத்துரைக்கலாம்.

நகரங்களைத்தான் மேம்பாலங்களும் தொழிற்கூடங்களும் அடுக்குமாடிகளும் அணிசெய்கின்றன. நகரங்களில்தான் வேலைகளும் வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. இந்த நகரங்களை உருவாக்குவதிலும் அவற்றை இயக்குவதிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள் உதிரித் தொழிலாளர்கள்தாம். ஆனால், வறுமையும் அழுக்கும் நிறைந்த குடிசைகளில்தான் நகரம் இவர்களை வாழப் பணித்திருக்கிறது. இந்த எழுதப்படாத விதியை மாற்றி, இவர்களுக்கு நாகரிகமான குடியிருப்பை வழங்க வேண்டும் என்பதுதான் இந்தக் கொள்கை அறிக்கையின் நோக்கம். இது சாத்தியம்தானா?

எழுத்தும் செயலும்

நகர மேம்பாட்டாளர்கள் அனைவரும் மறுகுடியமர்வைப் பற்றிப் பேசுவார்கள். சாலை விரிவாக்கம், அணைக்கட்டு, தொழிற்சாலை முதலான பெரிய திட்டங்களுக்கான அறிக்கைகள் அனைத்திலும் பாதிக்கப்படும் மக்களின் மறுகுடியமர்வும் மறுவாழ்வும் விரிவாக இடம்பெறும். ஆனால், பல வளர்ச்சித் திட்டங்களில் புதிய இடம் நகரத்துக்கு வெகு தொலைவில் அமைந்திருக்கும். இங்கே மக்களைக் குடிபெயர்ப்பதுடன் பல நகர மேம்பாட்டாளர்கள் நிறுத்திக்கொள்வார்கள். குடிபெயர்ந்த இடத்தில் அவர்கள் காலூன்றி, புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள காலம் பிடிக்கும். அதுவரை திட்டத்துக்குப் பொறுப்பானவர்களின் ஆதரவு தொடர வேண்டும். இந்தியாவின் பல நகரங்களில் இது நடப்பதில்லை.

புதிய விதி செய்வோம்

இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு அரசின் வரைவு அறிக்கை வந்திருக்கிறது. மறுவாழ்வுக்குத் தெரிவுசெய்யப்படும் இடம், நகரத்துக்கு அருகில், பேருந்துப் பயணத்தில் அரை மணி நேரத்தில் அடையக் கூடிய தொலைவில் இருக்க வேண்டும் என்கிறது அறிக்கை (பத்தி 5.3). புதிய இடத்தில் இருக்க வேண்டிய வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் முதலான அடிப்படை வசதிகளைப் பற்றிப் பேசுகிறது. அவை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற காலக் கெடுவையும் நிர்ணயிக்கிறது (பத்தி 10).

முக்கியமாக, இந்தக் கொள்கை, புதிய திட்டப் பணிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கானது மட்டுமில்லை. மாநிலமெங்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களிலும் குடியிருக்கும் குடிசை வாழ் மக்களுக்கும் ஆனது (பத்தி 1).

பின்தங்கிய முன்னோடி

இந்தியாவிலேயே முதன்முதலாக ‘குடிசை மாற்று வாரியம்’ அமைத்த மாநிலம் தமிழ்நாடு. ஆண்டு 1971. அப்போது சென்னையில் 1,202 குடிசைப் பகுதிகள் இனங்காணப்பட்டன. இவற்றில் 1,64,000 குடும்பங்கள் வசித்தன. இந்தக் குடிசைப் பகுதிகளில் சில சீரமைக்கப்பட்டன. பல மாற்றுக் குடியிருப்புகளும் உருவாகின. ‘குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே, நாங்க தெருவோரம் குடியேறத் தேவையில்லை’ என்கிற எம்ஜிஆர் படப் பாடல் அப்போது பிரபலமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் பலனாக 1986-ல் சென்னையில் குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கை 996-ஆகக் குறைந்தது. குடும்பங்களின் எண்ணிக்கை 1,27,000 ஆகியது. ஆனால், மெல்ல மெல்லத் தமிழ்நாட்டின் தனித்துவமான இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) இரண்டாவது பெருந்திட்ட அறிக்கையின்படி, 1971 முதல் 2006 வரை (35 ஆண்டுகள்) குடிசை மாற்று வாரியத்தால் 72,000 வீடுகளையே வழங்க முடிந்தது. அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 2,000 வீடுகள். இவை எந்த விதத்திலும் நகரின் பெருகிவரும் குடிசைப் பகுதிகளை மட்டுப்படுத்தப் போதுமானதில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சென்னை குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கை 2,173 ஆக உயர்ந்துவிட்டது. இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தமிழ்நாடு நகரங்களில் 17% மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர். இதுவே சென்னையில் 28% (மும்பை 41%, இந்தியச் சராசரி 17%). இந்தப் புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு போன்ற முற்போக்கான ஒரு மாநிலத்துக்குப் பெருமை சேர்க்காது. இந்தக் கொள்கை அறிக்கை இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறது.

இப்போது குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாறிவிட்டது - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். பெயர் மாறினாலும் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்கிற ஆதாரக் கொள்கையில் மாற்றமில்லை. அதை அடைய, மாவட்டவாரியாக ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும்; அவற்றைச் சீரமைப்பதற்கும் மறுகுடியர்மவு செய்வதற்குமான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். கொள்கை அறிக்கை நிறைவேறிய கையோடு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான திசை வழியிலும் தெளிவு இருக்க வேண்டும்.

பல கட்டங்கள், பல துறைகள்

இந்த மறுகுடியமர்விலும் மறுவாழ்விலும் உள்ள பல கட்டங்களை அறிக்கை பேசுகிறது. மறுகுடியமர்வின் அவசியம் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும் (பத்தி 5.2). குடியமர்த்தப்பட வேண்டியவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட வேண்டும் (பத்தி 5.5). மறுகுடியமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட இடமும் அங்கு ஏற்படுத்தப்படும் வசதிகளும் தரமானவையாக இருக்க வேண்டும் (பத்தி 7). மறுகுடியமர்வு அறிக்கை பொது வெளியில் வைக்கப்பட வேண்டும் (பத்தி 5.6). மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும் (பத்தி 5.7). புதிய வாழ்விடத்தில் மக்கள் காலூன்றுகிற வரை அரசின் ஆதரவு தொடர வேண்டும்.

இதில் பல அரசுத் துறைகளின் பங்கு இருக்கும். மக்கள் வெளியேற்றப்படுகிற நிலம் ஒரு துறைக்குச் சொந்தமாக இருக்கும். வளர்ச்சித் திட்டத்துக்காக இந்த இடப்பெயர்வு மேற்கொள்ளப்படுகிறது என்றால், திட்டத்துக்குப் பொறுப்பான துறை பிறிதொன்றாக இருக்கும். வருவாய்த் துறையும் காவல் துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் ‘நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய’மும் இந்த இடப்பெயர்வில் முக்கியப் பங்காற்றும்.

ஒருங்கிணைப்பாளர் வேண்டும்

ஆக, இந்த மறுகுடியமர்விலும் மறுவாழ்விலும் பல்வேறு கட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவேற்ற கணிசமான காலம் வேண்டிவரும். ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு அரசுத் துறையின் பொறுப்பில் வரும். இந்தப் பல முனைப் பணிகளை ஒத்திசைவோடு நிறைவேற்ற வேண்டும். ஆகவே, ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் ஒரு அலுவலரைப் பொறுப்பாளராக நியமிப்பது பலன் தரும். எல்லாப் பணிகளையும் ஒருங்கிணைக்கிற அதிகாரம் இவருக்கு வழங்கப்பட வேண்டும். தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர்களை இவரால் தட்டிக்கேட்க முடியும். இவர் பொதுமக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவராகவும் இருக்க வேண்டும். எளிய மக்களின் பால் கரிசனமுள்ளவர்களை இந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் வேண்டும்

ஒவ்வொரு குடிப்பெயர்வின்போதும் அது குறித்து ஆலோசிக்க ஒரு கூட்டுக் குழுவை முன்மொழிகிறது அறிக்கை. ஒட்டுமொத்தமாக அனைத்துக் குடிப்பெயர்வுகளையும் மேற்பார்வையிட மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் உயர்மட்டக் குழுக்களையும் பரிந்துரைக்கிறது (பத்தி 10.1,10.2). குடிப்பெயர்வுக்கான குழுக்களில் ஊராட்சிப் பிரதிநிதிகளையும், மாவட்ட, மாநிலக் குழுக்களில் சட்டமன்ற உறுப்பினர்களையும் உட்படுத்த வேண்டும். தன்னார்வலர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடம் தர வேண்டும். அப்போதுதான் குழுக்களின் கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறும்.

வலுக்கட்டாயமாக மக்கள் வாழ்விடங்களிலிருந்து பறித்து வீசப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இந்தக் குடிசைப் பகுதிகள் நகருக்கு நடுவேதான் இருக்கின்றன, நம்மில் பலரும் முகம் திருப்பிக்கொண்டு இவற்றைக் கடந்து போகிறோம். இது நீதமன்று என்பதும் நமது மனசாட்சிக்குத் தெரியும். தமிழக அரசின் புதிய கொள்கை அறிக்கை, இந்த அநீதிக்கு எதிரானது. அறிவாளர்களின் கருத்துகளைக் கேட்டு, அரசு இந்த அறிக்கையை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் தொடக்கம் முதல் இறுதி வரை எல்லாக் கட்டங்களையும் ஒன்றிணைக்கிற பொறுப்பு ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும். இவர் ஒற்றைச் சாளரமாக இருப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இடப்பெயர்வு தொடர்பான குழுக்களில் அங்கம் வகிக்க வேண்டும். முக்கியமாக, தமிழ்நாட்டு நகரங்களின் குடிசைப் பகுதிகளில் மறுகுடியமர்வுக்கும் மறுவாழ்வுக்குமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போது தமிழ் மண்ணில் குடிசையெல்லாம் வீடாகும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்,

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
குடிசையெல்லாம் வீடாகுமாதமிழ்நாடு அரசுகுடிசைவாழ் மக்கள்குடிசை மாற்று வாரியம்Slum Clearance Board

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x