Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

புதிய சட்டத் திருத்தம் வனத்தைப் பாதுகாக்கவா... அழிக்கவா?

வீ.நக்கீரன்

இந்தியக் காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு ஆங்கிலம் தெரியும் என்று கூறினால் நம்ப வேண்டும். கடந்த அக்டோபர் 2 தேதியிட்டு, வனப் பாதுகாப்புச் சட்டம் (1980) திருத்த வரைவை ஒன்றிய அரசு ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது? இது குறித்து முதலில் அறிய வேண்டியவர்கள், கருத்துத் தெரிவிக்க வேண்டியவர்கள் அந்தப் பழங்குடிகள்தானே?

வனப் பாதுகாப்புச் சட்டம் 1980, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது. அரசியலில் சர்வாதிகாரத்தன்மை கொண்ட அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அவ்வாறே விளங்கினார். மாநிலப் பொறுப்பில் இருந்த வனத் துறையைப் பொதுப் பிரிவுக்கு மாற்றியவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர், அன்றைய சூழலில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் பல மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படவில்லை என்கிற காரணத்தால் புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததோடு, இந்திய ஒன்றியத்தின் முதல் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசே காடுகளின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலரான பூபேந்தர் யாதவ் சுற்றுச்சூழல் அமைச்சராகியும் நிலைமை மாறவில்லை. அன்று இந்திரா காந்தி வனப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, காடு சாரா காரணங்களுக்காகக் காட்டு நிலங்களை ஒதுக்குவது பெருமளவில் குறைந்தது என்கிறார் மேனாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். நாடு விடுதலை அடைந்த முதல் 30 ஆண்டு காலத்தில் 40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய சட்டத்தின் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் அது 10 லட்சம் ஹெக்டேராகச் சுருங்கியது என்கிறார் அவர்.

சொற்களைக் கவனிக்கவும் ‘சுருங்கியது’, ஆனால் முற்றிலும் தடுக்கப்படவில்லை. ஏனெனில், வனப் பாதுகாப்புச் சட்டம் என்பது காட்டைப் பாதுகாக்கும் சட்டமல்ல. அது, காட்டு நிலங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டமேயாகும். பின்னர், தொடர்ச்சியாக நடைபெற்ற பல சட்டத் திருத்தங்களால் நிலைமை மேலும் மோசமடைந்தது. மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த தகவலின்படி 2008-2019 காலத்தில் 2,51,727 ஹெக்டேர் காட்டு நிலம் காடு சாரா பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய டெல்லி மாநிலத்தின் பரப்பளவைப் போல 1.5 மடங்கு அதிகம். இந்நிலையில்தான், தற்போதைய சட்டத் திருத்த முன்வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அனுமதி மட்டும் போதுமா?

தனியார் காடுகள் மற்றும் வருவாய்க் காடுகள் உள்ளிட்ட நிலங்களை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்த தற்போதுள்ள சட்டப்படி வனத் துறையின் அனுமதி தேவைப்படுகிறது. அதை முற்றிலும் நீக்கவே இந்தச் சட்டத்திருத்தம் முனைகிறது. உண்மையில், காடுகளைப் பாதுகாக்கும் சட்டம் என்றால், அது வன உரிமைச் சட்டம் 2006-தான் எனலாம். காப்புக்காடுகள் உள்ளிட்ட எந்தக் காட்டு நிலமாக இருந்தாலும், அதைக் காடு சாராத பயன்பாட்டுக்கு அரசாங்கம் மட்டுமே முடிவெடுத்து வழங்கிவிட முடியாது. அதற்குப் பழங்குடிகளின் கிராம சபை ஒப்புதல் தேவை. இந்த உரிமையைக் கிராம சபைக்கு வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ளது. அதனால்தான் காடுகள் மீதான பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புகளைப் பழங்குடிகளால் தடுத்து நிறுத்த முடிந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 2013-ல் ஒடிசா காட்டுக்குள் பாக்சைட் சுரங்கம் அமைக்க அம்மாநில அரசின் சுரங்கக் கழகம் வழங்கிய அனுமதியைப் பழங்குடிகளின் 12 கிராம சபைகள் தடுத்து நிறுத்தியதைக் குறிப்பிடலாம். எனவே, இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவு, மறைமுகமாக வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையோ என்கிற அச்சம் இயல்பாகவே எழுகிறது. காரணம், ஒரு பழைய சட்டத்துக்கும் புதிய சட்டத்துக்கும் முரண்பாடு தோன்றினால், வழக்கில் புதிய சட்டமே செல்லுபடியாகும். அது மட்டுமல்லாமல், 2013-க்குப் பிறகு காடுகளின் பாதுகாப்பு சார்ந்திருந்த சட்டங்கள் ஒவ்வொன்றாகத் தளர்த்தப்பட்டுவிட்டன.

கையில் இருப்பதை இழக்கலாமா?

புதிய திருத்த வரைவில் காட்டு நிலப் பகுதிகளைக் கையகப்படுத்துவதைத் தடுக்கும் கூறுகள் உள்ளன என்று கூறப்படுவதை, “ஒரு மோசடி” என்று மறுக்கிறார் பழங்குடிகள் செயல்பாட்டாளர் சி.ஆர்.பிஜாய். “2006 வன உரிமைச் சட்டத்திலேயே குறிப்பிட்ட காட்டு நிலத்தை ‘முக்கியத்துவம் வாய்ந்த வனவிலங்கு வாழ்விடம்’ (Critical wildlife Habitate) என்று அறிவித்தால், அதைக் காடு சாராத பயன்பாட்டுக்கு வழங்க முடியாது என்ற விதிமுறை உள்ளது. அதாவது, அச்சட்டம் ஏற்கெனவே இங்கு இருக்கிறது” என்கிறார் அவர்.

காடு சாரா பயன்பாடுகளை ஆதரிக்கும் பொருளியல் வாதங்கள் வழக்கம்போலவே ‘உயிரினப் பன்மை’ என்பதைக் கணக்கில் கொள்வதில்லை. உயிரினப் பன்மை விலைமதிப்பற்றது என்பதையும் உணர்வதில்லை. அது மட்டுமன்றி, பருவநிலை மாற்றம் குறித்த ஐ.பி.சி.சி.யின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் எச்சரிக்கையை இந்த சட்டத் திருத்த வரைவு கேலிசெய்கிறது. கையில் இருக்கும் காடுகளை அழித்துவிட்டு பருவநிலை மாற்றத்தை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறோம்?

காடழிக்கப்பட்ட நிலத்துக்கு ஈடாக இரு மடங்கு நிலத்தில் புதிய காடு உருவாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், அங்கு எவ்வகைத் தாவரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல்கள் ஏதுமில்லை. எனவே, ஓரினப் பயிர்த் தோட்டங்களே காடு என்ற பெயரில் உருவாக்கப்படுகின்றன. ஓரினப் பயிர்களின் தோட்டம் அசல் காட்டைவிடக் குறைவான கார்பனையே வளிமண்டலத்திலிருந்து ஈர்த்துக்கொள்ளும் என்பதே உண்மை.

கூடுதல் அழுத்தம் தேவை

தமிழ்நாடு அரசின் தனியார் வனப் பாதுகாப்பு 1949 சட்டத்தை, ஒருவிதத்தில் நல்லதொரு சட்டமாகச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கருதுவார்கள். ஆனால், ஒன்றிய அரசின் புதிய வரைவு, மாநில அரசின் வனப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைவைக்க முனைகிறது. காடுகளில் தன் அதிகாரத்தை நிறுவ பிரிட்டிஷ் அரசு வனப் பாதுகாப்புச் சட்ட வரைவு ஒன்றைக் கொண்டுவந்தபோது, அதை முதலில் எதிர்த்தது மெட்ராஸ் மாகாணம்தான் என்கிற வரலாற்று உண்மையை இங்கு நினைவில் கொள்வது அவசியம்.

வரைவுக்கு எதிராகப் பொதுமக்கள் மட்டும் மின்னஞ்சலில் கருத்துகளை அனுப்புவது போதாது. அதனுடன் அரசியல் அழுத்தமும் தேவைப்படுகிறது. கேரளத்தின் மேனாள் சுற்றுச்சூழல் அமைச்சர் பினாய் விஸ்வம் அதைத் தொடங்கி வைத்துவிட்டார். தமிழ்நாடு அரசின் குரலும் வரைவுக்கு எதிராக, வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பு.

- வீ.நக்கீரன், ‘காடோடி', ‘நீர் எழுத்து' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x