Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

காவிரி மாசுபாட்டைக் கண்காணிக்கும் நடவடிக்கை கடைமடை வரை நீளட்டும்

காவிரி மற்றும் அதன் உபநதிகளில் ஆலைக் கழிவுகள் கலக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்கள் அடங்கிய ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. சென்னை ஐஐடி நிபுணர் குழு நடத்திய ஆய்வில், காவிரி ஆற்றில் ஆலைக் கழிவுகள் கலப்பது கண்டறியப்பட்டதையொட்டித் தமிழ்நாடு அரசால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட ஐந்து குழுக்களும் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும் சாய மற்றும் சலவை ஆலைகளிலிருந்து கழிவு நீர், ஆற்றில் வெளியேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பின்னலாடை உற்பத்தித் தொழில், லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிவருகிறது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி ஆகியவற்றில் குவிந்த பெருங்கவனம், ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலக்கும் விஷயத்தில் குவியவில்லை. இதன் விளைவாக, காவிரியின் துணையாறான நொய்யல் மிக மோசமான அளவில் மாசடைந்தது. பாதிக்கப்பட்ட ஆற்றுப் பாசன விவசாயிகள் வழக்குத் தொடர்ந்ததன் பின்னரே, சுத்திகரிப்புக்கான உள்கட்டமைப்பு இல்லாத ஆலைகள் இயங்கக் கூடாது என்ற நிலை உருவானது. சிறு - குறு தொழில் முனைவோர்கள் சுத்திகரிப்புக் கட்டமைப்புக்குப் பெருந்தொகை செலவிட இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும் விவாதிக்கப்பட்டு அவர்கள் தங்களுக்குள் இணைந்து பொதுவான சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகும், ஆலைக் கழிவு சுத்திகரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதையே சென்னை ஐஐடி நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

காவிரியில் கலக்கும் ஆலைக் கழிவுகளைப் பற்றிய விவாதங்கள் பெரிதும் திருப்பூர் சாயப் பட்டறைகள் பற்றியதாக மட்டுமே முடிந்துவிடுகின்றன. ஆனால், இத்தகைய புகார்கள் காவிரி, கடலோடு கலக்கும் கடைமடைப் பகுதிகள் வரைக்கும் நீள்கின்றன. குறிப்பாக, காவிரிப் படுகை மாவட்டங்களில் சோடியம் சிலிகேட் என்ற சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளால் சுற்றுப்புறப் பகுதிகள் மாசடைவது குறித்து, அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துவருகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் எரிவாயுவுடன் சிலிக்கானை மூலப் பொருளாகக் கொண்டு இந்த சோப்புத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.

காவிரிப் படுகை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட சோடியம் சிலிகேட் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள் காவிரியின் கரையோரங்களில் மண்ணையும் காற்றையும் பாதிப்பதாய் விவசாயிகள் கூறுகின்றனர். கண்காணிப்புக் குழுக்கள் நியமனத்தை அடுத்து, சென்னை ஐஐடி நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி, மேட்டூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. காவிரியின் மீதான கரிசனம் கடைமடை வரையிலும் நீளும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x