Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM

மசினகுடி வேங்கைப்புலி எழுப்பும் கேள்விகள்

காட்டுயிர் பேணலில் நமது குறிக்கோள் உயிரினங்களைப் (species) பாதுகாப்பது என்பதை மறந்துவிடக் கூடாது. தனி ஒரு விலங்கின் மேல் நம் கவனம் குவிந்து இந்தக் குறி மாறிவிடக் கூடாது. நம் நாட்டில் காட்டுயிர் பற்றிய கரிசனம் சற்று திசைமாறிப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதைச் சமூக வலைதளங்களில் நடக்கும் மசினகுடி வேங்கைப்புலி பற்றிய விவாதம் காட்டுகின்றது.

அரிதாகவே வேங்கைப்புலிக்குச் சில மனிதர்கள் பலியாகின்றார்கள். வேங்கைப்புலி மனிதர்களை வேட்டையாடுவதில்லை. சில சமயம் நிர்ப்பந்தங்களால் இரையாகக் கொள்கிறது. காயம்படுவதாலோ, முள்ளம்பன்றியின் முட்கள் உடலில் குத்திப் பதிந்துவிடுவதாலோ அல்லது மூப்பினாலோ விரட்டித் துரத்தி இரையை அடிக்க முடியாமல் போய்விடும்போது, மனிதர்களை வேங்கைப்புலி தாக்கலாம். மனிதரை எளிதாக இரையாக்கிக்கொண்டுவிடலாம் என்று ஒரு ஊனமுற்ற வேங்கைப்புலி தெரிந்துகொண்டால், அது மறுபடியும் அதே முறையைக் கையாளும். அதாவது, அது ஒரு ஆட்கொல்லியாகிவிடும். அப்போது அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஜிம் கார்பெட் அவர் சுட்டுக்கொன்ற ஒவ்வொரு ஆட்கொல்லி வேங்கைப்புலியின் உடலையும் சோதித்து அது ஏன் ஆட்கொல்லியாக மாறியது என்று விளக்கியிருப்பார். அது மனித ரத்த ருசி கண்டு, மீண்டும் மீண்டும் மனிதர்களை அடிக்கிறது என்ற கதைக்கு ஆதாரமே இல்லை.

2005-ல் நிறுவப்பட்ட தேசிய வேங்கைப்புலி பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority) ஒரு வேங்கைப்புலியை ஆட்கொல்லியாக அறிவிப்பதற்குச் சில நியதிகளை வகுத்துள்ளது. 2007-ல் இந்த நியதிகள் (protocol) ஒரு சுற்றறிக்கை மூலம் மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானது, தான் கொன்ற மனிதரை அந்த வேங்கைப்புலி இரையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வேங்கைப்புலி ஆட்கொல்லி என்று தெரிந்த பிறகும் அதை விட்டுவைப்பது, மற்ற மனிதர்களுக்கு மட்டுமல்ல வேங்கைப்புலிகளுக்கும் ஆபத்து என்கிறது இந்தச் சுற்றறிக்கை. இதன் அடிப்படையில்தான் 2014-ல் நீலகிரியில் ஒரு வேங்கைப்புலி சுடப்பட்டது. அதேபோல 2018-ல் மஹாராஷ்டிரத்தில் ஆவினி என்றறியப்பட்ட வேங்கைப்புலி வெகுநாள் தேடலுக்குப் பிறகு கொல்லப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

காட்டுயிரைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியப் பங்கு உள்ளூர்வாசிகளுக்கு இருக்கிறது. அவர்களின் நல்லெண்ணமும் பங்களிப்பும் இல்லாமல் அருகிலுள்ள காட்டில் வாழும் விலங்குகளைக் காக்க முடியாது. தங்களது கால்நடைகளை மட்டுமல்ல... உறவினர்களையும் கொல்லும் வேங்கைப்புலியைக் கண்டு அவர்கள் அஞ்சுவது தவறல்லவே. வனத் துறையினர் இம்மாதிரியான பிரச்சினையைப் பல சரணாலயங்களில் எதிர்கொண்டுள்ளனர். சத்தியமங்கலம் காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டபோது, அதை உள்ளூர் மக்கள் எதிர்த்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சென்ற ஆண்டில் 360 பேர் நாட்டின் வெவ்வேறு இடங்களில் காட்டானைகளால் தாக்கிக் கொல்லப்பட்டனர். ஆனால், கிராமத்து மக்கள் எவரும் யானையைச் சுட வேண்டும் என்று போராடவில்லை.

ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் உத்தராகண்டின் இமயமலைக் காட்டில் சம்பாவட் என்ற இடத்தில் ஒரு ஆட்கொல்லி வேங்கைப்புலி 430 பேரைக் கொன்றுதீர்த்த பிறகுதான் ஜிம் கார்பெட்டால் சுட்டுக்கொல்லப்பட்டது. இன்று கூட வங்காளத்தில் சுந்தரவனக் காடுகளில் ஆட்கொல்லி வேங்கைப்புலிகள் அவ்வப்போது தோன்றுகின்றன.

இந்த வேங்கைப்புலிகளைப் பிடித்து உயிரியல் பூங்காவில் வைக்கலாமே என்று சிலர் யோசனை கூறுகின்றனர். இதனால் காட்டுயிர் பேணலுக்கு என்ன பயன்? வனத்தில் சுதந்திரமாகத் திரியும் வேங்கைப்புலியை, மயக்க தோட்டா மூலம் சுட்டுப் பிடித்து அடைத்து வைப்பது அதற்கு மரணத்தைவிடக் கொடுமையான முடிவு. உயிரியல் பூங்காக்களில் ஏற்கெனவே மிகுந்த இட நெருக்கடி. ஒரு விலங்கைக் கூண்டில் அடைத்து வைப்பது அந்த உயிரினப் பாதுகாப்புக்கு எவ்விதப் பயனுமில்லை. பராமரிக்கும் செலவைப் பற்றிப் பேசவே வேண்டாம். பல உயிரினப் பூங்காக்களில் பெரும் பூனைகளுக்கு மாட்டிறைச்சி போடுவது இன்று நிறுத்தப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல. உயிர்க்காட்சி சாலை எனும் கருதுகோளுக்கு எதிராக ஓர் இயக்கம் உருவாகிவருகிறது. சர்க்கஸ் மறைந்துபோனதுபோல இதுவும் சில பத்தாண்டுகளில் மறைந்துவிடலாம். காப்பிடப் பெருக்கத்துக்கு மட்டும் விலங்குகளை அடைத்து வைத்து வளர்க்கலாம்.

ஓர் உயிரியின் மேல் கருணை என்பது அறம் சார்ந்த விஷயம். அது சூழலியல் கரிசனத்தின் அடையாளமல்ல. அத்தகைய மேலோட்டமான கருணை சில சமயங்களில் காட்டுயிர் பேணலுக்கு எதிர்மறையாகவும் அமையலாம். இந்திய காட்டுயிர் பற்றி ‘தி டியர் அண்டு தி டைகர்’ (The Deer and the Tiger, 1967) என்ற சிறந்த நூலை எழுதிய உயிரியிலர் ஜார்ஜ் ஷேலரும், நம் நாட்டு வேங்கைப்புலி நிபுணர் உல்லாஸ் கரந்த்தும் ஆட்கொல்லி வேங்கைப்புலியைக் கொல்வதுதான் ஒரே வழி என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். (காண்க: ‘கானுறை வேங்கை’ – காலச்சுவடு பதிப்பகம்.) காட்டுயிர் பேணலில் அரைக்கிணறு தாண்டும் வேலைக்கே இடமில்லை. இங்கே நமது குறிக்கோள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினத்தைக் காப்பது. அந்த முயற்சியில் தனி உயிரிகள் சில சாக வேண்டி வரலாம்.

காட்டுயிர் பேணலும் பிராணி நலமும் (conservation and Animal welfare) இரண்டும் சீரிய கருதுகோள்கள் - ஒன்றை ஒன்று போட்டு குழப்பிக்கொள்ளாமல் இருக்கும் வரை. இரண்டுக்கும் அடிப்படையான நியதிகள் வேறுபடுகின்றன. காட்டுயிர் எனும் சொல்லில், தானாக வளர்ந்து செழிக்கும் சகல உயிரினங்களும் அடக்கம். ஆனால், பிராணிநலன் என்பது மனிதருடன் இருக்கும் வளர்ப்பு உயிரினங்கள் சார்ந்தது. இந்த சித்தாந்தம், பிராணிநலன், பல நன்மைகளை வளர்ப்பு உயிரினங்களுக்குச் செய்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியதும் இதுதான். அந்த சித்தாந்தத்தைக் காட்டுயிர் பேணலில் நுழைத்தால்தான் பிரச்சினை.

- சு.தியடோர் பாஸ்கரன்,

சூழலியல் ஆர்வலர், ‘கையிலிருக்கும் பூமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x