Last Updated : 10 Oct, 2021 03:15 AM

 

Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM

மார்க்கேஸை கூத்தில் இறக்கிய காசி

கூத்துப்பட்டறையின் தொடக்க காலச் செயல்பாடுகளின் பிரிக்க முடியாதவரும் கூத்துக் கலைஞரும் நவீன நாடக ஆளுமையுமான கண்ணப்ப.காசி தனது 77-வது வயதில் செப்டம்பர் 13 அன்று காலமானார். காசி, அஞ்சல் துறையில் பணியாற்றியவர். காசியுடன் அஞ்சல் துறையில் பணியாற்றிய அவரது சக ஊழியர்கள்தான் கூத்துப்பட்டறையின் தொடக்க கால நடிகர்களாக இருந்தனர். அவர் ஒரு தொழிற்சங்கச் செயல்பாட்டாளராக இருந்ததால்தானோ என்னவோ, பணம், புகழ் என எதற்குமே உத்தரவாதமற்ற ஒரு நவீன நாடகச் செயல்பாட்டுக்குத் தன்னுடன் பணியாற்றிய பலரையும் அழைத்துவர முடிந்தது.

இப்படி முழுக்க முழுக்க அஞ்சல் துறை ஊழியர்களே பங்குபெற்ற, கிளிப்போர்டு ஓடட்ஸ் எழுதிய ‘இடதுசாரிக்காகக் காத்திருங்கள்’ நாடகத்தை அப்போது தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சங்கர தாஸ் சுவாமிகள் அரங்கத்தில் ‘கூத்துப்பட்டறை’ நிகழ்த்தியபோது நான் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தை வ.ஆறுமுகம் இயக்கினார். காசியும் அவரது சக ஊழியர்களான ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம், பழனி ஆகியோரும் அந்த நாடகத்தில் நடித்திருந்தனர்.

ஃபோர்டு பவுண்டேஷனின் நிதி நல்கையோடு ஒரு முழு நேரக் குழுவாகச் செயல்படத் தொடங்கும் வரை கூத்துப்பட்டறையின் நிலைமை இதுதான். கூத்துப்பட்டறையின் முழு நேர நடிகராக இல்லையே தவிர, அதற்கு அடுத்து நடந்த எல்லா தயாரிப்புகளிலும் காசி, முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தார். முத்துசாமியின் நெறியாள்கையிலும், பின்னர் அன்மோல் வெல்லானியின் நெறியாள்கையிலும் மேடையேற்றப்பட்ட ‘இங்கிலாந்து’ நாடகத்தில் பொய்க்கால்களைக் கட்டிக்கொண்டு வருகிற ‘தக்களி’க்காரர் பாத்திரத்தில் காசி நடித்தார். காந்தியைக் குறிப்பால் உணர்த்தும் உருவகம்தான் அந்த தக்களி நூற்பவர் பாத்திரம். அதனை அவர் திறமையாகக் கையாண்டது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது.

தொடர்ந்து கூத்துப்பட்டறையின் பல நாடகங்களில் காசி நடித்திருந்தபோதும் முக்கியமான ஒரு பாத்திரமாக இன்றும் எனது நினைவில் நிற்பது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘பெரிய சிறகுகளுடன் கூடிய வயோதிகன்’ நாடகத்தில் அவர் கட்டியங்காரனாக நடித்ததுதான். இது முழுக்க முழுக்கக் கூத்து வடிவத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு நாடகம். கொலம்பியாவில் நடைபெற்ற ஒரு நாடக விழாவில் பங்கு பெற்ற நாடகம் இது. மார்க்கேஸின் கதை, முழுக்கக் கூத்து பாணியிலே சொல்லப்பட்டிருந்தது. காசியின் தந்தையார் புரிசை கண்ணப்ப தம்பிரான் குழுவினரே இந்த நாடகத்தில் நடித்திருந்தனர்.

கூத்து போன்ற மரபார்ந்த நாடக வடிவங்களின் எடுத்துரைப்பு [Narrative] நெகிழ்வானதாக இருந்தாலும், அவற்றின் சட்டகங்கள் அல்லது நாடகீயம் [Dramaturgy] சற்று இறுக்கமானவை. அது நன்மைக்கும் தீமைக்கும் ஏற்படுகிற மோதல் அல்லது முரண், அதனால் ஏற்படுகிற இறுக்கம், வளர்ச்சி, முடிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. தேவ - அசுர முரண் அல்லது கடவுளுக்கும் சாத்தானுக்குமான முரண் என்பதாக வளர்ந்து இறுக்கமாகி, முடிவுறும் கதையாடல்களுக்கு ஏற்புடைய வடிவமாகவே இருந்துவந்தது. அதனால், சமகாலச் சிக்கல்களைக் கொண்ட கதையாடல்களை இது போன்ற மரபான வடிவங்களில் நேர்த்தியாகக் கையாள முடியாது என்று ஒரு வலுவான கருத்து நாடகச் செயற்பாட்டாளர்களிடம் இருந்துவந்தது. புகழ்பெற்ற நாடகவியலாளர் பி.வி.காராந்த், ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்தை யக்ஷகானா வடிவத்தில் ‘பர்னம் வானா’ என்கிற பெயரில் கன்னடத்தில் தயாரித்திருந்தார். இந்நாடகம் ஷேக்ஸ்பியரையும் சிதைத்துவிட்டது, யக்ஷகானாவையும் சிதைத்துவிட்டது என்பதுதான் பெருவாரியாக மேலெழுந்த விமர்சனம். எனவே, மரபான நாடக வடிவங்களில் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட சமகாலச் சிக்கல்களை அவ்வளவு எளிதாகச் சித்தரித்துவிட இயலாது என்பதுதான் பலரின் கருத்தும். நானும் இக்கருத்தைத்தான் கொண்டிருந்தேன்.

எனினும் புரிசை குழுவினர் நிகழ்த்திய ‘பெரிய சிறகுகளுடன் கூடிய வயோதிகன்’ நாடகம், எனது புரிதல்களைக் கவிழ்த்துப்போட்டுவிட்டது. மார்க்கேஸின் மாய யதார்த்த பாணியிலான கதையாடலுக்குக் கூத்து வடிவம் மிகச் சிறந்த தளம் அமைத்துக் கொடுத்திருந்ததை மாக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் அரங்கேறிய நிகழ்விலே நான் காண நேர்ந்தது. கூத்தின் வடிவம் இறுக்கமான நேர்க்கோட்டுத்தன்மையில் அமைந்திருந்தாலும் கட்டியங்காரன் எனும் பாத்திரம் உட்புகுந்து, அதன் எடுத்துரைப்பில் பலவிதமான உபகதையாடல்களுக்கு வழிகளைத் திறந்துவிடுகிறது. கூத்தின் எடுத்துரைப்பில் அமைந்திருந்த இந்தக் கூறுகள், மார்க்கேஸின் மாய யதார்த்த எடுத்துரைப்புக்கு ஏதுவாக, அதாவது நேர்க்கோட்டில் செல்லாமல் தாண்டிக் குதித்தும் பக்கவாட்டில் பயணித்தும் குறுக்கு நெடுக்காக ஓடியும் கதையாடலை நிகழ்த்த வாய்ப்புகளை அளித்திருந்தது.

தொடர்ந்து மழைபெய்து ஓய்ந்திருந்த ஒரு நாளில், வீட்டுக்குள் படையெடுக்கும் நண்டுகளை அடித்துக்கொண்டிருக்கும்போது புறக்கடையில் பெரிய சிறகுகளுடன் கூடிய ஒரு வயோதிகன் பறந்து வந்து அமர்ந்திருப்பான் என்று தொடங்கும் இக்கதை, சிலந்தியாக மாறிவிடுகிற ஒரு பெண், சிறகுகளுடன் கூடிய வயோதிகன் தேவதையா, இல்லை ஏமாற்றுப் பேர்வழியா என்று விவாதிக்கும் திருச்சபையின் குருமார்கள் எனக் கதை அங்கும் இங்கும் பயணிக்கும். தமிழ் நாடகப் பரப்பில் மிக முக்கியமான தயாரிப்பு இந்நாடகம்.

இந்நாடகத்தின் மையமான கட்டியங்காரன் பாத்திரத்தை காசி ஏற்றிருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இக்கதையைக் கூத்து வடிவமாகத் தயாரிப்பதில் தன் முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் பெரும்பங்கு ஆற்றியவர் காசி. அவரது மற்றொரு முக்கியமான பங்களிப்பு, அவரது இளவல் கண்ணப்ப.சம்பந்தத்தோடு இணைந்து, புரிசை கிராமத்தில் தங்கள் தந்தை புரிசை கண்ணப்பத் தம்பிரான் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கண்ணப்பத் தம்பிரான் நாடக விழாவை நடத்தத் தொடங்கியதுதான். அனைத்து நாடகச் செயல்பாட்டாளர்களும் ஆவலோடு எதிர்பார்க்கிற நாடக விழா இது.

2019-ல் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’ சென்னையில் நடத்திய தென்னிந்திய மக்கள் நாடக விழாவின் தொடக்க நாளில் இடம்பெற்ற கலைஞர்கள் பேரணியை காசிதான் தொடங்கி வைத்தார். கூத்துப்பட்டறை ‘நடிப்பு’ பயிற்சியளிக்கத் தொடங்குகிற காலம் வரை அதன் செயல்பாடுகளில் பிரிக்க முடியாத பகுதியாக காசி இருந்தார். அந்தக் காலங்களில் காசியும் ந.முத்துசாமியும் இரட்டையர் போல இணைபிரியாமல் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் வருவார்கள், போவார்கள். இருவரும் இந்திய பாணியிலான காலரில்லாத ஒரே மாதிரியான பூப்போட்ட சட்டை அணிந்திருப்பார்கள். இப்போது எல்லாம் நினைவாகப் போய்விட்டது. முதலில் முத்துசாமி விடைபெற்றார். இப்போது தன் உடலை மருத்துவமனைக்குத் தானம் செய்துவிட்டு காசியும் கிளம்பிவிட்டார். தமிழ் நாடக உலகம் என்றென்றும் காசியை நினைவில் வைத்திருக்கும்.

- பிரளயன், நாடகச் செயல்பாட்டாளர். தொடர்புக்கு: pralayans@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x