Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

பாஜகவுக்கு எதிரான தேசிய சக்தியாக உருவெடுப்பாரா மம்தா பானர்ஜி?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட பவானிபூர் இடைத்தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலைக் காட்டிலும் 58,832 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை மே.வங்க முதல்வராகத் தொடர முடியும்.

கடந்த மே மாதம் மே.வங்கத்தின் 292 தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தலில் முந்தைய தேர்தல்களைவிட அதிகபட்ச எண்ணிக்கையாக 213 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது திரிணமூல் காங்கிரஸ். மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பாஜக விடுத்த பிரம்மாண்டமான சவால், பத்தாண்டுகளை நிறைவுசெய்துவிட்ட தனது ஆட்சியின் மீது படிந்திருக்கும் ஊழல் மற்றும் வன்முறை குற்றச்சாட்டுகள், எட்டுக் கட்டத் தேர்தலிலும் அவற்றுக்கான பிரச்சாரத்திலும் நிகழ்ந்த சர்ச்சைகள், கலவரச் சூழல் இவற்றையெல்லாம் தாண்டி, தனது கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று மம்தாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, அவரை எதிர்த்துப் போட்டியிட்டவரும் தேர்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவியவருமான சுவேந்து அதிகாரியிடம் 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முதல்வராகப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் மம்தா ஏதேனும் ஒரு தொகுதியில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட வேண்டும் என்னும் சூழலில், பவானிபூர் தொகுதியில் வென்றிருந்த திரிணமூல் உறுப்பினர் சோவந்தேவ் சட்டோபாத்யாய தனது பதவியை ராஜினாமா செய்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட வழிவகுத்தார். செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானிபூரில் மட்டுமல்லாமல் ஜாங்கிபூர், சம்ஸெர்கஞ்ச் ஆகிய மற்ற இரண்டு தொகுதிகளிலும்கூட திரிணமூல் உறுப்பினர்களே வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் மே.வங்க சட்டமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸின் எண்ணிக்கை பலம் மேலும் அதிகரித்திருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு முன் திரிணமூலிலிருந்து பாஜகவுக்குத் தாவி, தேர்தலில் தோல்வியுற்று மீண்டும் ‘தீதி’யிடம் சரணடைகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. முகுல் ராய் உட்பட இவர்கள் பலர் திரிணமூலின் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்கள். இவர்களைக் கைப்பற்றியதன் மூலம், திரிணமூலைப் படிப்படியாகச் சிதைப்பதில் பாஜக வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருப்பது போன்ற தோற்றம் உருவானது. ஆனால், திரிணமூலின் தேர்தல் வெற்றிக்குப் பின் அதுவும் கானல் நீராகியிருக்கிறது. மம்தாவின் தலைமையில் கிடைத்த இமாலய வெற்றி, அமைப்புரீதியாகவும் அக்கட்சியைப் பன்மடங்கு வலுப்படுத்தியிருக்கிறது.

இந்த முறை மே.வங்கத்தில் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டது பாஜக. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட, அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் முனைப்புடன் பங்கேற்றனர். மோடி 10-க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார். இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாநிலமான மே.வங்கத்தில் மதரீதியான பிளவுகள் அதிகரித்தன. திரிணமூல் ஆட்சியில் இந்துக்கள் வஞ்சிக்கப்படுவதாக பாஜக பிரச்சாரம் செய்தது. வங்க இன உணர்வுக்கு எதிராக இந்திய தேசிய உணர்வை பாஜக முன்னிறுத்தியது. மே.வங்க அரசியல் களத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளை வென்ற அக்கட்சி, 2021-ல் 77 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் வைத்து தேசிய ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் வலிமையை உள்ளதைவிட அதிகமாக ஊதிப் பெருக்கிக் காட்டியிருப்பதையே தேர்தல் முடிவுகளும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளும் உணர்த்தியிருக்கின்றன.

மம்தா தலைமையிலான திரிணமூல் தொடர்ந்து பாஜகவின் சவால்களை உடைத்து வெற்றி பெற்றுவரும் அதே நேரத்தில் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் செல்வாக்கு சரிந்துகொண்டே போகிறது. எனவே, தேசிய அளவில் மிகப் பிரம்மாண்டமான, அசைக்க முடியாத சக்தியாக வலுப்பெற்றிருக்கும் பாஜகவைத் தேசிய அளவில் எதிர்ப்பதற்கான அணியில் மம்தாவின் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்னும் குரல்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன.

நடந்து முடிந்த தேர்தலில், இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ், தன்னை விட்டுப் பிரிந்துசென்று கட்சி தொடங்கிய மம்தாவுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது. ஆனால், அவருடைய தலைமையை ஏற்கவோ தொகுதிகள் ஒதுக்கீடு உட்பட அனைத்திலும் அவருடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவுக்கோ அக்கட்சி இறங்கிவரும் என்பதற்கான எந்த ஒரு சமிக்ஞையும் தென்படவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை காங்கிரஸ் கையாண்ட விதத்தை வைத்து இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேலும், திரிணமூல் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அக்கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் சூழலில், அது திரிணமூலுடன் ஓரணியில் இணைவதற்கு வாய்ப்பேயில்லை.

பாஜகவுக்கு எதிரான அரசியல் கூட்டணியில் மம்தா மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பார் என்பதை மறுத்துவிட முடியாது. இன்று இந்தியாவில் பாஜகவுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழும் அரசியல் தலைவர்களில் முதல் இடத்தில் வைக்கத் தகுதியானவரும் அவரே. ஆனால், மாநிலத் தேர்தலில் அவர் ஈட்டிவரும் வெற்றி, தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் எந்த அளவில் தாக்கம் செலுத்தும் என்கிற கேள்வியைத் தவிர்த்துவிட முடியாது. மே.வங்கத்தில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடிந்த அவரால், தேசிய அளவில் அதை வளர்த்தெடுக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளிக்கும் எதையும் அவர் செய்துவிடவில்லை. அவர் ஒருவரால் மட்டும் அது முடியாது என்றாலும் பாஜகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் இணைப்பதிலும், அதை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் போதுமான அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.

வரும் காலங்களில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான மாற்றை வளர்த்தெடுப்பதற்கான அரசியல்ரீதியான தகுதிகளை அவர் வளர்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், பாஜகவுக்கான உண்மையான அரசியல் மாற்றாக முன்னிறுத்தப்பட அறரீதியாக அவர் எந்த அளவு தகுதியானவர் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. மே.வங்கத்தில் அவர் ஆட்சிக் காலத்தில் ஊழல், வன்முறை இரண்டும் பன்மடங்கு அதிகரித்திருப்பதை மறுத்துவிட முடியாது. அவற்றையும் தாண்டி, அவருடைய அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள், குறிப்பாகப் பெண்களுக்கான நலத்திட்டங்கள் மம்தாவின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்திருக்கின்றன. அத்துடன், பாஜகவின் இந்து தேசியவாதக் கருத்துகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமியர்கள், சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியாக மம்தாவின் பின்னால் அணிதிரண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் 141 தொகுதிகளில் 120-ஐ திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. மே.வங்கத்தில் இஸ்லாமியர்கள் தேசிய விகிதத்தைவிட மிக அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பின் மே.வங்கத்தில் நிகழ்ந்த வன்முறையில் ஆளும் கட்சியின் பங்கு குறித்த பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் மிகை இருக்கலாம். ஆனால், முற்றிலும் உண்மை இல்லாமல் இருக்க முடியாது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள கல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அளவுக்கு அதிருப்தி அடைந்திருப்பதையும் எளிதில் கடந்துவிட முடியாது.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பாஜகவுக்கான தேசிய மாற்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை அடைவதற்கு மம்தா பானர்ஜி அரசியல்ரீதியாகவும் அறரீதியாகவும் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x