Last Updated : 06 Oct, 2021 03:10 AM

 

Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM

ஜூலியஸ், பாட்டபூட்டியான்: மருத்துவ நோபல்

உலகையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் புரட்டிப்போட்ட பெருந்தொற்று, அதைத் தொடர்ந்து, அதை எதிர்த்துப் போராடுவதற்காகத் தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டும் இன்னும் கரோனாவை முழுவதும் வெற்றிகொள்ள முடியாத சூழல். இதற்கிடையே உடலியல் - மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு வந்திருக்கிறது. வெப்பநிலையையும் தொடுதலையும் மனித உடல் எப்படிக் கண்டுகொள்கிறது என்பது தொடர்பிலான கண்டுபிடிப்புகளுக்காக இந்த ஆண்டு மருத்துவ நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலைக்கும் தொடுதலுக்குமான உணர்வு ஏற்பிகள் தொடர்பிலான கண்டுபிடிப்புக்காக, அமெரிக்க அறிவியலர்கள் டேவிட் ஜூலியஸும் ஆர்டெம் பாட்டபூட்டியானும் நோபலைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

மிளகாயிலும் சிலந்தியின் விஷத்திலும் இருக்கும் வெவ்வேறு மூலக்கூறுகளை ஜூலியஸ் வெகு காலமாக ஆராய்ந்துவருகிறார். வெப்பநிலையையும் எரிச்சலூட்டும் வேதிப்பொருட்களையும் எப்படி நமது உடல்கள் கண்டுகொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி பெரிதும் உதவுகிறது. வலி சார்ந்த சிகிச்சையில் முன்னேற்றம் காண்பதற்கு வலிக்கும் நரம்பியலுக்கும் இடையே உள்ள புதிரை அவிழ்க்க வேண்டியது அவசியம். இந்தச் சூழலில் ஜூலியஸுடன் சேர்ந்து நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்டெம் பாட்டபூட்டியான், நமது தோலிலும் உள்ளுறுப்புகளிலும் குளிர் மற்றும் இதர இயக்கவியல் தூண்டல்களுக்கு எதிர்வினையாற்றுவதற்குத் திறன்வாய்ந்த உணரிகள் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவியிருக்கிறார்.

“நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் உணர்ந்தறியவும் அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்ளவும் காரணமான நரம்புமண்டலத் தூண்டுதல்களை வெப்பம், குளிர், இயக்கவியல் சக்திகள் ஆகியவை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையிலான மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் நோபல் விருதாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்று நோபல் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன கண்டுபிடித்தனர்?

1997-ல் ஜூலியஸும் அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து ‘நேச்சர்’ ஆய்விதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். மிளகாயில் உள்ள கப்சைசின் என்னும் வேதி மூலக்கூறு, எப்படி நமது தோலில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதன் உள்ளடக்கம். அதற்காக அவர்கள் டிஎன்ஏ துணுக்குகளின் நூலகம் ஒன்றை உருவாக்கி, அதற்குத் தொடர்புடைய மரபணுக்களைப் புரிந்துகொள்வதற்கு முயன்று, இறுதியாக நமது உடலில் கப்சைசின் உணரி இருப்பதைக் கண்டறிந்துவிட்டனர். அதற்கு டிஆர்பிவி1 என்று பெயரும் வைத்தனர். இந்தக் கண்டுபிடிப்பு, நமது உடலில் வெப்பத்தைக் கண்டுகொள்ளக்கூடிய மேலும் பல உணரிகளை அடையாளம் காண்பதற்கு உதவியது.

அடுத்து ஜூலியஸும் ஆர்டெம் பாட்டபூட்டியானும் தனித்தனியாக உணர்வு ஏற்பி ஒன்றைக் கண்டறிந்தனர். இது குளிரால் தூண்டப்படும் உணரி ஆகும். அதற்குப் பெயர் டிஆர்பிஎம்8. வலியையும் வெப்பநிலையையும் உணரும் நியூரான்களின் துணைக்குழுவில் உள்ள உணர்வு ஏற்பியாக இதை பாட்டபூட்டியானும் அவரது குழுவினரும் அடையாளம் கண்டனர்.

பாட்டபூட்டியான், இந்த உணர்வு ஏற்பிகளை இயக்கவியல்ரீதியாகத் தூண்ட முடியுமா என்பதை ஆராய்ந்து பார்த்தார். அவரது குழுவினரும் நுண்ணிய உறிஞ்சுகுழலைக் கொண்டு செல்களைக் குத்திப் பார்த்தபோது, பதிலுக்கு மின்சார சமிக்ஞையை அந்த செல் வரிசை வெளியிட்டதைக் கண்டனர். அவர்களில் அந்த செல்லில் ஒரேயொரு மரபணுவை அடையாளம் கொண்டு, அதைச் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, குத்தப்பட்ட செல்கள் குத்துதலை உணராமல் இருப்பதையும் கண்டனர். அந்தப் புதிய மின்திறன் கொண்ட மரபணுவுக்கு பியஸோ1 என்று பெயர் வைத்தனர்.

டிஆர்பிவி1, டிஆர்பிஎம்8, பியஸோ1 ஆகிய மூன்று உணரிகளும் நம் தோலில் இருப்பது அறியப்பட்ட பின்னர், நாட்பட்ட வலி சார்ந்த நோய்கள் பலவற்றுக்குச் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பது எளிதானது.

“உயிரியலில் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் மாபெரும் ரகசியங்களை அறிவதற்குப் படைப்பாற்றல், அறிவியல்ரீதியிலான தீவிரம், துணிவு ஆகியவை தேவை. அதற்கான உதாரணம்தான் டேவிட்டின் இந்தப் பங்களிப்பு. அவரது ஆச்சரியகரமான கண்டுபிடிப்பு, மனித ஆரோக்கியம் சார்ந்த முக்கியமான மருத்துவ முன்னெடுப்புகளுக்கு உதவியுள்ளது” என்கிறார், ஜூலியஸ் பேராசிரியராகப் பணிபுரியும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேந்தரான சாம் ஹாகுட்.

மிளகாயில் உள்ள கப்சைசின் மூலக்கூறு தொடர்பிலான ஆராய்ச்சிக்கான உந்துதலை ஜூலியஸ் ஒரு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்கின்போது பெற்றார். விதவிதமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த சில்லி சாஸ் குப்பிகளைப் பார்த்தபோதுதான் அவருக்கு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் ஷாப்பிங்கில் இருந்த மனைவியிடம் இதைப் பகிர்ந்துகொண்டபோது, அவரும் ஜூலியஸுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார். கலிஃபோர்னியாவின் ல ஹோயாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வு மையத்தில் பாட்டபூட்டியான் பேராசிரியராகவும் அறிவியலராகவும் இருக்கிறார். பாட்டபூட்டியானும் அவரது சகாக்களும் சேர்ந்து, தொடுதலை இனம்காணும் புரதங்களுக்கான மரபணுக்களான பியஸோ1, பியஸோ2-வைக் கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டு புரதங்களும் சக்தியூட்டப்பட்ட மின்திறன் வழிகளாகச் செயல்படுபவை என்று காட்டியுள்ளார்.

ஆர்மீனிய அமெரிக்கரான பாட்டபூட்டியான், போரால் உருக்குலைந்த லெபனானில் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர். 18 வயதில் அமெரிக்கா வந்த அவர், அந்த நாடு தனக்களித்த எந்த வாய்ப்புகளையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளவே கூடாது என்பதை முதலில் கற்றுக்கொண்டதாகக் கூறி, அமெரிக்காவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். நோபல் பரிசு அறிவிப்பையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தனது சகாக்கள் பலருடைய பங்களிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டேவிட் ஜூலியஸின் ஆய்வகத்தில் ஆய்வாளராக இருந்த எர்ஹூ காவோ, “வெப்பத்தை உணர்வது என்பது அடிப்படையான விஷயமாகும். நம்மால் வெப்பத்தை உணர முடியவில்லையானால், சூடான காபியை அது தெரியாமலேயே குடித்துக்கொண்டிருப்போம்… வலிக்கான எதிர்வினை என்பதே நம்மைப் பாதுகாக்கிறது” என்று ஜூலியஸின் பங்களிப்பை அங்கீகரித்துப் பேசுகிறார்.

நமது உடலியலின் பல்வேறு அம்சங்களைத் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகளை ஜூலியஸும் பாட்டபூட்டியானும் வழங்கியுள்ளனர் என்று அறிவியலர்கள் அவர்களைப் புகழ்கின்றனர். தொடுதல் தொடங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, கழிப்பறைக்குச் செல்வதற்கான உந்துதல் எல்லாவற்றுடனும் தொடர்புடையது அது. வலியையும் சந்தோஷத்தையும் எப்படிப் பிரித்து உணர்கிறோம் என்பதை நாம் இதுவரை அறியாமலேயே உடலின் அற்புதப் பலன்களை அனுபவித்துவந்துள்ளோம். நமது உடலையும் நமது புலன்சார் உலகத்தையும் புரிந்துகொள்வதற்கான மகத்தான திறப்பை ஜூலியஸும் பாட்டபூட்டியானும் காட்டியிருக்கிறார்கள் என்று அறிவியலர்களின் சமூகம் அவர்கள் இருவரையும் பாராட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x