Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM

போதைப் பொருட்கள் புழக்கம்: தீவிரக் கண்காணிப்பு தேவைப்படும் நேரமிது

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் கல்லூரிகளில் முன்புபோல நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். கரோனா பெருந்தொற்றின் காரணமாகத் தடைபட்டிருந்த கல்விச் செயல்பாடுகள், விரைவில் பழைய வேகத்தை எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், சமீப காலமாகப் போதைப்பொருட்கள் புழக்கம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலை அளிப்பதாய் அமைந்துள்ளன. கல்வி நிறுவன நிர்வாகங்களும் காவல் துறையும் இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டும்.

கரோனா காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே காணொளி வகுப்புகளில் கலந்துகொள்ளும் சூழல் உருவானது. ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் உரையாடும் வாய்ப்புகள் இல்லாமல் போனது ஒரு பெருங்குறை என்றாலும் அவர்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தார்கள் என்பது ஆறுதலான விஷயம். பொது முடக்கத்துக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, மிகச் சிறிய அளவில் பள்ளி மாணவர்களும்கூட போதைப் பொருட்களின் மாய வலைக்குள் சிறைபட்டிருந்தார்கள். பொது முடக்கம் அவர்களைத் தற்காலிகமாக அந்த வலைப்பின்னல்களிலிருந்து விடுவித்திருந்தது. கல்வி நிறுவனங்களின் மறுதிறப்புக்குப் பிறகு மீண்டும் அவர்கள் போதைப் பொருட்களை நோக்கி நகரும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

இளைஞர்கள் போதை மருந்துகளைப் பயன்படுத்தும் சம்பவங்கள் எங்கோ மும்பையில், சொகுசுக் கப்பலில் மட்டும் நடக்கவில்லை. நம்மைச் சுற்றி அத்தகைய சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. கடந்த சில தினங்களில், சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அனுப்பப்படக் காத்திருந்த போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி அருகே நடத்தப்பட்ட சோதனையில் ஆந்திரத்திலிருந்து பேருந்து வழியாகக் கடத்திவரப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 26 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகச் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இளைஞர்களையும் குறிப்பாக மாணவர்களையும் இத்தகைய தீய பழக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும் காவல் துறைக்கும் இருந்தபோதிலும் அது பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் முழு வெற்றி பெற முடியாது. நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில், இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரக் காணொளிகளை அரசே தயாரித்து வெளியிடத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில், பொதுமக்கள் காவல் துறையோடு பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு தகவலும் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்தும் வகையில் முன்னணித் திரை நட்சத்திரங்கள் அந்தக் காணொளிகளில் பேசுகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயனும் அந்தக் காணொளிகளில் மக்களுக்கு இத்தகைய கோரிக்கைகளை விடுத்துவருகிறார். அதுபோல, தமிழ்நாடு அரசும் காவல் துறையும் போதைப் பொருட்கள் புழங்குவதைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x