Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

காவல் துறையின் அதிரடி நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தட்டும்

கொலைக் குற்றப் பின்னணி உள்ளவர்களை முற்றுகையிட்டு, அவர்களிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிவரும் தமிழ்நாடு காவல் துறையின் தொடர் நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு தொடர்பில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதன் வெளிப்பாடுகளாகத் தெரிகின்றன. கடந்த செப்டம்பர் 23 அன்று இரவு தொடங்கி, அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ நடவடிக்கையில், பழைய கொலைக் குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் 3,325 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது பிடியாணை நிலுவையில் இருக்கிறது என்பது இத்தகைய முற்றுகை நடவடிக்கையின் தவிர்க்கவியலாத தேவையையும் உணர்த்துகிறது.

கைதானவர்களிடமிருந்து ஏழு நாட்டுத் துப்பாக்கிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளிடம் சர்வ சாதாரணமாகப் புழங்கும் கொலைக் கருவிகளின் எண்ணிக்கையானது, காவல் துறையின் அடுத்த கட்ட துரித நடவடிக்கைக்கான தேவையையும் ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை வாங்குபவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், வாங்குவதற்கான காரணம் ஆகியவற்றைப் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இரும்புப் பட்டறை உரிமையாளர்களையும் விற்பனையாளர்களையும் அழைத்து காவல் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இவ்வகையில், 579 கூட்டங்கள் நடத்தப்பட்டு, அக்கூட்டங்களில் கலந்துகொண்ட 2,548 விற்பனையாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளனர். மிகவும் தெளிவானதொரு திட்டமிடல் என்றே இந்தக் கூட்டங்களைக் கருத வேண்டும்.

விவசாயம், வீட்டு உபயோகங்களுக்குக் கத்தி, அரிவாள் போன்ற கருவிகள் தவிர்க்க இயலாதவையாக உள்ளன. அதன் காரணமாகவே இத்தகைய கருவிகளைத் தயாரிக்கவும் விநியோகிக்கவும் அனுமதிக்கப்பட்டுவருகிறது. ஆனால், இரும்புப் பட்டறைகளில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் கொலைக் கருவிகளின் விநியோகச் சங்கிலி இதுவரையில் முறையாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படவில்லை. காவல் துறையின் சமீபத்திய நடவடிக்கைகள், இரும்புப் பட்டறைகளிலும் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. இந்த விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் காவல் துறை ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கான செலவு, எல்லா பட்டறை உரிமையாளர்களுக்கும் இயலக் கூடியதல்ல. அவ்வாறான சூழல்களில், காவல் துறையே கேமராக்களை நிறுவிக்கொள்ளவும் வேண்டும்.

குற்றவாளிகள் என்று காவல் துறை அடையாளப்படுத்தும்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்ற நடத்தையர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் கவனமாகக் கையாளப்பட வேண்டியதும் அவசியம். கத்தி, வீச்சரிவாள் போன்ற வழக்கமான ஆயுதங்களோடு நாட்டுத் துப்பாக்கிகளையும் குற்ற நடத்தையர்கள் கையாளுகின்றனர் என்பது ஓர் எச்சரிக்கையாகக் கொள்ளப்பட வேண்டியது. தமிழ்நாட்டுக்குள் கள்ளத் துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டாலோ, வெளிமாநிலங்களிலிருந்து அவை கொண்டுவரப்பட்டாலோ அவற்றைக் கண்டறிந்து, உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x