Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

மக்களோடு முதல்வர்: நீளட்டும் திடீர் ஆய்வின் எல்லை

முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தருமபுரி செல்லும் வழியில், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் மேற்கொண்ட திடீர் ஆய்வு, பெருங்கவனத்தைப் பெற்றுள்ளது. முதல்வராகப் பதவியேற்ற சில நாட்களில், சேலத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்துவிட்டு, திருப்பூர் செல்லும் வழியில் மகுடஞ்சாவடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே போல அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டது, அப்போது முக்கியப் பேசுபொருளானது. முதல்வரின் திட்டமிட்ட பயணங்களுக்கு நடுவே அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இத்தகைய எதிர்பாராத ஆய்வுகள் ஒவ்வொரு அரசு அலுவலகத்தையும் எப்போதும் ஆய்வுக்குத் தயார் நிலையில் வைத்திருக்கத் தூண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு அரசு அலுவலகங்களிலிருந்து விரைவில் தீர்வுகள் கிடைக்கவும் இது உதவும். முதல்வரின் இத்தகைய திடீர் ஆய்வு உத்திகளை அவரது அமைச்சரவை சகாக்களும் பின்பற்றலாம்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதல்வர் அவ்வப்போது மிதிவண்டிப் பயிற்சி செல்லும் காட்சிகளும் அப்போது அவர் பொதுமக்களுடன் உரையாடும் காட்சிகளும் இணையவெளியில் பெருமளவில் பகிரப்பட்டுவருகின்றன. மக்களுடனான எதிர்பாராத இந்தச் சந்திப்புகளும் உரையாடல்களும்கூட அரசு நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திடக்கூடும். காமராஜர் தனது பயணத்தில் காரை நிறுத்தி, வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களுடன் பேசியதுதான் மதிய உணவுத் திட்டத்துக்குக் காரணமானது என்பது என்றென்றும் வழிகாட்டும் ஒரு வரலாற்று முன்னுதாரணம். கனிமங்கள் தோண்டப்படும் இடங்கள், கல்குவாரிகள், போக்குவரத்து ஆக்கிரமிப்புகள் போன்ற இடங்களுக்கும் முதல்வர் சென்று திடீர் ஆய்வு நடத்த வேண்டும். அப்போது ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் தவறிழைத்திருப்பது தெரியவந்தாலும் அவர்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மக்களைத் தேடித் தேடி வாக்குகள் சேகரிக்கிற அரசியல் தலைவர்களை, ஆட்சியில் அமர்ந்த பிறகு பார்க்கவே முடிவதில்லை என்ற பொது அபிப்பிராயத்தை முதல்வரின் எதிர்பாராத மக்கள் சந்திப்புகள் மாற்றக்கூடும். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, கட்சித் தொண்டர்களும்கூட முன்பு போல அவரை எளிதில் அணுக முடியாது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், மத்திய - மாநில அளவில் ஆட்சிப் பொறுப்பு என்பது ஒவ்வொரு நாளையும் பொழுதையும் ஓய்வின்றிச் செலவிட வேண்டிய கடமையையும் உள்ளடக்கியது. அதன் காரணமாக மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் எழும் தவிர்க்க முடியாத இடைவெளியை அரசு நிகழ்ச்சிகளும் பத்திரிகையாளர் சந்திப்புகளும் ஓரளவு இட்டுநிரப்புகின்றன. என்றபோதும், தலைவர்களின் இயல்பானதும் எதிர்பாராததுமான சந்திப்புகளே மக்களுடனான நெருக்கத்தை வளர்த்தெடுக்க உதவும். ஜனநாயக ஆட்சிமுறை என்பது மக்கள் அதன்மீது கொண்ட நம்பிக்கையையே அடித்தளமாகக் கொண்டது என்ற நோக்கில் பார்த்தால், தலைவர்கள் மக்களுடன் உரையாடுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் இந்த அரசமைப்பை இன்னும் வலுப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x