Last Updated : 22 Mar, 2016 09:06 AM

 

Published : 22 Mar 2016 09:06 AM
Last Updated : 22 Mar 2016 09:06 AM

நேசக்கரம் நீட்டுகிறது நேபாளம்

நேபாளப் பிரதமரின் இந்தியப் பயணம் இருநாடுகளுக்கு இடையிலான பகைக்கு முடிவுகட்டியிருக்கிறது



நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒலி கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியுடனும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனும் பேசிவிட்டுத் திரும்பினார். இரு நாடுகளுக்கும் இடையில் இருந்த கருத்து வேற்றுமைகள் தீர்ந்துவிட்டன என்றும் பேச்சுவார்த்தைகள் திருப்தி அளிப்பதாகவும் கூறிச் சென்றிருக்கிறார். நேபாளத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். “இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காகத்தான் இந்தியா செல்கிறேன்” என்று நேபாள நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டுத்தான் இந்தியா வந்தார்.

கருத்து வேறுபாடுகள்

நேபாளத்தில் 2013 தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டபோதுதான் பிரசாத் சர்மா ஒலிக்கும் இந்தியா தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. புதிய அரசியல் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னால் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராக ஆதரிப்பதாகவும் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பிறகு தன்னைப் பிரதமராக்க வேண்டும் என்றும் நேபாள காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் அவர் உடன்பாடு செய்துகொண்டார். புதிய நேபாள அரசு கூட்டாட்சியாகத்தான் இருக்க வேண்டும், மாதேசிகளுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்று மாதேசிகள் கோரிக்கை விடுத்ததை ஒலியும் விரும்பவில்லை, அவருடைய கட்சியும் ஆதரிக்கவில்லை.

மாதேசிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கும் விதத்தில் சில முடிவுகளை எடுக்க நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் சுசீல் கொய்ராலா விரும்பினார். இதனால் புதிய அரசியல் சட்டம் இறுதி வடிவம் பெறுவதும், தான் பிரதமராவதும் தாமதப்படும் என்று ஒலி கருதினார். முதலில் ஒப்புக்கொண்டபடி நடந்து, பதவியை என்னிடம் ஒப்படையுங்கள் என்றார். பிரதமர் பதவியிலிருந்து சுசீல் கொய்ராலா விலகினார். ஆனால், நேபாள காங்கிரஸ் கட்சியோ ஒலியைப் பிரதமர் ஆக்குவதற்குப் பதிலாக சுசீல் கொய்ராலாவையே மீண்டும் பிரதமராக நியமித்தது. இந்தியா சொல்லித்தான் இப்படி நடந்தது என்று ஒலியின் ஆதரவாளர்கள் கருதினர். இதனால், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இதர கட்சிகளுக்கும் தாராளமாகச் சில வாக்குறுதிகளை அளித்து கொய்ராலாவைத் தோற்கடித்துவிட்டு 38-வது பிரதமராகப் பதவியேற்றார் ஒலி.

மாதேசிகளின் கிளர்ச்சி

இதற்கிடையே மாதேசிகளின் கிளர்ச்சியால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெராய் பகுதியில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. மாதேசிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தப் பகுதியில் அமைதியும் ஸ்திர நிலையும் ஏற்பட வேண்டும் என்றும் இந்தியா கூறியதை அவர் வேறுவிதமாகப் புரிந்துகொண்டார். சரக்குப் போக்குவரத்தை அதிகாரபூர்வமற்ற முறையில் இந்தியாதான் தடை செய்து கொண்டிருப்பதாகவும் ஒலி கருதினார். முதல் முறையாக இந்தியாவும் நேபாளமும் பரஸ்பரம் காரசாரமான வார்த்தைகளை சர்வதேச அரங்கில் (ஜெனீவாவில்) பரிமாறிக்கொண்டன. நேபாள மக்களுடைய தேசிய உணர்வுகளைத் தட்டியெழுப்பிய ஒலி, இந்தியாவை எதிரிபோலச் சித்தரித்தார்.

போராட்டமும் அழுத்தமும்

மாதேசிகளின் போராட்டம் இவ்வளவு வலுவாக, இத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எனவே, இதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பதையும் யாரும் யோசிக்கவேயில்லை. ஆர்ப்பாட்டமாகத் தொடங்கிய கிளர்ச்சி, வாகன மறியல் போராட்டமாகத் தொடர்ந்தது. மாதேசிகளுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற அளவுக்குக் கிளர்ச்சி வளர்ந்தது. தெராய் பகுதியில் வர்த்தக நிறுவனங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டதால் மக்களுக்குத் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்ட பிறகு, அரசியல் சட்டத்தைத் திருத்தலாம் என்ற நேபாள காங்கிரஸ் கட்சியின் யோசனையை ஒலியால் ஏற்க முடியவில்லை. மாதேசிகளுடைய பகுதிக்குச் சென்று அவர்களுடைய கோரிக்கைகளை நேரில் கேட்பதற்குப் பதிலாக, நேபாள தேசிய உணர்வை மக்களிடையே உசுப்பிவிட்டார். நேபாளம் என்பது நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் பன்மைத்தன்மை உடைய நாடு என்பதையும் அனைவருடைய நம்பிக்கையையும் பிரதமர் பெற வேண்டும் என்பதையும் ஒருகணம் மறந்தார்.

நேபாளத்தில் உள்நாட்டுப் பிரச்சினைகள் கையை மீறும்போதெல்லாம், தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்ற பல்லவியை நேபாளத் தலைவர்கள் பாடுவது வழக்கமாகிவிட்டது. மாதேசிகளுக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுத்தால்தான், பாஜகவுக்கு பிஹார் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்பதற்காகவே இந்திய அரசு இதில் தலையிடுகிறது என்று பேசும் அளவுக்கு இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. பிரதமராகப் பதவியேற்ற உடனேயே நேபாளத்துக்கு நரேந்திர மோடி சென்றபோது ஏற்பட்ட நட்புணர்வும், மாபெரும் நிலநடுக்கத்தில் நேபாளம் சிக்கியபோது மின்னல் வேகத்தில் மீட்பு, உதவிக் குழுக்கள் நிவாரணப் பொருட்களுடன் சென்றபோது ஏற்பட்ட தோழமையும் பின்னாளில் வேகமாக மங்கியது.

இறுதியாக, நேபாளத் தலைவர்களுக்குத் தெளிவு பிறந்தது. புதிய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் மாதேசிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண முடியாது என்பதைப் பிரதமர் ஒலி உணர்ந்துகொண்டார். அந்த திருத்தங்களைத் தயார்செய்ததும் இந்திய அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் ஆக்கபூர்வமாக அதை அணுகினர். அத்துடன் மாதேசிகள் மறிக்கும் வழிகளில் அல்லாமல் வேறு மார்க்கங்கள் வழியாக அத்தியாவசியப் பண்டங்களை நேபாளத்துக்கு அனுப்ப முன்வந்தனர். இந்தப் போராட்டத்தைத் தங்களுக்குப் பாதகம் இல்லாமல் இனியும் தொடர முடியாது என்பதை மாதேசிகளும் உணர்ந்தனர். எனவே, சமரசத் தீர்வு அவசியம் என்று அவர்களும் ஏற்கத் தயாராகினர்.

புதிய அத்தியாயம்

பெரும் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தைத் தூக்கி நிறுத்துவதுதான் ஒலியின் முன்னர் இருக்கும் மிகப்பெரிய சவால். கடந்த ஜூன் மாதம் நடந்த வெற்றிகரமான சர்வதேச மாநாட்டுக்குப் பிறகு, நேபாளத்துக்கு உதவியாக 4.4 பில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டது. அது கைக்குக் கிடைக்கப்பெற்று வேலைகள் சுறுசுறுப்படைய வேண்டும். நிலநடுக்கத்துக்கு முன்னால் நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது அது 0% ஆகத்தான் இருக்கிறது.

நேபாளத்தின் மறுகட்டமைப்புக்கு இந்தியா 100 கோடி டாலர்களை உதவித்தொகையாக அறிவித்தது. இதில் 40% மானியமாகும். எஞ்சியவை குறைந்த வட்டியிலான நீண்டகாலக் கடனாகும். நேபாளத்துக்குச் சென்றிருந்தபோது மோடி 100 கோடி டாலர்களை நிதியுதவியாக அறிவித்திருந்தார். இரண்டையும் சேர்த்தால் 200 கோடி டாலர்கள் நேபாளத்துக்குக் கிடைக்கும். இரு நாடுகளின் அதிகாரிகள் அடுத்து சந்திக்கும்போது இந்தத் தொகையை எந்தெந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது என்ற இறுதிமுடிவு எடுக்கப்படும். குஜராத் மாநிலத்தின் புஜ் பகுதியில் நிலநடுக்கங்களைத் தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள வீடுகள், பொது கட்டிடங்களைப் பார்வையிட நேபாளப் பிரதமர் ஒலி மீண்டும் இந்தியா வரவிருக்கிறார்.

ஒலியின் இந்தியப் பயணத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகளை வளர்த்தெடுத்த பயனற்ற காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.

‘பக்கத்து நாடுகள்தான் முதலில்' என்ற மோடியின் கொள்கைக்குப் புத்துயிர் பிறந்திருக்கிறது. நேபாளத்தின் கவலைகளை உணர்ந்துள்ள இந்தியா, இரு நாடுகளுக்கும் பயன்தரும் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆர்வமாக இருக்கிறது.

- ராகேஷ் சூட், நேபாளத்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்

தமிழில்: சாரி

© ‘தி இந்து’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x