Published : 29 Sep 2021 03:20 am

Updated : 29 Sep 2021 05:17 am

 

Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 05:17 AM

சாலைகள் மேலே… பொறியியல் கீழே!

roads-of-tamil-nadu

மைசூர் சமஸ்தானத்தின் தலைமைப் பொறியாளராகவும் திவானாகவும் பணியாற்றிய விஸ்வேஸ்வரய்யாவின் (1860-1962) பிறந்த நாளான செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பொறியாளர்களின் மேல் வருத்தம் கொள்ளும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நான் அதற்குச் சாட்சியாக இருந்தேன்.

அன்றைய தினம் தென் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரத்துக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரில், நகராட்சி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாதாளச் சாக்கடை அமைத்துவருகிறது. பணிகள் நடந்துகொண்டிருந்தபோதும் அந்த ஊருக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாகப் பள்ளம் தோண்டப்பட்டு, கழிவு நீர்க் குழாய்கள் நிறுவப்பட்டுக்கொண்டிருந்தன. பல சாலைகளில் வாகனங்கள் போக முடியவில்லை. பாதசாரிகளும் மிகுந்த சாகசத்தோடு சாலைகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். இப்போது பிரதானக் குழாய்களும், ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் உரிமையாளர் தத்தமது கழிவறையிலிருந்து இணைத்துக்கொள்ள ஏதுவாகக் கிளைக் குழாய்களும் நிறுவப்பட்டுவிட்டன. பள்ளங்கள் நிரப்பப்பட்டுப் புதிய சாலையும் அமைக்கப்பட்டுவிட்டது. ஊருக்கு வெளியே கழிவு நீரகற்று நிலையத்தின் பணியும் நடக்கிறது. ஆனால், எல்லாம் சுபமாக முடிந்துவிட்டன என்று மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏன்? நகரின் பல இடங்களில் சீரமைக்கப்பட்ட சாலைகள் முக்கால் அடியிலிருந்து ஒரு அடி வரை உயரம் கூடியிருந்தன. இதை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

எந்த மராமத்துப் பணியின்போதும் சாலையின் மட்டத்தை உயர்த்தக் கூடாது. அப்படி உயர்த்தினால் சாலையின் இரு புறமும் உள்ள கட்டிடங்களின் மட்டம் தாழ்ந்துபோகும்... மழை வெள்ளம் கட்டிடங்களுக்குள் புகுந்துவிடும். இன்னும் பல சிக்கல்களும் இருக்கின்றன. சாலைக் கட்டுமான விதிகளின்படி, சாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் இடையே நடைபாதைகளும் உபகரணப் பகுதிகளும் இருக்க வேண்டும். உபகரணப் பகுதியில் தளத்துக்குக் கீழே குடிநீர், மழைநீர்க் குழாய்களும், மின்சாரத் தொலைத்தொடர்பு கேபிள்களும்; தளத்துக்கு மேலே மரங்களும், மின் கம்பங்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சர்வதேச விதிமுறைகள். ஆனால், இந்தியாவின் எண்ணற்ற சிறு நகரங்களைப் போல இந்த நகரத்திலும் நடைபாதையும் உபகரணப் பகுதியும் தனித்தனியானவை அல்ல, இரண்டும் ஒன்றுதான். இந்தப் பகுதி கான்கிரீட் தளமாக அல்ல, மண் தளமாகத்தான் இருந்துவந்தது. இதில் ஒரு பகுதியைத் திறந்தவெளி மழை நீர்க் கால்வாய் எடுத்துக்கொண்டது. மீதமுள்ள குறுகலான மண்தளத்தை மக்கள் நடைபாதையாகப் பயன்படுத்திவந்தார்கள். மேலதிகமாக இந்த அகலம் குறைந்த சாலைகளில் கார்கள் எதிரெதிராக வந்தால், ஒருவர் மற்றவருக்கு வழி விடுவார்; முதலாமவர், தனது வாகனத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி, பாதி தார் சாலையிலும் பாதி மண்தளத்திலுமாக நின்றுகொள்வார். லாரிகள் வரும்போது இரு சக்கர வாகனாதிகள் இந்த மண்தளத்தில் ஒதுங்கி நிற்பார்கள். இந்த பாதாளச் சாக்கடைப் பணி தொடங்குவதற்கு முன்னர் வரை இது இப்படித்தான் நடந்தது. எந்தப் புகாரும் இல்லாமல்தான் இருந்தது. எத்துணை குறைபாடு இருந்தாலும் அதே சாலை தங்களுக்கு மீளக் கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். சாலை கிடைத்தது. ஆனால், அதிர்ச்சிகரமாக அதன் உயரம் கூடிவிட்டது. வீடுகளுக்கும் சாலைக்கும் இடையே உள்ள மண்தளம் தாழ்ந்துவிட்டது. இதனால் வாகனங்கள் எதிரெதிராக வரும்போது யாரொருவராலும் ஒதுங்க முடியவில்லை.

அன்றைய தினம் அந்த ஊரின் சீரமைக்கப்பட்ட சாலையை ஒட்டியிருந்த நண்பரின் வீட்டிற்குப் போனேன். எனது கைபேசியில் பீப் ஒலியோடு ‘பொறியாளர் தின வாழ்த்துகள்’ வந்து விழுந்துகொண்டிருந்தன. நாங்கள் வீட்டின் முற்றத்தைத் தாண்டி வரவேற்பறையில் இருந்தோம். வாசற் கதவு ஒருக்களித்திருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே டெம்போவுக்கு வழிவிட்ட ஒரு ஸ்கூட்டர் இளைஞன், தாழ்வாக இருந்த மண்தளத்தில் சரிந்து விழுந்தான். டெம்போவிலேயே ஏற்றிக்கொண்டு மருத்துவரிடம் போனார்கள்.

நண்பருக்குச் சினம் பொங்கியது. ‘இப்படியான சாலைகளைப் போட்டுவிட்டு உங்களுக்கு எதற்குப் பொறியாளர் தினம்?’ என்று கேட்டார். அவர் மூன்றாண்டுகளாக வீட்டு வாசலில் எல்லா இன்னல்களையும் சகித்துக்கொண்டிருந்தவர். நவீனச் சாக்கடை வரும், புதிய சாலை வரும் என்று காத்துக்கொண்டிருந்தவர். ஆனால், கூடவே இப்படி ஒரு புதிய பிரச்சினை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த வீட்டில் 30 ஆண்டுகளாக வசிக்கிறார். நகராட்சிக்கும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் நேரான, மறைமுகமான வரிகள் எல்லாவற்றையும் செலுத்திவருகிறார். அவரும் அந்த ஊர் மக்களும் இன்னும் நல்ல சேவையைப் பெறத் தகுதியானவர்கள். ஆனால் ஏன் இப்படி நடக்கிறது?

இந்த பாதாளச் சாக்கடையையும் சாலைச் சீரமைப்பை யும் பொறியாளர்கள்தான் வடிவமைத்திருப்பார்கள், கட்டுமானப் பணியை மேற்கொண்டவர்களும் மேற்பார்த்தவர்களும் பொறியாளர்களாகத்தான் இருப்பார்கள். எனில், இப்படியான பிழைகள் நேர்கின்றனவே, எப்படித் தவிர்ப்பது?

திட்ட வரைபடங்கள் முழுதாகத் தயாரிக்கப்பட வேண்டும். அவை வேறு அனுபவம் மிக்க பொறியாளர்களால் சரிபார்க்கப்பட வேண்டும். பிறகு, தகுதிவாய்ந்த பொறியாளர்கள் ஒப்புதல் நல்க வேண்டும். திட்டத்தைப் பற்றிய எல்லாக் கூறுகளையும் பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டு கருத்துக் கேட்க வேண்டும். மூன்றாண்டுக் காத்திருப்புக்குப் பிறகு சாலை உயருமென்று தெரிந்திருந்தால், மக்கள் தங்கள் எதிர்ப்பை அப்போதே தெரிவித்திருப்பார்கள்.

தேர்வாணைக் குழுதான் அரசுப் பணிகளுக்குத் தகுதியான பொறியாளர்களைத் தெரிவுசெய்கிறது. அரசுப் பணியில் சேரும் பலரும் நிறையக் கனவுகளோடுதான் சேர்ந்திருப்பார்கள். ஆனால், உள்ளே வந்ததும் இந்த அமைப்போடும் இதன் குறைபட்ட நிர்வாகத்தோடும் அவர்கள் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர்களும் இந்தப் பல்சக்கரத்தின் அங்கமாகிவிடுகிறார்கள். வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் சமரசம் செய்துகொள்கிறார்கள். இவர்களில் பலரும் முன்னேறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்வதில்லை. விளைவாக வியட்நாம், வங்கதேசம், இலங்கை போன்ற சிறிய நாடுகள்கூட செய்யத் துணியாத, சாலையை உயர்த்திக் கட்டும் வேலையை இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் செய்கிறோம். இதற்கு என்ன தீர்வு?

நம்முடைய நிர்வாகமும் அமைப்பும் மக்களுக்கான சேவையை முன்னிறுத்தித் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியல் தலைமை அதை வழிநடத்த வேண்டும். அந்த அமைப்பில் பொறியாளர்களின் வடிவமைப்பும் கட்டமைப்பும் தரமானதாகவும் வெளிப்படைத்தன்மையோடும் விளங்கும். அப்போது பொறியாளர் தினத்தில் என் நண்பர் எனக்கு வாழ்த்துச் சொல்லவும் கூடும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
பொறியாளர் தினம்பாதாளச் சாக்கடைகழிவு நீர்க் குழாய்கள்சாலைகள்மழைநீர்க் குழாய்மின்சாரத் தொலைத்தொடர்பு கேபிள்சர்வதேச விதிமுறைகள்Roads of tamil nadu

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x