Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

விவசாயத்தைப் பாதுகாக்கும் வேளாண் சட்ட முன்வடிவு

வேளாண் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பாகக் கடந்த 2020 செப்டம்பரில் மத்திய அரசு இயற்றிய மூன்று சட்டங்களை எதிர்த்து, செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதே தேதியில்தான் குடியரசுத் தலைவர் அந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், வேளாண்மையுடன் நேரடித் தொடர்புடைய மற்றொரு சட்டத்துக்கான முன்வடிவு குறித்து எதிர்க்கட்சிகளும் சரி, விவசாயிகளும் சரி... இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடந்த மார்ச், 2020-ல் மாநிலங்களவையில் பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் (Pesticide) மேலாண்மைச் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தியுள்ளார். 1968-ல் இயற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள் (Insecticide) சட்டத்துக்குப் பதிலாக இந்தச் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் பாதுகாப்பான வகையில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்குகளைக் குறைப்பதும் இச்சட்டத்தின் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதற்காகத் தயாரிப்பு, ஏற்றுமதி, விற்பனை, இருப்பு, விநியோகம், பயன்பாடு என அனைத்து நிலைகளிலும் ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை இச்சட்ட முன்வடிவு முன்வைக்கிறது.

தொழில் துறையினரின் எதிர்ப்பு

புதிய சட்ட முன்வடிவு சட்டமானால், பழைய சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்த அனைத்து பூச்சிக்கொல்லிகளையும் மீண்டும் புதிய சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய வேண்டும். புதிய சட்டத்தின்படி அத்தகைய பதிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்பதால், வேளாண்மை தொடர்பான வேதித் தொழில் துறை பாதிக்கக் கூடும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன. விவசாயத்துக்கான வேதிப்பொருட்கள் யாவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால்தான், விவசாய இடுபொருட்களின் விலை குறைவாக இருக்கும். ஆனால், இந்தச் சட்ட முன்வடிவு விவசாயத்துக்கான வேதிப்பொருட்கள் தயாரிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்றரீதியிலும் விமர்சனங்கள் எழுகின்றன. புதிய சட்ட முன்வடிவின் படி, இந்தியாவின் பயன்பாட்டுக்கென பதிவுசெய்யப்படாத எந்தவொரு பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லியையும் தயாரிக்கவும் ஏற்றுமதி செய்யவும் கூடாது என்பது கட்டாயமாகிறது. இந்த விதிமுறை, வேலைவாய்ப்புகளையும் அந்நியச் செலாவணியையும் குறைக்கும் என்ற நோக்கிலும் தொழில்துறையினரிடமிருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லியின் பதிவை இடைநிறுத்தி வைக்கவும் நீக்கவும் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடைசெய்யவும் மதிப்பீட்டுக் குழுவுக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது. எனவே, மதிப்பீட்டுக் குழுவின் முடிவுகளை மேற்பார்வையிட சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வேளாண்மைப் பயன்பாட்டுக்கான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வோர் வலியுறுத்திவருகிறார்கள். இந்தச் சட்டம் விவாதிக்கப்படாமல் தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால், உரிய நேரத்தில் பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் கிடைக்காமல் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும். அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள். விவசாயிகளின் நலன்களைக் காட்டிலும் அவர்களது தொழில்சார் நலன்களே இந்த எதிர்ப்புக்கான முக்கிய காரணம்.

ஆசியாவிலேயே பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் இந்த வேதிப்பொருட்களை விவசாயத்தில் பயன்படுத்துகின்றன. இவ்வளவு பெரிய தொழில் துறையைச் சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளுக்கு இழப்பீடு

விவசாயிகளிடம் பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. தரம் குறைந்தவற்றாலும் போலிகளாலும் அவர்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் பயன்படுத்திய பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் போலியானதாக இருந்தாலோ தரம் குறைவானதாக இருந்தாலோ அதன் காரணமாக ஏற்படும் இழப்புகள் ஈடுசெய்யப்பட வேண்டும் என்பது முந்தைய சட்டத்தில் இல்லாத புதிய சட்ட முன்வடிவின் சிறப்பம்சம். ஆனால், சட்டரீதியான முறையில் விநியோகிக்கப்பட்ட பூச்சிக்கொல்லியைத் தவறான முறையில் விவசாயிகள் பயன்படுத்தினால், அதற்கான இழப்புக்கு எங்களை எப்படி பொறுப்பாக்கலாம் என்பது நிறுவனங்களின் கேள்வியாக உள்ளது.

பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டும், அதற்கான ஒரு தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதும் இந்தச் சட்ட முன்வடிவின் முக்கிய நோக்கம். குறிப்பிட்ட ஒரு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு என்னென்ன தீங்குகள் விளையக்கூடும் என்பதும் அதற்கான மாற்றுகள் என்னென்ன என்பதும் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். இந்தத் தகவல்கள் அனைத்தும் இணையவெளியில் வெளிப்படையான முறையில் கிடைக்க வேண்டும் என்பதோடு, விவசாயிகள் தங்களது தாய்மொழியில் படித்துத் தெரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அமைய வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளால் விளையும் தீங்குகளின் அளவையும் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த முன்னெடுப்புகள் அமையும்.

இயற்கை வேளாண்மை

பூச்சிக்கொல்லிகள் தொடர்பிலான விளம்பரங்கள் அனைத்தும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். இதன் மூலம், வேளாண்சார் வேதித் தொழில் நிறுவனங்கள் விவசாயிகளிடம் தவறான உறுதிமொழிகளை அளிப்பது தவிர்க்கப்படும். பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளைக் கண்காணிக்கும் மத்தியக் குழுவில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மட்டுமின்றி விவசாயப் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள். ரசாயனங்களைப் பயன்படுத்தாமல், முற்றிலும் இயற்கை முறையிலேயே பூச்சிகளையும் பூஞ்சாணங்களையும் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை ஊக்கப்படுத்துவதும் இந்தச் சட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், இயற்கை வேளாண்மைக்கு ஊக்குவிப்பு என்பது போன்ற அம்சங்கள் பூச்சி மற்றும் பூஞ்சணக்கொல்லிகள் மேலாண்மைச் சட்டத்தின் வரவேற்புக்குரிய அம்சங்கள். தொழில் துறையினர் தங்களின் லாபத்தை விட்டுத்தர மனமின்றி, அரசுக்கு மறுபரிசீலனை கோரிக்கைகளைத் தொடர்ந்து விடுத்துவருகிறார்கள். மண்வளத்தையும் சூழலையும் பாதுகாக்க முனையும் ஒரு சட்ட முன்வடிவு குறித்து விவசாயிகளின் பிரதிநிதிகள் இன்னும் ஏன் விவாதிக்கத் தொடங்கவில்லை?

- செல்வ புவியரசன்.

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x