Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

எண்ணிமப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை

செல்வமுரளி

புதிதாக உருவாகிவரும் எண்ணிமப் பொருளாதாரம் (Digital Economy) என்ற துறையில் பல ஆண்டுகளாக இந்தியா கோலோச்சிவருகிறது. ஆனால், பிற நாடுகளும் எண்ணிமப் பொருளாதாரத்தைக் குறிவைத்து இயங்குகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேற்கத்திய நாடுகள் தங்கள் பணிவாய்ப்புகளை விரும்பி ஒப்படைக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. அதனால், இங்கு பல விதமான வேலைவாய்ப்புகள் உருவாயின. இதனால் கிடைக்கும் பண வாய்ப்புகளையே இங்கே எண்ணிமப் பொருளாதாரம் என்கிறோம்.

அயல்பணி ஒப்படைப்பு (அவுட்சோர்சிங்) துறையில் அதிகமானோரைக் கொண்டு நிறைய வேலைவாய்ப்புகளைப் பெற்ற நாடு இந்தியா. மென்பொருள் உருவாக்கம், பல்லூடக வடிவமைப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், புதிய தகவல்களை உருவாக்குதல், மொழிபெயர்ப்பு, தரவுப் பதிவு (டேட்டா என்ட்ரி), அலுவலகரீதியான வேலை, தேடுபொறி இசைவாக்கம், வெப் டிசைன் எனப் பல அயல்பணிகளுக்கு இந்தியாவில்தான் அதிகமான பணியாளர்கள் உள்ளனர்.

சீனாவிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில்தான் மக்கள்தொகைக் கட்டுப்பாடு அறிமுகமானது. ஆனால், சீனாவில் அந்தச் சட்டம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், பொறுப்புடனும் பின்பற்றப்பட்டது. பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தியாவில் ‘குடும்பக் கட்டுப்பாடு’ சட்டமாக ஆக்கப்படவில்லை. மாறாக, பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. விளைவு, தற்போது சீனாவில் வயதானவர்கள் விகிதம் அதிகம். இந்தியாவில் இளைஞர்கள் விகிதம் அதிகமானது. உலகின் அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடு இந்தியா என்ற பெயர் இப்போது நமக்கு இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

உலகின் ஒட்டுமொத்த எண்ணிமப் பணியாளர்களில் இந்தியாவிலிருந்து 24% பேர் உலகின் மற்ற நிறுவனங்களுக்காகப் பணியாற்றுகின்றனர். என்றாலும் தற்போது இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள எல்லா நாடுகளும் முயற்சி செய்கின்றன. அந்நியச் செலாவணி மூலம், தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட அவை முனைகின்றன. இப்படி எல்லா நாடுகளும் தங்கள் நாட்டில் எண்ணிமப் பணிகளை மேம்படுத்த உத்வேகத்துடன் செயல்படும்போது, இந்தியாவில் என்ன நடக்கிறது?

குறைந்து வரும் பொறியியல் மோகம்

அதிகமான பொறியாளர்களை உருவாக்கிய இந்தியாவில், மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பதால், பல இடங்களில் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. ஒருபுறம் பொறியாளர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மறுபுறம், பொறியியல் கல்லூரிகள் குறைந்துவருவதால் அதில் பணியாற்றிய பலரும் வேலையிழந்து நிற்கின்றனர். மாணவர்களிடையே பொறியியல் ஆர்வம் குறைந்தது ஏன் என்று பலவிதமான ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், யதார்த்தத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய மறந்துவிட்டன.

ஆம்... நவீனத் தொழில்நுட்பத்தில் நாள்தோறும் பல புதுமைகள் புகுத்தப்படும் நிலையில், அவற்றுக்கேற்ற பாடத்திட்டங்களை வகுத்து, மாணவர்களுக்கு அறிவுத்திறனை ஊட்ட வேண்டியது அவசியம். ஆனால், பல பொறியியல் கல்லூரிகள் இதில் பின்தங்கியே இருக்கின்றன. இதனால் வருங்காலத் தொழில்நுட்பங்களில் மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இந்தத் திறன் இழப்பால், எண்ணிமப் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்கள் வாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் வளர்ச்சி

உலக அளவில் வேலைக்கு ஏற்ற நபர்களைக் கொடுப்பதில் நமது அண்டை நாடான வங்கதேசம் இப்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்நாடு, ஆண்டுக்கு இத்துறையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது. உலக எண்ணிம வேலைவாய்ப்புச் சந்தைக்குப் பணியாட்களைக் கொடுப்பதில் இந்தியாவின் பங்கு 24.6% எனும்போது, வங்கதேசத்தின் பங்கு 16.8% ஆக உள்ளது. ஒரு சிறிய நாடான வங்கதேசத்தில் இப்போது ஆறரை லட்சம் பேர் பணியாற்றப் பெயரைப் பதிவுசெய்துள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம் மட்டுமல்ல, கூடவே பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், உக்ரைன், கனடா, ருமேனியா, எகிப்து, ஜெர்மனி, ரஷ்யா, கென்யா, நைஜீரியா, இத்தாலி, ஸ்பெயின், இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் அந்தப் போட்டியில் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நாடுகள் போட்டியில் நம்மை விட்டுச் சற்று பின்தங்கி இருந்தாலும், அவை நம்மை முந்த முயல்கின்றன என்பதே நிதர்சனம்.

இந்தியா மக்கள்தொகை அதிகமுள்ள நாடு. குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த நாடு. அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பை உறுதி செய்யவேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. எல்லா நாடுகளும் இந்தப் போட்டியில் இணையும்போது நம்முடைய இடத்துக்குப் பலத்த போட்டி வரும்.

வெளிநாடுகளின் திட்டங்களை நம்பியிருக்கும் நிலையை மாற்றி, உள்நாட்டிலேயே மென்பொருட்கள், செயலிகள், வன்பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ‘ஆப்பிள்’ செல்பேசிகளுக்கான இயங்குதளத்தை அந்த நிறுவனம் தந்துவிட்டு, அதில் இயங்கும் செயலிகளை உலகம் முழுவதிலிருந்தும் உருவாக்குவதுபோல விரைவில் இந்தியாவிலிருந்தும் உலகம் முழுதும் பயன்படுத்தும் பொருட்களையோ, சேவைகளையோ நாம் உருவாக்க வேண்டும். இந்தியாவிலிருந்தும் நவீன இயங்குதளங்களை உருவாக்கினால், அவை நமக்கு ஏதுவான பணிகளை மேற்கொள்ள வழியமைக்கும்.

அடுத்து, எண்ணிம விவசாயம், எண்ணிம மருத்துவம், எண்ணிம வேலையாட்கள் – ரோபாட்கள், ஆளில்லா கார்கள் எனப் பல புதிய துறைகள் உருவாகும். இன்று என்னென்ன துறைகள் உள்ளனவோ அந்தத் துறைகளுக்கு முன் ‘எண்ணிம’ என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளலாம். அந்தப் புதிய துறைகளில் வரவிருக்கும் வாய்ப்புகளைக் கைப்பற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்.

கல்வியில்தான் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம் முழுமையான கல்வியில்தான் உள்ளது. தற்போதுள்ள பாடத்திட்டங்களை இன்னமும் மேம்படுத்தி, அவற்றை நம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்கள் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய நிலையில் நமது அரசு உள்ளது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த உலகுக்கு என்னென்ன தேவைகள் உள்ளனவோ அவற்றை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அப்படிச் செய்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறைக்கு வேலைவாய்ப்புகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.

இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்துக்குத் தயாராகிவரும் நிலையில், கல்லூரி மாணவர்களிடம் தங்கள் தேவையை எடுத்துச் சொல்லி அவர்கள் மூலம் அதைப் பூர்த்திசெய்வதன் மூலம், மாணவர்கள் இன்னமும் அனுபவம் பெறுவார்கள். ‘இப்போதும் இன்டர்ன்ஷிப் இருக்கே’ என்பதல்ல பதில், இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும், தொழில்நிறுவனங்கள் உடனான கல்வி நிறுவனங்களின் பிணைப்பு இன்னமும் அதிகமாக வேண்டும்.

எனவே, இந்தியா இப்போது கல்விக் கழகங்கள், நிறுவனங்கள், மாணவர்கள் ஆகிய முத்தரப்புகளையும் ஒருங்கிணைத்து, உலக எண்ணிமப் பணிகளை அதிகமாகப் பெற வேண்டியதும், புதுப் புதுத் தயாரிப்புகளையும் சேவையையும் கண்டுபிடிப்பதும் அவசியமாகிறது. எதிர்கால உலகம் எண்ணிமத்தில்தான் உள்ளது. எனவே, இப்போதாவது இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

- செல்வமுரளி, தகவல் தொழில்நுட்ப ஆலோசகர். தொடர்புக்கு: murali@visualmediatech.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x