Published : 26 Sep 2021 03:24 am

Updated : 26 Sep 2021 12:43 pm

 

Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 12:43 PM

எஸ்பிபி எனும் பொதுச் சொத்து

sp-balasubramaniam
ஓவியம்: ஜீவா.

“எஸ்பிபி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், அவரது இழப்பை உணரவே முடியவில்லை” என்றார் நண்பர் ஒருவர். அவரும் என்னைப் போல், உங்களைப் போல் எஸ்பிபியின் ஆத்மார்த்தமான ரசிகர்தான். அவரும் நம்மில் பெரும்பாலானோரைப் போல எஸ்பிபியின் பாடல்களுடன் நாளைத் தொடங்குபவர்தான். “எப்படி இவ்வாறு சொல்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “எஸ்பிபியை ஒரு முறைகூட நேரில் பார்த்ததில்லை. அவரது குரலும் உருவமும் மட்டும் என் மனதில் படிந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டன. இன்றைக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எனக்காகப் பாடிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். இறப்பு என்பது ஸ்தூல உடலுக்குத்தானே!” என்றார் நண்பர். எனினும், அவரது குரலில் இழப்பின் வலி தெரிந்தது. ‘எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே...’ என்று உருகிவழியும் எஸ்பிபியின் குரல், அவரது மனச் செவியிலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

கலைஞர்களின் இழப்பை எளிய ரசிகர்கள் இப்படித்தான் கடந்துவருகிறார்கள். மரணத்தைத் தாண்டிய வாழ்வு கலைஞர்களுக்கு வாய்த்துவிடுவது இப்படித்தான். கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்திய எஸ்பிபியும் தனது குரல் வழியே இவ்வாறாகத்தான் தன் வாழ்க்கையைத் தொடர்கிறார்.


கடைசித் தலைமுறைக் கலைஞர்

உண்மையில், எல்லாத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையிலான உணர்வு வெளிப்பாட்டைக் கொண்டிருந்த கடைசித் தலைமுறைக் கலைஞர் என்றே எஸ்பிபியைச் சொல்லலாம். மேதைமையை வெளிக்காட்டுவதைவிடவும், கதாபாத்திரத்தின் குணாதிசயம், சூழலின் தன்மை, பாடல் வரிகள் கோரும் பிரத்யேக உச்சரிப்பு, இசையமைப்பாளரின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் உடனடியாக உள்வாங்கிக்கொண்டு, அபாரமான தனது கற்பனையையும் சேர்த்திழைத்துப் பாடிக் கொடுத்தவர் அவர். சராசரியாக ஐந்து நிமிடங்கள் ஒலிக்கும் திரைப்பாடலில், வெவ்வேறு உணர்விழைப் பின்னல்களை வெளிப்படுத்தத் தெரிந்த எஸ்பிபி, அதன் மூலம் எளிய ரசிகர்களின் மனங்களைக் குளிர்வித்தார். அவர்களுடைய வாழ்க்கையின் சிறப்புத் தருணங்களில் அவர்களின் குரல் பிரதியாக இருந்தார். திரைப்பாடல் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டு, அதற்கேற்ப நடிகர்கள் நடிக்க வேண்டியிருக்கும் என்பதால், நடிகர்களின் முகபாவனை, உடல்மொழி என எல்லாவற்றையும் தானே உருவகித்துக்கொண்டு மெருகூட்டிப் பாடித் தந்துவிடுவார். ஏறத்தாழ, திரைக்குப் பின்னே ஒரு நிகழ்த்துக் கலையை எஸ்பிபி செய்துகாட்டிவிடுவார். அதில் ஐம்பது சதவீதத்தை நடிகர் எட்டிவிட்டாலே அவரது நடிப்பு, ரசிகர்களைத் திருப்திப்படுத்திவிடும். திரைப்பாடல் உருவாக்கத்தில் இது அடிப்படையான விஷயம்தான். ஆனால், இவ்விஷயத்தில் எஸ்பிபி காட்டிய அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவர் பாடிய பாடல்களுக்குச் சாகாவரத்தைப் பெற்றுத்தந்திருக்கின்றன. ஏதோ ஒரு நடிகருக்காகப் பாடியவர் என்பதைத் தாண்டி, எனக்காக, என்னைப் போலப் பாடியவர் என்று ரசிகர்கள் அவரை ஆராதிக்க இவையெல்லாம் முக்கியக் காரணிகளாக அமைந்தன.

கடவுளின் குரல்

முறைப்படி இசை பயிலாத அந்த சுயம்புக் கலைஞனின் இசை வாழ்க்கை உச்சம் தொட்டதன் பின்னணியில் இருப்பது அவரது உள்ளார்ந்த ரசனை. தென்னிந்தியத் திரையுலகில் ராஜாங்கத்தை நடத்தி, பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்து, பல்வேறு விருதுகளை வென்ற பின்னரும், முகமது ரஃபியின் குரலுக்கு எளிய ரசிகனாக இறுதிவரை இருந்தார் எஸ்பிபி. அதாவது, நமக்கு எஸ்பிபி எப்படியோ, அப்படி ரஃபி அவருக்கு இருந்தார். தொலைவில் இருந்தே தனது மானசீக குருவை அவர் ரசித்துக்கொண்டிருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது தான் யார் என்று சொல்லிக்கொள்ளாமலேயே ரஃபியின் காலைத் தொட்டு வணங்கினார். நாள் முழுக்க ஒலிப்பதிவுக் கூடத்திலும், மேடைகளிலும் பாடல்களைப் பாடிவிட்டு வீடு திரும்பிய பின்னர் ஒரு ரசிகனாக மாறி ரஃபியின் பாடல்களில் தன்னைக் கரைத்துக்கொண்டார். தானே ஒரு புகழ்பெற்ற பாடகர் என்பதையெல்லாம் கடந்து, ஒரு அடிமட்ட ரசிகனாகத் தன்னை ஒப்புக்கொடுக்க எஸ்பிபி எத்தனைப் பணிவானவராக, இசை ரசனைக்கு உண்மையானவராக இருந்திருக்க வேண்டும்!

நடிகர் ஜிதேந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ரஃபியின் நினைவேந்தல் கூட்டம் ஒன்றில், ஒரு ரசிகன் எனும் முறையில் எஸ்பிபி, அவரைப் பற்றிப் பேசிய வார்த்தைகள் இன்றைக்கு அவருக்கு 100% அப்படியே பொருந்துகின்றன. “நான் பொறியியல் மாணவனாக இருந்தபோது சைக்கிளில் கல்லூரிக்குச் செல்வேன். அப்போது ஒரு டீக்கடையில் வானொலியில் இந்திப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அதில் குறிப்பிட்ட ஒரு பாடல் ஒலிக்கக் கேட்டால் அங்கேயே நின்றுவிடுவேன். அதைக் கேட்க கேட்க என் கண்களிலிருந்து நீர் வழியும். அதைக் கவனித்த டீக்கடைக்காரர், ‘ஏன் அந்த ஒரு பாடலைக் கேட்கும்போது மட்டும் அழுகிறாய்?’ என என்னிடம் கேட்டார். ‘எனக்குத் தெரியவில்லை’ என்றுதான் நான் அவரிடம் சொன்னேன்” என்றார் எஸ்பிபி. அந்தப் பாடல், ‘தீவானா ஹுவா பாதல்’ (காஷ்மீர் கி கலீ-1964). ரஃபியின் பாடல்தான். பின்னர், எஸ்பிபியே ஒரு பாடகராகிப் புகழ்பெற்ற பின்னர் தனது கண்ணீருக்கான காரணத்தைக் கண்டடைகிறார். ஒரு நாள் அதே டீக்கடைக்குச் செல்கிறார். டீக்கடைக்காரரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பாடலைக் கேட்டு அழுததற்கான காரணத்தைச் சொல்கிறார்: “அதுவரை மனிதர்கள் பாடித்தான் கேட்டிருக்கிறேன். அப்போதுதான் முதல் முறையாகக் கடவுளின் குரலைக் கேட்டேன்.”

இன்று மேடைக் கலைஞர்கள் முதல் திரைக் கலைஞர்கள் வரை எத்தனையோ பேர் எஸ்பிபியைக் கடவுளாக வணங்குகிறார்கள். தான் பாடும்போது எங்கோ ஒரு இடத்தில் எஸ்பிபியைத் தொட்டுவிட்டதாக நினைக்கும்போது சிலிர்த்துக்கொள்கிறார்கள். இசை ரசனையில் திளைத்த எஸ்பிபி, ரஃபியிடமிருந்தும் பிற மேதைகளிடமிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டார். பாடகர் உச்சரிக்கும் ஒரு வார்த்தை ரசிகருக்குள் எத்தனை உணர்வுகளை விதைக்க முடியும் என்பதை, தானே கேட்டு ருசித்து மனதில் பதியவைத்துக்கொண்டார். அவற்றையெல்லாம் தன் பாடல்களில் நேர்த்தியாக, முழுமையாக, இன்னும் செறிவுடன் வாரி வழங்கினார்.

இசையைப் பரிமாறிக்கொண்டவர்

மேடைகளில் எஸ்பிபியின் இருப்பு, ரசிகர்களை மட்டுமல்ல, சக பாடகர்கள், இசைக் கலைஞர்கள், விழா ஏற்பாட்டாளர்கள், ஒலி அமைப்பாளர்கள் என அனைவரையும் இலகுவாக, உற்சாகமாக உணரவைத்தது. சக கலைஞர்களின் பங்களிப்பை, அவர்களின் உழைப்பை ரசிகர்கள் கவனிக்கத் தவறினாலும் எஸ்பிபி விட்டுவிட மாட்டார். அதைச் சுட்டிக்காட்டி கைதட்டல்களைப் பெற்றுத்தந்துவிட்டுப் புன்னகையுடன் ரசிப்பார். ஒலிப்பதிவுக் கூடத்தில் செய்ய முடியாத ஜாலங்களை, மீறல்களைப் பாடலின் ஆன்மாவைச் சிதைக்காமல் மேடைகளில் மெருகூட்டித் தருவார். தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் எஸ்பிபியின் பங்கேற்பு, பல இறுக்கங்களைத் தகர்த்தது. பாவனையற்ற அன்புடன் புதிய திறமைசாலிகளை அவர் அங்கீகரித்தார். கொண்டாடினார். ஒரு மூத்த கலைஞராகத் தனது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். நுட்பங்களைக் கற்றுத்தந்தார். இசை என்பதை ஒருவழிப் பாதையாக மட்டும் கருதாமல், ரசிகர்களுடனான, பரிமாற்றத்துக்கான அம்சமாகவே கருதினார்.

‘என்ன சத்தம் இந்த நேரம்...’ பாடலை இன்று இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள். மெளனமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியிலிருந்து ஒரு குவளை நீரை அள்ளித் தருவதுபோல, அத்தனை குளிர்ச்சியுடன், பாந்தத்துடன், பரிவுடன் எஸ்பிபி பாடியிருப்பார். ஒலிப்பதிவில் இருக்கும் அதே துல்லியத்துடன், அதே உணர்வுடன் நள்ளிரவு நேர இசைக் கச்சேரியிலும் அவரால் பாட முடியும்.

இவை அத்தனையையும் தேவ ரகசியமாகத் தன்னிடமே புதைத்துக்கொள்ளாமல், ரசிகர்களின் பொதுச் சொத்தாக வழங்கிவிட்டார் எஸ்பிபி. ஆம், ரசிகர்களின் மனதில் சாஸ்வதமாக வாழ்கிறார் எனும் நினைவஞ்சலி வாசகம், எஸ்பிபியைப் பொறுத்தவரை சம்பிரதாயமானதல்ல!

செப்டம்பர் 25: எஸ்பிபி நினைவுநாள்
Sp balasubramaniamSp balasubramaniam memorialSp balasubramaniam songsSPBSPB songsSpb ilayarajaஎஸ்பிபி எனும் பொதுச் சொத்துஎஸ்பிபிஎஸ்பிபி நினைவுநாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x