Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவது ஏன்?

பெ.சுப்ரமணியன்

2021-ம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகியிருந்தால், ஆறுதலான தகவல்களோடு அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில்தான் இருந்திருக்கும். எழுத்தறிவு விகிதம் உயர்வு போன்ற ஆறுதலான விஷயங்கள் இருந்தாலும் ஆண்-பெண் விகிதம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்குமோ என்ற அச்சம் இருக்கவே செய்கிறது.

இரண்டு குழந்தைகள் போதும் என்ற மனப்பக்குவம் தற்போது மக்களிடையே அதிகரித்துவருகிறது. முதல் குழந்தை ஆண் என்றால், அதுவே போதும் என்று சிலர் முடிவெடுத்துவிடுகின்றனர். ஆண் குழந்தை மோகத்தைப் பொறுத்தவரை கிராமங்கள், நகரங்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்தது. ஆனால், 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் குறைந்துகொண்டே வருவது வருத்தமளிக்கக் கூடிய ஒன்றாகும்.

2015-ம் ஆண்டு ஐநா சபை வெளியிட்ட அறிக்கையின்படி உலக அளவில் 100 பெண்களுக்கு 101.70 ஆண்கள் என்ற விகிதம் காணப்பட்டது. ஐநா சபை கணக்கீடு செய்த 201 நாடுகளில் 124 நாடுகளில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பெண்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சாரக் கணக்கில் இந்தியா 192-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவைவிட 9 நாடுகளில் மட்டுமே குறைவு. 1901-ல் இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தார்கள். இந்த விகிதாச்சாரம் ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் குறைந்துகொண்டே வந்து 1991 கணக்குப்படி ஆயிரம் ஆண்களுக்கு 929 பெண்கள் எனக் குறைந்துவிட்டது. 2001 கணக்கெடுப்பில் இந்த விகிதாச்சாரம் சிறிதளவு கூடி ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் என்றானது. 2011 கணக்குப்படி இன்னும் சற்று உயர்ந்து ஆயிரத்துக்கு 940 என்றானது. இந்த விகிதாச்சாரத்தைக் கண்ட அனைவரும் சற்று ஆறுதலடைந்த அதே வேளையில், 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. 1991-ல் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 945 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2001-ல் 927 ஆகக் குறைந்தது. இது 2011-ல் மேலும் குறைந்து 914 ஆனது.

2016-ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 877 ஆகக் குறைந்துவிட்டது. ஆந்திரம், ராஜஸ்தானில் 806 ஆகவும், பிஹாரில் 837, உத்தராகண்டில் 825, தமிழ்நாட்டில் 840 என்ற அளவில் உள்ளது. பிறந்த குழந்தைகளைக் கொல்வது அதாவது சிசுக்கொலை குறைந்தபோதும், கருவில் இருக்கும்போது கண்டறிந்து பெண் கரு எனில் அழித்துவிடுவது தொடரத்தான் செய்கிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி எனும் பகுதியைச் சுற்றியுள்ள 132 கிராமங்களில் 2019-ல் 3 மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், இவற்றில் ஒரு குழந்தைகூடப் பெண் குழந்தை இல்லை. இது சாத்தியமா? இதைச் சற்று கூர்ந்து கவனித்தால் என்ன நடந்திருக்கும் என்பது பாமர மக்களுக்குக்கூடத் தெரியும்.

பெற்றோர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது நம் அனைவர் மனதிலும் எழும் கேள்வியாகும். பொதுவாகவே, பெண் குழந்தைகள்தான் ஆதரவாகவும், அக்கறையாகவும் இருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆயினும், பெண் குழந்தை வளர்ந்து, அதற்குத் திருமணம் செய்துவைப்பதற்கு ஆகும் செலவை மனதில்கொண்டே பெண் குழந்தைகள் பெறுவதைக் கணிசமானோர் வெறுக்கின்றனர்.

இரண்டு குழந்தைகள்போதும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. அந்த இரண்டு குழந்தைகளில் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். அதனால், இரண்டாவது முறை கருவுறும்போது ஆணா, பெண்ணா என்பதைச் சோதனை செய்து, பெண் குழந்தை எனத் தெரியவரும் பட்சத்தில் அக்குழந்தை வேண்டாம் என முடிவெடுத்துக் கருக்கலைப்பு செய்துவிடுகின்றனர்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 1994-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த விவரங்கள் அடங்கிய தகவல் பலகை அனைத்து மருத்துவமனைகளிலும் இடம்பெற்றுள்ளது. ஆயினும், இக்கொடுமை ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழ்நாடு அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 995 ஆக உள்ளது. மாவட்ட அளவில் பார்க்கும்போது, நீலகிரியில் 1,041 எனவும், தர்மபுரி மாவட்டத்தில் 946 எனவும், தலைநகர் சென்னையில் 986 எனவும் உள்ளது.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை மாற்றப் பொதுவான அளவில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளுக்குச் சில பலன்கள் கிடைத்தபோதிலும் தனிப்பட்ட அளவில் வரும்போது இது பலனளிப்பதில்லை. ஆண்களைச் சார்ந்து இயங்கும் சமூகத்தில், ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. பொருளாதாரச் சூழல், எதிர்கால நலன் கருதி சிறிய குடும்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால், சிறு குடும்பத்திலும் ஒரு ஆண் குழந்தை இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? ஒரு பெண் கருத்தரித்தல் தொடங்கி ஓராண்டு வரையில் மகப்பேறு, அதற்குப் பிந்தைய குழந்தை வளர்ப்பு ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும். ஆண் குழந்தை வேண்டும், பெண் குழந்தை வேண்டாம் என்ற மனப்போக்கு எதிர்காலச் சமூகத்துக்கு நல்லதல்ல. இதற்குச் சட்டம் மட்டுமே போதாது; மக்களிடையே உண்மையான மனமாற்றம் ஏற்பட வேண்டும். மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

- பெ.சுப்ரமணியன், முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி, அரியலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x