Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

நீட் குறித்த அறிக்கை உணர்த்துவது என்ன?

மாநில உரிமைகள், கல்வி முறை, சமூகநீதி போன்றவற்றில் ‘நீட்’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து விசாரிக்கத் தமிழ்நாடு அரசு நியமித்த நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவின் அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து, சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைத்த பிறகு, குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

சமூகப் பின்தங்கலுக்கும், கல்விப் பின்தங்கலுக்கும் உள்ளாக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த குழந்தைகளில் பெரும் பகுதியினர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலேயே பயில்கின்றனர். சமூக நிலையும், வாழ்வியல் சூழலும் இத்தகைய மாணவர்களுக்குக் கூடுதல் சவால்களாக அமைந்துவிடுகின்றன. அவ்வளவு சவால்களையும் எதிர்கொண்டு, தங்களுக்குத் தரப்பட்ட பாடத்திட்டத்தைப் படித்து, உள்வாங்கி, தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, மீண்டும் அதே பாடங்களில் மேலும் ஒரு மதிப்பீடு; அதுவும், இதுவரை தாங்கள் பயிற்சி மேற்கொள்ளாத புதுவித மதிப்பீட்டு முறை. இதனால், மாணவர்கள் எத்தகைய மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக ஆராய்ந்து தக்க புள்ளிவிவரங்களுடன் தொகுத்தளித்துள்ளது இந்த அறிக்கை.

சமூகத்தில் உயர் படிநிலையில் உள்ள குடும்பங்களில் பிறந்தவர்களில் பெரும் பகுதியினர் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி ஆகிய பாடத்திட்டப் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களுக்குச் சகலவிதமான வசதிகளை ஏதேனும் ஒரு வகையில் உருவாக்கித் தரும் அளவு அவர்களின் பெற்றோர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவழித்துப் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து மதிப்பீட்டு முறைக்கு ஏற்றவாறு பயிற்சி மேற்கொள்ள முடிகிறது. அதிலும், 1, 2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் மேல்நிலைப் பள்ளிப் பாடத்தைப் படிக்கும்போதே நீட்டுக்கான பயிற்சியையும் மேற்கொள்கின்றனர். அதில் பெரும்பாலானோர், நீட் மதிப்பீட்டில் தங்களின் மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ பயிற்சி மேற்கொள்கின்றனர். இதன் விளைவாகவே இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் நீட் மதிப்பீட்டு முறை மூலம் அதிக அளவில் மருத்துவப் படிப்பில் சேர இயல்கிறது என்பதைத் தகுந்த புள்ளிவிவரங்களுடன் இந்த அறிக்கை நிரூபிக்கிறது.

அனைவரையும் சமமாகக் கருதி, அனைத்து நிலையிலும் சமூகத்துக்கு அர்ப்பணிப்போடு மாணவர்களைச் செயல்பட வைப்பதே கல்வியின் நோக்கம் என்பதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பல்வேறு படிநிலைகளைக் கொண்ட சமூக அமைப்பில், மாணவர் சேர்க்கையில் பன்முகத் தன்மையைக் கடைப்பிடிக்காமல், ஒற்றை நோக்கமாக, ‘இது ஒன்றே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அளவுகோல்’ என்று சொல்வது கல்வியின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை இந்த அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

நாடு முழுக்க ஒற்றைத் தேர்வு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அளவுகோலாக அனேகமாக உலகில் வேறு எந்த நாட்டிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட தேர்வை ஏற்றுக்கொள்வது அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இத்தகைய தேர்வோடு பிற மதிப்பீடுகளையும் இணைத்தே மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடைமுறை உலகத்தின் எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படுவதை இந்த அறிக்கை விளக்குகிறது. பல நாடுகளில் நடத்தப்படும் உயர்கல்வி சேர்க்கைக்கான தனித்தேர்வுகள் அங்கே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய தனித்தேர்வுகள் அனைவருக்கும் சமமாக வாய்ப்பளிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் சில நாடுகள் அந்தத் தேர்வு முறைகளைக் கைவிட்டிருப்பதை, பல தரவுகளை ஆராய்ந்து விளக்குகிறது இந்த அறிக்கை.

இந்தியாவில் நுழைவுத் தேர்வு முறையின் வரலாற்றைக் கூறி, 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஐஐடி உள்ளிட்ட தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு உட்பட எதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நீட், ஐந்து ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஐந்தாண்டு என்பது ஆய்வு மேற்கொள்ளப் போதுமான காலமாகும். மதிப்பீட்டு முறை குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படாதது மட்டுமல்ல, தேசியத் தேர்வு முகமை இது குறித்த எந்தத் தகவல்களையும் வைத்திருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, அதிலும் நகர்ப்புறத்தில் பல்கிப் பெருகியிருக்கும், முழுக்க முழுக்க வணிகரீதியாகச் செயல்படும் நீட் பயிற்சி நிறுவனங்களைப் பற்றியும், அவற்றில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதனால் யாருக்கெல்லாம் சாதகம், யாருக்கெல்லாம் பாதகம் என்பதைப் பற்றியும் விளக்கி, கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களை நீட் எப்படி வஞ்சிக்கிறது என்பதை இந்த அறிக்கை விளக்குகிறது.

பள்ளிக் கல்வியின் நோக்கங்களான சுயசிந்தனை, பகுத்தறிவு, சமமான வாழ்க்கை முறை வாழ்வதற்கான புரிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய கற்றல் செயல்பாட்டிலிருந்து மாணவர்களை நீட் விலக்குகிறது. பயிற்சி நிறுவனங்களில் மதிப்பீடு முறையை அறிந்து வெளிப்படுத்தும் திறன்களை மட்டுமே மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு பாடத்திலும் பெற வேண்டிய ஆழமான புரிதல் மாணவர்களுக்கு இல்லாமல் போகிறது. மருத்துவப் படிப்பில் சேரும் இத்தகைய மாணவர்கள் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற இயலாமல் போவதை இந்த அறிக்கை உரிய தரவுகளுடன் விளக்குகிறது.

மருத்துவக் கல்வியும், மருத்துவப் பணியும் ஒன்றோடொன்று தொடர்புடையதால், அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் தன் தகுதியை வளர்த்துக்கொண்டவர்களைவிட, மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தவுடன், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி மேற்கொண்டு நீட் மூலம் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு மாணவர்கள் சேர்வது எந்த வகையிலும் அவர்களைத் தகுதி மிக்கவர்களாக ஆக்கிவிடாது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பொது சுகாதாரத் துறை மீது இதன் தாக்கம் பெருமளவு இருக்கும் என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. மலைக்கிராமங்கள் உட்பட, பல்வேறு இடர்ப்பாடுகள் கொண்ட சூழல்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவைப்படும் மருத்துவர்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கையாகத்தான் அரசுப் பணியில் இருப்பவருக்கான உள் ஒதுக்கீடு (in service quota) செய்யப்பட்டது. நீட் அதை அர்த்தமற்றதாக்கிவிட்டது. அதன் விளைவாக, பொது சுகாதாரத் துறை மிகப் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த அறிக்கை விளக்குகிறது.

நீட் தேர்வை பேராசிரியர் ரஞ்சன் ராய் சௌத்ரி தலைமையிலான வல்லுநர் குழுவோ, நாடாளுமன்ற நிலைக் குழுவோ பரிந்துரைக்கவில்லை. மாறாக, நாடாளுமன்ற நிலைக் குழு, தனது 92-வது அறிக்கையில், தனியார் கல்வி நிறுவனங்களால் மருத்துவக் கல்வி வணிகம் ஆவதைக் கட்டுப்படுத்த நாடு முழுக்கப் பொது நுழைவுத் தேர்வு நடத்தவும், அதை ஏற்காத மாநிலங்களை அதிலிருந்து விலக்கிவைக்கவும் பரிந்துரைத்தது என்பதை எடுத்துக் கூறி, இந்த அறிக்கையைப் பரிசீலிக்கவே இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிக்க அரசமைப்புச் சட்டம் மாநில அரசுக்குத் தந்திருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதையும் எடுத்துக் கூறி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தீர்மானிப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

நீட் தேர்வு இந்தியா முழுக்க மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட இந்த அறிக்கை தூண்டுகோலாக அமையும்.

- பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

தொடர்புக்கு: spcsstn@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x