Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

உள்ளாட்சிப் பதவிகள் ஏலம்: மக்களாட்சியின் அடிப்படையைச் சீர்குலைக்கும் முயற்சி

ஒன்பது மாவட்டங்களில் ஊரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில், சில ஊர்களில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் ஏலமிடப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருக்கின்றன. இத்தகைய வழக்கம் நடைமுறையில் உள்ள ஊர்களைக் கண்டறிந்து, அதற்கு முடிவுகட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களை மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய ஏல நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றபோதும் கட்சிகளின் செல்வாக்கையும் தாண்டி ஊர் மக்கள் ஒன்றாய்க் கூடி இப்படி ஏலங்களை நடத்துவது அதற்கான காரணங்களை விவாதிக்க வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது.

முதலில், உள்ளாட்சித் தேர்தலில் செலவழிக்கப்படும் லட்சக்கணக்கான ரூபாயை ஏலத்தின் மூலமாக மிச்சப்படுத்தி அந்தப் பெருந்தொகையைக் கொண்டு ஊர் நலனுக்குச் செலவிடலாம் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடும் தொகை தேர்தல்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரக அளவிலான தேர்தல்களில் இவ்வளவு பணம் இறைக்கப்படுவது வெற்றிக்கான மதிப்புநிலை என்பதைத் தாண்டி, அடுத்துவரும் ஆண்டுகளில் அவருக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்கான முதலீடாகவே பார்க்கப்படுகிறது என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும். இரண்டாவதாக, ஊரக அளவில் வேரோடிப்போயிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் மரபான மனமும் அதற்கு ஆதரவாக உள்ளது. வெவ்வேறு சமூகங்கள் கூடி வாழும் ஊர்களில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். மூன்றாவதாக, ஏற்கெனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகப் பதவிகளில் இருந்தவர்கள் அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இவற்றில் ஏலத்துக்கான காரணம் எதுவாக இருந்தபோதும், அது இந்திய மக்களாட்சியை வேர்முனை வரைக்கும் கொண்டுசெல்ல விரும்பும் இந்திய அரசமைப்புக்குச் செய்யும் துரோகம்.

ஊரகப் பகுதிகளில் போட்டியின்றித் தேர்வுசெய்யப்படுவது மதிப்புக்குரியது என்ற பொதுவான எண்ணத்தில் தவறில்லை. ஆனால், அவ்வாறு போட்டியின்றித் தேர்வாவதன் பின்னணியில், பதவிகளை ஏலத்துக்கு விடும் முறையானது நிச்சயமாக இருக்கக் கூடாது. கல்வியறிவும் உள்ளாட்சித் தேர்தல்களின் முக்கியத்துவம் குறித்த அரசியல் விழிப்புணர்வும் அதிகரித்துவரும் காலம் இது. எனவே, இன்றைய நிலையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போட்டியின்றித் தேர்வாவது என்பது மிகவும் அரிதாகத்தான் இருக்க முடியும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு காலக் கெடு முடிந்துவிட்டது. எங்கெங்கு போட்டியின்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அங்கெல்லாம் பதவி ஏலம் விடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளும் வகையில், தீவிர விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஏலம் விடப்பட்டது உறுதியாகும்பட்சத்தில், தேர்தலை நிறுத்துவதும் மறுதேர்தல் நடத்துவதுமே சரியான முடிவாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x