Published : 23 Sep 2021 03:11 am

Updated : 23 Sep 2021 04:47 am

 

Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 04:47 AM

புதிய பனை எண்ணெய் திட்டம் கைகொடுக்குமா?

new-palm-oil-project

ச.இராசேந்திரன், மா.சபரிசக்தி

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் மதிப்புக்கு அடுத்தபடியாகச் சமையல் எண்ணெயின் மதிப்பு உள்ளது. நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யக் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சியினால் தானிய உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தாலும் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்களும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதனால், சமையலுக்குப் பெருமளவில் பனை எண்ணெய்யை (பாமாயில்) இறக்குமதி செய்து பயன்படுத்திவருகிறோம். பெருந்தொகையைக் கொண்டு பனை எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா என்பதே வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.

இந்திய நுகர்வோர் பல ஆண்டுகளாகப் பாரம்பரிய எண்ணெய் வித்துக்களான கடலை, எள், சூரியகாந்தி, கடுகு, சோயா, ஆளிவிதை, தேங்காய் போன்றவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். மக்கள்தொகைப் பெருக்கம், உணவு நுகர்வு முறை மாற்றங்கள், பாரம்பரிய எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்திக் குறைவு போன்றவற்றின் காரணமாகச் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. 1980-களில் பனை எண்ணெய் வர்த்தகம் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தது. இந்தியாவில் முதன்முதலாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் வேளாண் திட்டத்தின் கீழ் 1979-ல் 2,400 ஹெக்டேரில் பனை எண்ணெய் வளர்ப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் 1,593 ஹெக்டேர் எண்ணெய்ப் பனை பயிரிடப்பட்ட நிலையில், 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரி இத்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடைசெய்தது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க 1990-ல் கொண்டுவரப்பட்ட மஞ்சள் புரட்சியின் வாயிலாக நிலக்கடலை, கடுகு மற்றும் சோயாபீன் போன்ற பயிர்களின் உற்பத்தி பெருகினாலும், மொத்த சமையல் எண்ணெயின் தேவையை ஈடுகட்டவில்லை. 1990-களில் நாட்டில் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் 97% உள்நாட்டிலேயே உற்பத்திசெய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவின் இறக்குமதியில் 60%-க்கும் மேல் சமையல் எண்ணெய், குறிப்பாகப் பனை எண்ணெய் இறக்குமதி பங்குவகிக்கிறது. ஆனாலும், பெருவாரியான உயர்வருவாய் நுகர்வோர் பாரம்பரிய எண்ணெயையே விரும்புகின்றனர்.


உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு அதிகம் உள்ளதால், பனை எண்ணெய் நல்லதல்ல என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும், தற்போது நாம் பயன்படுத்தும் இனிப்பு வகைகள், சாக்லேட், நொறுக்குத் தீனிகள், நூடுல்ஸ் போன்றவற்றிலும் உணவகங்களில் பெரும்பாலும் பனை எண்ணெயே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள அடித்தட்டு மக்களில் பெரும்பாலானோர், நியாய விலைக் கடைகளில் பனை எண்ணெயை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். உலகளவில், ஒவ்வொரு நபரும் ஆண்டுக்குச் சராசரியாக எட்டு கிலோகிராம் பனை எண்ணெய் உட்கொள்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புதிய திட்டம்

இந்நிலையில், 2018-ல் வெளிவந்த மத்திய அரசின் இந்தியப் பனை எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் மற்றும் தற்போதைய எண்ணெய்த் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வடகிழக்கு மாநிலங்களிலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் சுமார் 6.5 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய்ப் பனை பயிரிட ரூ.11,040 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு 80% ஆகவும் (ரூ.8,844 கோடி) மாநில அரசின் பங்களிப்பு 20%ஆகவும் (ரூ.2,196 கோடி) இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 2029-2030-ம் ஆண்டுகளில் 28 லட்சம் டன்னாக உற்பத்தியை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த காடுகள், பழங்குடி மக்களின் வாழ்விடங்களாகும். இவ்வாறான பெரிய அளவிலான பனை எண்ணெய்ச் சாகுபடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், முன்மொழியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிறு - குறு விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் தங்கள் நில உரிமையை இழக்கும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

விளைவுகள்

மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் எண்ணெய்த் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மார்ச் 2008-ல் அனைத்து சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 60%-க்கு மேல் இறக்குமதியைச் சார்ந்து இருந்தபோதிலும் 2017-க்குப் பிறகு இந்தத் தடை படிப்படியாகத் தளர்த்தப்பட்டது. இதனால் பன்னாட்டுச் சந்தை மதிப்பு கொண்ட பனை எண்ணெய் வர்த்தகத்தை இந்தியாவில் உள்ள சில பெருநிறுவனங்கள் முன்னெடுக்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. தற்போதைய திட்டம், எதிர்காலத்தில் உள்நாட்டுத் தேவைக்கு அதிகமான உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் வழிவகுக்குமேயானால், அது நாட்டின் சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிக்கும்.

எடுத்துக்காட்டாக, சமையல் எண்ணெய்க்கான உலகளாவிய சந்தைத் தேவையைச் சாதகமாக்கப் பல நாடுகள் அவற்றின் பசுமைக்காடுகளையும் மலைக்காடுகளில் உள்ள மரங்களையும் அகற்றிப் பனை எண்ணெய் உற்பத்தி செய்தன. இதில் உலகின் 85% அளவுக்குப் பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியாவில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், பல்லுயிர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது இந்தோனேசியாவும் இலங்கையும் எண்ணெய்ப் பனை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவில், ஆந்திரத்திலும் அந்தமான் தீவுகளிலும் பனை எண்ணெய் உற்பத்தி அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் 2002-ல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பனை எண்ணெய் போன்ற அனைத்து ஒற்றைப் பயிர் முறைகளையும் தடை செய்தது.

திட்டமிடல் தேவை

தற்போதைய சூழலில் பனை எண்ணெயின் பங்கு இன்றியமையாததாக இருந்தாலும், ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க ஆதார விலையை உயர்த்துதல், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், உற்பத்தித் திறனைக் கூட்டுதல் போன்ற திட்டங்கள் தேவை. மேலும், நாடு முழுவதும் செயல்பட்டுவரும் பயிர் சார்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பல வேளாண் உற்பத்தியை மதிப்புக்கூட்டுதல் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதைப் போல, பனை எண்ணெய் உற்பத்தியிலும் மதிப்புக்கூட்டுதல் முறையை ஊக்கப்படுத்தினால் பெருநிறுவனங்களின் தலையீடு கட்டுப்படுத்தப்படுவதுடன் விவசாயிகளின் வருவாயும் உயரும்.

- ச.இராசேந்திரன், பேராசிரியர்; மா.சபரிசக்தி, ஆராய்ச்சியாளர், பொருளியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: sabarieconomics@gmail.com
புதிய பனை எண்ணெய் திட்டம்New palm oil projectகச்சா எண்ணெய்சமையல் எண்ணெய்பசுமைப் புரட்சிஎண்ணெய் இறக்குமதிபாமாயில்கடலை எள் சூரியகாந்தி கடுகு சோயா ஆளிவிதை தேங்காய்மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x