Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

உட்கட்சி சவால்களுக்கு ஈடுகொடுப்பாரா பஞ்சாப் புதிய முதல்வர்

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் சரண்ஜித் சிங் சன்னி, நாடு தழுவிய அளவில் வாழ்த்துகளைப் பெற்றுவருகிறார். அம்மாநிலத்தில், பட்டியல் இனத்திலிருந்து முதல்வராகப் பதவியேற்றுள்ள முதலாவது நபர் அவர். இளம்வயதில் கைரிக்‌ஷா இழுத்தவர், ரிக்‌ஷாவில் நாற்காலிகள் விற்றவர் என்று அடித்தட்டு மக்களின் அனுபவங்களோடு அவர்களின் பிரதிநிதியாய் அரசியலில் நுழைந்தவர். மாணவர் அரசியல் தலைவரான அவர், பின்பு சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் தகுதிபெற்றார்.

பஞ்சாபில், பட்டியல் இனத்தவரின் எண்ணிக்கை ஏறக்குறைய 31% என்றாலும், அவர்களுக்குள் நிலவும் சாதிய வேறுபாடுகள் அரசியல் தலைமையேற்கும் வாய்ப்பில்லாத சூழலை ஏற்படுத்தியிருந்தன. தற்போதும்கூட, பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்துவரும் உட்கட்சிப் பூசல்களின் விளைவாகவே சரண்ஜித் சிங் சன்னி முதல்வராகியுள்ளார். அவர் முழு அதிகாரம் பெற்ற முதல்வராக இருக்க முடியாது என்பதும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆதரவால்தான் அந்தப் பதவியில் தொடர முடியும் என்பதும்தான் உண்மை நிலை.

ஜாட் சீக்கியரான சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, இந்து மதத்தைச் சேர்ந்த ஓ.பி.சோனி ஆகிய இருவரும் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். சாதி, மத அடிப்படையில், அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டாலும் துணை முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பதில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்களுக்கும் மாநிலக் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆதரவாளர்களுக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் பிரதிபலித்துள்ளன. அடுத்து, அமைச்சரவையில் அங்கம் வகிக்கவிருப்பவர்களை முடிவுசெய்வதற்காகக் கட்சித் தலைமையுடன் கலந்தாலோசிக்க டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார் சன்னி. புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமரீந்தரின் ஆதரவாளர்களைச் சமாளிக்க வேண்டிய சவாலையும் இனிமேல் அவர் எதிர்கொண்டாக வேண்டும்.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காலத்தில் உரிய கவனம் செலுத்தப்படாமலிருந்த பல பிரச்சினைகள் புதிய முதல்வர் முன்னால் வரிசைகட்டி நிற்கின்றன. மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள், 2015-ல் சீக்கியர்களின் மறை நூல் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. கருத்து வேறுபாட்டின் காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகிய சித்து, இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தே அமரீந்தருக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கினார்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், பஞ்சாப் அமைச்சரவையில் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கேள்வியும் உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸை எதிர்க்கும் நிலையில், வலுவான எதிர்க்கட்சியோ கூட்டணியோ இதுவரை இல்லையென்றாலும், தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் ஒன்றிணைந்து தனிக் கட்சியைத் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால், காங்கிரஸ் கடுமையான போட்டியொன்றைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x