Last Updated : 22 Sep, 2021 03:04 AM

 

Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

காந்தியின் ஆடை அரசியல்

ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால் கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல். ஆண்டைகளுக்கு முன்னால் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டிருந்த நிலையை மாற்றி எல்லோரும் தோளில் துண்டு போட்டுக்கொள்ளலாம் என்ற துணிவைத் தந்தது திராவிட இயக்கத்தின் ஆடை அரசியல். அதேபோல் சிவப்புத் துண்டு உழைக்கும் வர்க்கத்தின் ஆடை அரசியல்.

பொது வாழ்க்கையில் மிகவும் எளிமையாக இருப்பவர்களை மக்கள் தம்மில் ஒருவராக அடையாளம் காண்பது வழக்கம். காந்தியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கக்கன் இன்று நல்லக்கண்ணு வரை பலரும் அதில் அடங்குவார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சாதாரண இருசக்கர வாகனங்களில் செல்வது பத்திரிகைச் செய்தியாகும் அளவுக்கு எளிமைக்கும் அரசியலுக்கும் தூரம் என்றாகிவிட்ட காலம் இது. இந்த உளவியலை எல்லோருக்கும் முன்பு நன்கு புரிந்துகொண்டவர் காந்தி. அன்றாட வாழ்க்கையில் தான் பார்த்த ஏழ்மையுடன் இயல்பாகவே சமண மதப் பற்றின் காரணமாக ஏற்பட்ட துறவு மனப்பான்மையும் காந்தியைத் தன் ஆடை விஷயத்திலும் ஒரு துறவி போன்ற முடிவை எடுக்கச் செய்தது. காந்தியை எதிர்த்துக்கொண்டிருந்த, எதிர்த்துக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பலரிடமும் காந்தி ஆடை, வாழ்க்கை முறை போன்ற விஷயத்தில் பெரும் தாக்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியிருக்கிறார் (காந்தியை விரும்பிய/ விரும்பும் கம்யூனிஸ்ட்டுகளிடமும்தான்). அவரைப் போல அரையாடைக்கு மாறவில்லை என்றாலும் எளிமையான ஆடையுடன்தான் கணிசமான மூத்த கம்யூனிஸ்ட்டுகள் காணப்படுவார்கள்.

காந்தியின் ஆடையானது அவரது உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தன் வாழ்க்கையைப் போல தன் உடலையும் ஒரு செய்தியாக காந்தி உலகத்தாருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் காட்டியதில் அவரது ஆடைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆடை விஷயத்தில் காந்தி அடித்தது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். நான் உங்களில் ஒருவன் என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் பின்னால் மக்களைத் திரளச் செய்தது ஒன்று. இன்னொன்று, கதரை மக்களிடம் பிரபலப்படுத்தி ஒரே நேரத்தில் பொருளாதாரரீதியில் இந்திய மக்களைத் தற்சார்பு கொண்டவர்களாக ஆக்கி பிரிட்டிஷ்காரர்களின் சுரண்டல் பொருளாதாரத்தைத் தடுமாறச் செய்தது. காந்தியின் ஆடை அரசியல் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஆலைகள் பலவும் மூடப்பட்டன. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1931-ல் வட்டமேஜை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்ற காந்தி அங்குள்ள ஆலைத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வேலை இழப்புக்குத் தான் காரணமாக இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்தியாவின் தரப்பு நியாயத்தை அவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குப் புரியவைத்தார். எதிரியின் நாட்டு மக்கள் வேலை இழந்தால் நமக்கென்ன என்று எண்ணாமல் தங்களை நாடி வந்த காந்தியை அவர்கள் அன்புடன் உபசரித்துச் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எதிலும் தீவிரத்துடன் செயல்பட்ட காந்தியைப் பின்பற்றுவது மிகவும் அரிது. ஆனாலும், அவரது செயல்பாடுகள் அவரைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தின. காந்தியின் தொண்டர்களாகவும் அன்பர்களாகவும் இருந்த நேரு, படேல் உள்ளிட்ட பலரும் எளிமையான கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பெரும்பாலான இந்தியர்களும் கதர் ஆடைகளுக்கு மாறினார்கள். ஆடையில் சுதேசியம், எளிமையான ஆடை அணிதல் என்ற ஒரு மனிதரின் முடிவுகள் எப்படி ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்றி ஒரு ஏகாதிபத்தியத்தை அசைத்துப்போட்டன என்ற வரலாற்றை நாம் அறிவோம்.

காந்தியிடம் எப்போதும் ஒரு சுயவதை இருந்தது. எல்லா மாற்றங்களுக்கும் பரிசோதனைக் களனாக, இலக்காகத் தன் உடலையும் மனதையுமே ஆக்கினார். புதுப்புதுப் பரிசோதனைகளில் அவற்றைப் புடம்போட்டார். ஒரு பரிசோதனை முடிந்தவுடன் தான் இலக்கை அடைந்துவிட்டதாக அவர் நின்றுவிடுவதில்லை. மேலும் புதுப் புதுப் பரிசோதனைகளை அவர் கண்டடைந்துகொண்டே இருந்தார். அவற்றில் அவர் பெறும் வெற்றியோ தோல்வியோ நாட்டின் மீது ஏதாவது ஒரு விதத்தில் தாக்கம் செலுத்தியது. ஆடை குறித்து அவர் எடுத்த முடிவும் அப்படிப்பட்டதொரு பரிசோதனைதான். 1921-ல் எடுத்த முடிவின்படி அவர் 1948-ல் படுகொலை செய்யப்படும் தருணம்வரை அவர் இம்மியளவும் பிசகாமல் நடந்துகொண்டார். அவரின் மிகவும் வெற்றிகரமான பரிசோதனைகளுள் ஒன்று அவரது ஆடை அரசியல்.

ஆடை விஷயத்தில் காந்தி எடுத்த முடிவின் காரணமாக அவரது மார்பு திறந்தே இருந்தது. எல்லோரையும் அரவணைக்கும் மார்பு அது. எல்லோர் அன்புக்கும் இலக்கான மார்பு அது. கூடவே, தீய சித்தாந்தத்தின் பிரதிநிதி ஒருவனின் 3 தோட்டாக்களுக்கும் இலக்கானது. அந்தத் தோட்டாக்களை வெற்று மார்பில் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதன் மூலம் தன் மரணமும் ஒரு செய்தியாக ஆக வேண்டும் என்பதற்காகவும்தானோ அதற்கும் 27 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி இந்த முடிவு எடுத்தார்?

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x