Published : 22 Sep 2021 03:04 am

Updated : 22 Sep 2021 05:52 am

 

Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 05:52 AM

ஆடையில் ஒரு புரட்சி

dress-revolution

தமிழ்நாட்டுப் பயணத்தின்போது உடம்பில் அரையாடை மட்டுமே அணிந்திருந்த ஏழை எளியோரைக் கண்டு மனம்வருந்திய காந்தி தானும் அரையாடைக்கு மாறிய 'ஆடையில் புரட்சி' என்ற உன்னத நிகழ்வு நடைபெற்ற நாள் செப்டம்பர் 22,1921. நடைபெற்ற இடம்: மதுரை மாநகரம். இந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு விழாவை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். 21 செப்டம்பர், 1921 அன்று திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வந்த காந்திக்கு ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பை மதுரை மக்கள் கொடுத்தார்கள். அன்று இரவு மேலமாசி வீதியில் உள்ள இராம்ஜி கல்யாண்ஜியின் விருந்தினராக அவருடைய வீட்டில் தங்கினார். மறுநாள்தான் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த முடிவை காந்தி மேற்கொண்டார்.

காந்தியடிகளின் முடிவு திடீரென்று ஒரு நாளில் எடுத்ததல்ல. இந்தியாவின் பல பாகங்களுக்கும் போகும்போதெல்லாம் அங்கு இருக்கும் ஏழை மக்களை சந்திக்கும்போது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவுதான் இது. தன்னை எளியோனாய் மாற்றிக்கொள்ளும் இந்த முடிவை காந்தி எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்தது தமிழ் மண்தான் என்பது நமக்குப் பெருமை.


இந்த முடிவு எடுப்பதற்குச் சில காரணங்களை காந்தி குறிப்பிடுகிறார். 'கதர் உடுத்திக்கொள்ளலாம் என்றால் போதுமான கதர் கிடைப்பதில்லை. அப்படியே கதர் கிடைத்தாலும் அதை வாங்கிக்கொள்ளப் போதுமான பணம் இல்லை என்று மக்கள் என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள்' என்று எழுதுகிறார். ஒன்று தேவை அதிகம், உற்பத்தியோ குறைவு, மற்றொன்று மக்களின் ஏழ்மை நிலை. இந்தியா முழுவதும் வறுமை கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய சுயசார்பான நெசவுத் தொழிலை அழித்துவிட்டு ஆங்கிலேய அரசாங்கம் தன்னுடைய துணிகளை இறக்குமதி செய்து அதன் மூலம் கொள்ளை லாபத்தை சம்பாதித்துக்கொண்டிருந்தது. ஏழைகள் வாழ்வாதாரமின்றித் தவித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நிலையில்தான் காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, கங்காபென் மஜூம்தார் என்ற பெண்மணி, விஜய்பூர் சமஸ்தானத்தில், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் பரண் மேல் கிடந்த கைராட்டையைக் கண்டுபிடித்து காந்தியிடம் கொடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் கதர் உற்பத்திக்கு காந்தி புத்துயிர் கொடுத்தார். எளிமையான தொழில்நுட்பம்; ஆனால் மிகவும் வலியது.

துணிகளை உற்பத்தி செய்யும் ஆலைத் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக எளிமையான தொழில்நுட்பத்தைக் கொண்ட கைராட்டை, கைநெசவு என்ற கதர் உற்பத்தியை ஏழை மக்களிடமே கொடுத்துக் கதரை உற்பத்தி செய்யக் கேட்டுக்கொண்டார். அப்படி உற்பத்தி செய்யக்கூடிய கதர், தேவைக்குப் போதுமான அளவு இல்லை. ஒத்துழையாமை இயக்கம் வேகமாகப் பரவப் பரவ, மக்கள் ஆர்வத்தோடும் தேசபக்தியோடும் கதர் உடுத்த ஆரம்பித்தார்கள். கதர், சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மாற ஆரம்பித்தது. மக்களின் கதர்த் தேவை பலமடங்கு அதிகரித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில், தனக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கதரை உடுத்துவது என்று காந்தி முடிவெடுத்தார். மேலும், அசாம், பிஹார், ஒடிஷா போன்ற மாநிலங்களில் தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது வறுமையின் கொடுமையை அவர் நேரடியாகக் கண்டதும் அவருடைய முடிவுக்கு ஒரு காரணம்.

“நாம் இவ்வாறு வளமாக வாழ்ந்துகொண்டு உடலெல்லாம் ஆடை ஆபரணங்களை போட்டுக் கொண்டு இந்தியாவின் ஏழ்மையை எவ்வாறு போக்க முடியும்?” என்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக விழா மேடையில் அமர்ந்திருந்த முக்கியப் பிரமுகர்களைப் பார்த்து காந்தி கேள்வி கேட்டதை நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

இதுதான் காந்தியின் சிந்தனைப் போக்கு. உடுத்த உடையின்றி இருக்கும் மக்களிடம் சென்று, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிக் கூறும்போது, தான் மட்டும் தேவைக்கு அதிகமாக உடையை உடுத்திக்கொண்டு இருப்பது அவர்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தும் என்று அவர் நினைத்தார். ஏழைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக அவர்களைப் போலவே நாமும் ஏன் உடை உடுத்திக்கொண்டு எளிமையாக வாழக் கூடாது என்ற முடிவுக்கு அவர் வந்தார். ஏழையைப் போல் தானும் உடுத்த வேண்டும் என்ற முடிவு, ஏழைகளை ஏழைகளாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அல்ல. இவர் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே காரணம். உடை நம்முடைய ஆடம்பரத்தைப் பறைசாற்றுவதற்கானதல்ல என்பதை மக்களுக்குப் புரிய வைக்க நினைத்தார்.

ஆக, உடையைக் கூட ஆயுதமாக்கி அரசியல் களத்தில் போராட முடியும் என்று உலகுக்குக் காட்டிய முதல் மனிதர் காந்தியாகத்தான் இருக்கும். எளிமையான கோலம், ஏழைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதற்கு என்றாலும், இந்த உலக மக்களுக்கு அவர் சொன்ன செய்தி மிகத் தெளிவானது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இந்திய மக்கள் எவ்வாறு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும், ஒரு காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்த இந்திய மக்களை எப்படி ஆங்கில அரசாங்கம் சுரண்டி ஏழைகளாக வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் தன் உடையின் மூலம் உலகத்துக்குச் சொல்லிவிட்டார்.

1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்கு காந்தி செல்ல இருக்கிறார் என்பதை அறிந்த ஒரு நிருபர், “நீங்கள் இப்போது உடுத்தியிருக்கும் உடையுடன்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மன்னரைச் சந்திக்கப்போகிறீர்களா?” என்று கேட்கிறார். “வேறு மாதிரியான உடையுடன் சென்றேன் என்றால் நான் நாடகமாடுகிறேன் என்று பொருள், அது என் நாட்டு மக்களுக்குச் செய்யும் அநீதி ஆகும்” என்றார் காந்தி. இங்கிலாந்தில் அரசரைச் சந்திக்க அரண்மனையின் வழிமுறைகளுக்கு மாறாக இதே அரையாடையோடு சென்ற தைரியம்தான் காந்தியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இன்றைய சிக்கல்களுக்கெல்லாம் அடிப்படை மேற்கத்திய உற்பத்தி முறையும் அதனால் விளையும் நுகர்வுக் கலாச்சாரமும்தான் என்பதை காந்தி தன்னுடைய ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, தன்னுடைய உடையும் கீழை நாகரிகத்துக்கு, குறிப்பாக இந்திய நாகரிகத்துக்கு ஏற்றவாறு இருக்கும்போதுதான் உண்மையான சுதேசியத்தை நாம் பேச முடியும் என்று எண்ணினார். பொருளாதாரத்தில் சுதேசியம், உணவில் சுதேசியம், அதுபோல் உடையிலும் சுதேசியம் என்பதுதான் அவர் அன்று எடுத்த முடிவுக்கு முக்கியமான காரணம்.

ஆடம்பரமான ஆடையை உடுத்தி, நாகரிகமான ஒரு தோற்றத்தை வெளிப்புறத்தே கொடுத்துவிட்டு உள்முகமாக மிகவும் மூர்க்கத்துடன், கேவலமாகச் சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டு இருப்பது அவமானம் என்று அவர் கூறுகிறார். சொல், செயல், சிந்தனை ஆகிய அனைத்தும் ஒருங்கே செயல்பட்டு, உள்ளும் புறமும் ஒன்றாய், எளிமையோடும் உயர்ந்த சிந்தனையோடும் வாழ்வதற்கு காந்தி எடுத்த உன்னத முடிவுதான் ஆடையில் புரட்சி. அந்த நிகழ்வின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது அவரை வரலாற்றுக் காட்சிப் பொருளாக ஆக்காமல் அவர் பின்பற்றிய விழுமியங்களை நாமும் உள்வாங்கிச் செயல்படுவதே அவருக்குச் செய்யும் மரியாதை.

- அ.அண்ணாமலை, தலைவர், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி. தொடர்புக்கு: nationalgandhimuseum@gmail.com
ஆடையில் ஒரு புரட்சிDress revolutionMahatma gandhiமகாத்மா காந்திகாந்தி ஆடை அரசியல்காந்தி அரையாடை நூற்றாண்டுசுதேசியம்காந்தியின் ஆடை புரட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x