Published : 21 Sep 2021 03:18 am

Updated : 21 Sep 2021 06:31 am

 

Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 06:31 AM

மூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா?

third-dose-of-vaccine

கரோனா பேரழிவைத் தடுக்க, இந்தியா உள்ளிட்ட 183 உலக நாடுகளில் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தத் தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. தற்போது கரோனாவுக்கு 18 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மட்டும் ஒற்றைத் தவணை தடுப்பூசி. மற்ற அனைத்தும் இரண்டு தவணைகள் செலுத்தப்பட வேண்டியவை. ஆனாலும் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் ‘ஊக்குவிப்பு ஊசி’ (Booster dose) எனும் மூன்றாம் தவணை தடுப்பூசியைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் மூன்றாம் தவணை தடுப்பூசி தொடர்பான விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

காரணம் என்ன?


மூன்றாம் தவணை தடுப்பூசி பேசு பொருளாவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள். இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, கரோனாவுக்கான எதிர்ப்பு சக்தியானது 6-லிருந்து 10 மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்குவது முதல் காரணம். அடுத்து, நாட்பட்ட நோய்கள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தப்பட்ட பிறகும், போதுமான அளவுக்கு ரத்த எதிரணுக்கள் (Antibodies) அதிகரிப்பதில்லை என்பது இரண்டாவது காரணம். கரோனா வைரஸின் உருவ அமைப்பு அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், புதிய வேற்றுருவங்கள் (Variants) தற்போதைய தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படுமா எனும் சந்தேகம் மூன்றாவது காரணம்.

ஆய்வாளர்கள் கூறுவதென்ன?

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டாலும் கோவிட் நோய் கடுமையாவதில்லை; உயிராபத்து நெருங்குவதில்லை; தடுப்பாற்றல் நினைவு செல்கள் மூலம் நாட்பட்ட பாதுகாப்பு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று நன்மைகள் உலக அளவில் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஆகவே, கரோனா தடுப்பூசிகளைப் பொறுத்தவரை இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்டோர் அனைவருக்கும் மூன்றாம் தவணை தேவைப்படுவதில்லை என்பது சர்வதேசத் தடுப்பாற்றல் ஆய்வாளர்களின் பொதுவான கருத்து. நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிற குறிப்பிட்ட பிரிவினருக்கு வேண்டுமானால் அது தேவைப்படலாம். அப்படியானால், எந்தப் பிரிவினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக பலவீனமடைகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, தகுதியானவர்கள் அனைவருக்கும் இரண்டு தவணைகள் தடுப்பூசியைச் செலுத்திய பிறகுதான் இது குறித்து முடிவெடுக்க முடியும். மேலும், மூன்றாம் தவணை தடுப்பூசியின் அளவு என்ன, அதைச் செலுத்தினால் எவ்வளவு காலத்துக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும், பயனாளிக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்விகளுக்குச் சரியான பதில்கள் இப்போது இல்லை. இவற்றுக்கெல்லாம் எதிர்கால ஆராய்ச்சிகள்தான் முறையான பதில்களைத் தர முடியும்.

மேலும், ‘சயின்ஸ்’ ஆய்விதழில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் என்னவென்றால், ஏற்கெனவே கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு எம்ஆர்என்ஏ தடுப்பூசி செலுத்திய பிறகு உருவாகும் எதிரணுக்கள், மற்றவர்களைவிடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன என்பது. அடுத்து, இந்த எதிரணுக்கள் தற்போதுள்ள கரோனா வேற்றுருவங்களுக்கு எதிராக 100 மடங்கு அதிகமாகத் தடுப்பாற்றலைத் தருகின்றன என்பது. அமெரிக்காவில் ‘லா ஜொல்லா இன்ஸ்டிடியூட்’ (La Jolla Institute) வைரஸ் வல்லுநர் டாக்டர் ஷேன் கிராட்டியின் (Dr. Shane Crotty) ஆராய்ச்சியில் தெரியவந்த நம்பிக்கை தரும் தகவல்கள் இவை. இவ்வகைத் தடுப்பாற்றலுக்குக் ‘கலப்புத் தடுப்பாற்றல்’ (Hybrid immunity) என்று பெயர். இந்தத் தடுப்பாற்றல் இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும். அப்போதுதான் இங்கு மூன்றாம் தவணை தடுப்பூசிக்குத் தேவை இருக்கிறதா என்பதை முடிவுசெய்ய முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள நாடுகள் பலவும் மூன்றாம் தவணை தடுப்பூசிக்குத் தயாராகும் நிலையில், அவர்கள் கவனிக்க வேண்டிய கருத்து ஒன்று உள்ளது என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ். கரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகள் ‘சரிசம நெறி’யைக் கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் அது. முக்கியமாக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல நாடுகளில் ஒரு சதவீதம்கூட கரோனா தடுப்பூசி இன்னும் செலுத்தப்படவில்லை. உதாரணத்துக்கு, உலகில் இதுவரை 588 கோடித் தடுப்பூசித் தவணைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றால், அவற்றில் முக்கால்வாசி 10 நாடுகளுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளது. அமெரிக்காவில் 54% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றால், ஆப்பிரிக்காவில் 3.5% பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது. அங்கு சுகாதாரத் துறையினருக்கும் முன்களப் பணியாளர்களுக்கும்கூட இன்னும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

அதேநேரம், வளர்ந்த நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசிகளைப் பெருமளவில் வீணாக்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை அமெரிக்காவில் ஒன்றரைக் கோடி, பிரிட்டனில் 8 லட்சம் தவணைக்கான தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. இந்தியாவிலும் கரோனா தடுப்பூசியைக் கொண்டுவந்த புதிதில் இவ்வாறு வீணாக்கப்பட்டதை அறிவோம். அடுத்து, ‘கோவேக்ஸ்’ ஒப்பந்தப்படி ஜி7 நாடுகள் 87 கோடித் தவணை தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குத் தருவதாக ஒப்புக்கொண்டதில், இதுவரை 10 கோடி மட்டுமே வழங்கியுள்ளன. இதனால், ஏழை நாடுகளில் தடுப்பூசிக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சீரற்ற நெறிமுறை ஏழை நாடுகளை மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளையும்தான் பாதிக்கப்போகிறது.

ஏழை நாடுகளில் கரோனா தொற்று நீடிக்கும்போது, புதுப் புது வேற்றுருவ வைரஸ்கள் உருவாகி, மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் அந்த வேற்றுருவ வைரஸ்களுக்குக் கட்டுப்படாமல் போகலாம். மீண்டும் புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நலிவடையலாம். ஆகவே, ‘தடுப்பூசி விநியோகம் மற்றும் பயன்பாட்டில் இந்த ஆபத்துகளையும் கவனத்தில் கொண்டு, வளர்ந்த நாடுகள் செயல்படுவது அவசியம். இப்போதைக்கு உலக நாடுகள் மூன்றாம் தவணை தடுப்பூசியைச் செலுத்த அவசியமில்லை’ என்கிறார் டெட்ராஸ். இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

உலக அளவில் கரோனாவுக்குத் தனிமனிதப் பாதுகாப்பு உறுதியானால் மட்டுமே சமூகப் பாதுகாப்பும் உறுதிப்படும் என்பது அறிவியல் உண்மை. கரோனா பெருந்தொற்றுக்கு முடிவுகட்டும் பணியில் இணைந்துள்ள அறிவியலாளர்களும் தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளும் அவசியம் பரிசீலிக்க வேண்டிய அம்சம் இது!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com
மூன்றாம் தவணை தடுப்பூசிThird dose of vaccineCovid vaccineகரோனாகரோனா தடுப்பூசிBooster doseAntibodiesவேற்றுருவ வைரஸ்கள்கரோனா தொற்றுHybrid immunity

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x