Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

வேளாண் விற்பனைக்கும் சந்தைக்கும் அமைச்சகங்கள்!

சீனி.கலியபெருமாள்

வேளாண் உற்பத்தி பெருக, விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட வேளாண் விற்பனையையும் வேளாண் சந்தைகளையும் மேம்படுத்த வேண்டும். பருத்திக்கு, நெல்லுக்கு, எண்ணெய் வித்துக்களுக்கு நல்ல விலை கிடைத்தால், அடுத்த ஆண்டு அதிகப் பரப்பில் பயிரிடுவார்கள்; உற்பத்தி பெருகும். விற்பனையைப் பொறுத்துதான் உற்பத்தியும் அதிகரிக்கும். காவிரிப் படுகை மாவட்டங்களில் 30 ஆண்டுகளுக்கு முன் பருத்தி உற்பத்தி கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஏற்படுத்திக் கொடுத்த பின் கணிசமான அளவு உற்பத்தியும் பெருகி நல்ல விலையும் கிடைக்கிறது. நெல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கியதன் காரணமாகத்தான் நெல் உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. விவசாயிகளுக்கு ஓரளவு நம்பிக்கையான விலை கிடைக்கிறது. உழவர் சந்தைகள் தொடங்கப்பட்ட காலத்தில் விவசாயிகள் காய்கறி பயிரிடப் பெரிதும் ஆர்வம் காட்டியதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். விற்க சந்தை வசதி உள்ளது; நல்ல விலை கிடைக்கிறது. அரசு உற்பத்திக்குச் செலவிடுவதில் 10% வேளாண் விற்பனைக்கும் சந்தைகள் மேம்பாட்டுக்கும் செலவிட்டாலே உற்பத்தி பெருகும். நுகரும் அளவுக்கேற்பத் தரமான விளைபொருட்களை உற்பத்திசெய்து சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்போது நல்ல விலை கிடைக்கும்.

1928-ல் ‘ராயல் கமிஷன்’ பரிந்துரையின்படி இந்தியாவில் வேளாண் சந்தைகள் தொடங்கப்பட்டன. 1936-ல் திருப்பூர் காட்டன் மார்க்கெட், விழுப்புரம் மணிலா மார்க்கெட், கோவில்பட்டி காட்டன் மார்க்கெட், ஈரோடு மஞ்சள் மார்க்கெட் என்று தொடங்கப்பட்டுப் பிறகு பரவலாக இந்தியாவில் இன்று சுமார் ஏழாயிரம் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டி (ஏ.பி.எம்.சி.) அமைப்புகளும், தமிழ்நாட்டில் சுமார் 300 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இயங்கிவருகின்றன. மற்ற மாநிலங்களில் 60% விளைபொருட்கள் சந்தைக் கூடங்கள் மூலம்தான் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற மாநிலங்களிலெல்லாம் சந்தைகள் பல ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான விற்பனைக் கூடங்கள் சிறிய வாடகைக் கட்டிடங்களில்தான் அமைந்துள்ளன.

பஞ்சாபில் மண்டிகள்தான் விவசாயிகளுக்கு உயிர்நாடி. அங்கு விவசாயம் செழித்து, சந்தை மேம்பட்டுள்ளது. அதனால்தான் ஆண்-பெண், படித்தவர்கள்-படிக்காதவர்கள் எல்லாம் விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் சந்தை அமைப்பு அழிந்துவிடும் என்று கருதிப் போராடுகிறார்கள்.

1970-ல் மு.கருணாநிதி வேளாண் சந்தை மேம்பாட்டுக்குத் தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் தொடங்கினார். எம்ஜிஆர், சந்தை முக்கியத்துவத்தை உணர்ந்து மார்க்கெட் கமிட்டி பணியாளர்களை அரசு ஊழியர் ஆக்கினார். மீண்டும் மு.கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, உழவர் சந்தைகளைத் தொடங்கினார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் வேளாண் சந்தை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஆட்சிக்கு வந்தவுடன் விளைபொருட்களைப் பாதுகாக்கச் சேமிப்புக் கிடங்குகள் கட்ட உத்தரவிட்டது சந்தை மேம்பாட்டுக்கான தொடக்கமாகும்.

கர்நாடகத்தில் வேளாண் சந்தை மேம்பாட்டுக்குத் தனி அமைச்சர் உள்ளார். அதுபோல, தமிழ்நாட்டிலும் வேளாண் சந்தைக்குத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைச்சகத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகள், கிராமப்புற, நகர்ப்புற, மாநகரச் சந்தைகள், கால்நடைச் சந்தைகள், விளைபொருட்களை வணிகம் செய்யும் சங்கங்கள், கொய்மலர் விற்பனைச் சந்தைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். விளைபொருட்களைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதை ஊக்குவித்தல், அதற்கான பயிற்சிகளை அளித்தல், வேளாண் தொழிற்சாலைகள் அமைத்தல், நகரும் ஊர்திகள் மூலம் காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை நுகர்வோர்களுக்கு நேரடியாகக் கிடைக்கச் செய்தல், அக்மார்க் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான ஆய்வுக்கூடங்கள், விற்பனைக் கூடங்களுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ள விவசாயிகளுக்கு மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துதல் என்று வேளாண் சந்தை அமைப்பின் கீழ் பல்வேறு பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடியும். மலைகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டுசெல்ல ரயிலில் குளிர்சாதனச் சரக்குப் பெட்டகங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்துப் பெரிய அங்காடிகளைத் தொடங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்குச் சந்தை விலை குறையும் நேரங்களில், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், அவற்றைக் கொள்முதல் செய்யும் வகையில், விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட சந்தைக் கூடங்களையும்கூட உருவாக்கலாம். கணிசமான நிதி இருப்புடன் தானிய சேமிப்பை அடமானமாக வைத்துக் கடன் பெற வட்டார வங்கிகளையும் உருவாக்கலாம். இது போன்ற எண்ணற்ற சாத்தியங்கள் வேளாண் சந்தைக்கான தனி அமைச்சகத்தாலேயே சாத்தியமாகும். வேளாண்மைத் துறை பெருங்கடலைப் போன்று விரிந்து பரந்தது. வேளாண் உற்பத்திக்கும் சந்தைக்கும் தனித் தனி அமைச்சகங்கள் இருப்பதே இரண்டையும் மேம்படுத்த உதவும்.

வேளாண் சந்தை மேம்பாட்டுக்குப் பத்தாண்டு கால இலக்கும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை விரிவுபடுத்த வேண்டும் அல்லது வெளிமாநிலங்களில் உள்ளதைப் போல நகரத்தை ஒட்டிய நெடுஞ்சாலைக்கு அருகில் 50 முதல் 100 ஏக்கர் பரப்பில் பெரிய சந்தைகளை உருவாக்க வேண்டும். சந்தையில் கொள்முதல் செய்பவர்களுக்கும் பதப்படுத்தி விற்பனை செய்யும் வணிகர்களுக்கும் சந்தைக் கட்டணம், அரசு வரிகளில் சலுகை தர ஆவன செய்யலாம். உழவர் சந்தையில் தினசரி கடை ஒதுக்கீடு தவிர்த்து, வாரம் ஒரு முறை கடை ஒதுக்கீடு செய்யலாம். நாட்டுக் காய்கறிகளை உழவர்களும் மலைக் காய்கறிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் விற்க அனுமதிக்கலாம். நெடுஞ்சாலை அருகில் ‘நெடுஞ்சாலை சிறிய உழவர் சந்தை’ (Highway Mini Former Market) தொடங்கலாம்.

நெல் கொள்முதல் மையத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு அறுவடைக்கு முன் நெல் விற்கும் அளவைக் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கும்போது, இடைத்தரகர்களையும் வியாபாரிகளையும் தவிர்க்க முடியும். ஒரு நாடு முன்னேற்றம் அடைய விவசாயச் சந்தைகளும் தொழில் சந்தைகளும் மேம்பட்டாலே உணவு உற்பத்தியும் தொழில் சார்ந்த உற்பத்தியும் பெருகும்.

- சீனி.கலியபெருமாள், செயலாளர் (ஓய்வு), விற்பனைக் குழு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x