Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

தமிழ் கண்டதோர் வையை, பொருநை

தொகுப்பு: ஆதி

வைகை நதி நாகரிகமான கீழடி, 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் எச்சங்களுடன் தமிழ்நாட்டின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களை முன்வைத்தபோது உலகம் திரும்பிப் பார்த்தது. தமிழ் நிலம் அதைவிடவும் முற்பட்டது என்பதற்கான வலுவான சான்றுகளைத் தற்போது முன்வைத்துள்ளது பொருநை (தாமிரபரணியின் பழைய பெயர்) நதி நாகரிகம்.

சங்க இலக்கியம் போன்ற வளம் மிகுந்த இலக்கியச் செல்வம் நம்மிடையே இருந்தும், தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிராத நிலையில், தமிழ் நிலத்தின் தொன்மை வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்துவந்தது. அந்த பாராமுகத்தை கீழடி திருப்பிப்போட்டது. கீழடி அகழாய்வு நடைபெற்றபோதும், அது குறித்து எழுதப்பட்ட - பேசப்பட்டபோது, மக்களிடையே வரலாற்று உணர்வு புத்துயிர் பெற்றது. மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொல்லியல் தளங்களை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். முதல்கட்டத்தில் கீழடியின் தொன்மையைச் சில எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் மறுக்கத் தொடங்கினார்கள். ஆதாரங்கள் வரிசையாக உறுதிப்படுத்தப்பட்டபோது, கீழடியின் தொன்மை மறுக்க முடியாத ஒன்றாக மாறியது. இப்போது அதைவிடவும் தொன்மையான ஆதாரங்கள் பொருநை நதி பாயும் மண்ணில் கிடைத்துவருகின்றன.

ஆதிச்சநல்லூரில் 145 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மானிய ஆய்வாளர் பியதோர் ஜாகோரால் அகழாய்வு தொடங்கப்பட்டிருந்தபோதும், நாடு விடுதலை பெற்ற பின்பு பெரிய அளவில் தொல்லியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. நடைபெற்ற அகழாய்வுகளும் ஈமக்காடுகளிலேயே நடத்தப்பட்டன. அவற்றைக் கொண்டு ஒரு நாகரிகத்தின் தொன்மையையோ பண்பாட்டையோ முழுமையாக அறிய முடியாது. கீழடியிலும், தற்போது பொருநை நதி பாயும் பகுதிகளிலும் நடைபெற்றுவரும் அகழாய்வுகள் அந்தப் போதாமையைத் தீர்க்கும் அடியை வலுவாக எடுத்துவைத்துள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்குள்ள மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள் என்றே உலக மக்கள் இடப்பெயர்வு தொடர்பான நவீன ஆய்வுகள் கூறிவருகின்றன. மூத்த சிந்துவெளி அறிஞரான மறைந்த ஐராவதம் மகாதேவன், அவரை அடியொற்றி ஆய்வுசெய்துவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிந்துவெளிக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்புகள் குறித்துத் தொடர்ந்து கவனப்படுத்தி வந்திருக்கிறார்கள். கீழடியிலும் பொருநையிலும் கிடைத்துள்ள ஆதாரங்கள் அந்தத் திசைநோக்கியே நம்மை அழைத்துச்செல்கின்றன.

பொருநை நதி பாயும் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கண்டறிந்த ஆதாரங்களை ‘பொருநை நதி நாகரிகம்' என்கிற தலைப்பில் தமிழக அரசு மின்னூலாக வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிவகளை ஈமக்காட்டில் கிடைத்த ஒரு தாழியில் உமி நீக்கிய நெல்மணிகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் மியாமில் உள்ள பீட்டா ஆனலிடிக் டெஸ்டிங் லேபரட்டரியில் ஆய்வுசெய்தபோது, அந்த நெல்மணிகள் 3,155 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொருநை நதி நாகரிகம் குறித்த ஆய்வுமுடிவுகளைச் சட்டமன்றத்தில் வெளியிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழ் நிலத்திலிருந்து தொடங்கி எழுத வேண்டும்” என்று அறிவித்தார். அதற்கான மறுக்க முடியாத சான்றுகளை இந்த அகழாய்வுகள் வழங்கிவருகின்றன. அந்த அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் புதையல்களில் சிலவற்றை இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x