Published : 17 Sep 2021 01:02 PM
Last Updated : 17 Sep 2021 01:02 PM

பெண்களின் விடுதலையில் பெரியார்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி என்று தனது கடைசிக் காலம் வரை முழங்கிய பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் இன்று.

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே – எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே – அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே – அவர்
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்தும் இந்நாடே – அவர்
தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித்
தழுவியதும் இந்நாடே

எனப் பெண்ணிண் பெருமையை பாரதியார் தமது கவிதையில் எடுத்துக்காட்டியுள்ளார். பாரதியார் மட்டுமல்ல இவரைப் போன்றே பெண்மையைப் போற்றியவர்களுள் ஒருவர்தான் பெரியார். இவர் பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்மை ஒழிப்பு எனப் பெண்களுக்குத் தேவையான உரிமைக்காகத் தன்னுடைய பாதி வாழ்நாளைக் கழித்துள்ளார்.

பெண் விடுதலை:

ஈரோட்டுச் சிங்கம், பெரியார் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அவர் குரல் கொடுத்தார். சீர்திருத்தங்களைத் தன் வீட்டில் இருந்தே ஆரம்பித்தார். திருமணமாகி ஒரே மாதத்தில் விதவையான தன்னுடைய தங்கையின் 10 வயது மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். அந்நாட்களில் விதவைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது; தலையைக் குனிந்துகொள்ள வேண்டும்; வெள்ளைச் சேலைதான் அணிய வேண்டும்; நகை எதுவும் அணியக் கூடாது. ஒரு விதவை படும் துன்பத்தைக் கண்கூடாகப் பார்த்ததால் விதவை மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தவர். பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் கல்வியறிவு அடிப்படை என்பதை உணர்ந்து இருந்த பெரியார், ஆண்களைப் போல் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகை செய்வதும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

தேவதாசி முறை ஒழிப்பு

அக்காலத்தில் பக்தியின் பெயரால் பெண்கள் கோயிலில் நடமாடினர். பெற்றோர்களைப் பெண்களைப் பொட்டுக்கட்டி கோயில்களில் விட்டனர். இதனால் சமுதாயத்தில் தேவதாசி முறை வளர்ந்தது. அப்போது "கும்மி கோலாட்டங்களை மறந்துவிட்டு, ஆண்களைப் போல எல்லா விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும்; அப்போது தான் அவர்களுக்கும் பலமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்" என்றார். மேலும், ஆடம்பரத் திருமணங்களை எதிர்த்த பெரியார் அதற்குப் பதிலாக பணத்தைப் பெண்கள் பெயரில் வங்கியில் முதலீடு செய்யச் சொன்னார். இன இழிவை ஒழிக்கப் பெண்களும் போராட வேண்டும் என்றார். அப்போது மேலவை உறுப்பினராக இருந்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார். நீதிக்கட்சியினர் இதனை ஆதரிக்க முன்வராமல் மக்கள் கருத்தை அறிய முற்பட்டதை, பெரியார் சாடித் தீர்த்து விட்டார். பெரியார் மற்றும் முத்துலட்சுமி அம்மையார் ஆகியோரின் தொடர் போராட்டத்தால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

1920-ல் மனைவியையும், இளைய சகோதரியையும் பொது வாழ்வில் ஈடுபடச் செய்தார். 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் கள்ளுக்கடை மறியலின் போது கைது செய்யப்பட பெரியாரும், அவருடைய தொண்டர்களும் ஒரு மாத சிறை தண்டனை பெற்றனர். இதனால் தமிழ்நாடெங்கும் கலவர சூழ்நிலை ஏற்பட்டது. அச்சமயம் பெரியாருடன், மனைவி நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும் கூட மறியலில் ஈடுபடுத்தினார்.

இதுகுறித்து தேசத்தந்தை காந்தியடிகள், "கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டில் உள்ள இரு பெண்களிடம்தான் உள்ளது. அவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்". கள்ளுக்கடை மறியலுக்கு இவ்விருவரும் முக்கிய காரணமானவர்கள் என்பதாலேயே காந்தியடிகள் இவ்வாறு கூறினார்.

சுயமரியாதைத் திருமணம்

சமுதாயத்தில் திருமணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு ஆணும், பெண்ணம் தங்கள் வாழ்க்கைத் துணையாக ஒருவருக்கு ஒருவர் ஏற்றுக்கொள்வதுதான் திருமணமாகும். ஆனால், இங்கு ஆணாதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஆண்கள் பெண்களை அடிமையாகக் கருதியதால் பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவது என்ற பழக்கத்தை ஏற்படுத்தி வைத்தனர். ஆண்களும், பெண்களும் சமம் என்று கருதுகிற இச்சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் ஏன் ஆண்கள் தாலி அணிவிக்க வேண்டும். பெண்களும் ஆண்களுக்குத் தாலி அணிவிப்பதில் குற்றமில்லை என்று முழங்கினார் பெரியார். பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று அடையாளம் காட்டத் தாலி கட்டப்படுவதை அறவே வெறுத்தார் பெரியார்.

தாலியை அடிமைச் சின்னமாகக் கருதிய பெரியார், திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டைத் தாலி எடுத்துக்காட்டுவதாக இருந்தால் ஆண்களுக்கு உள்ள அடையாளம் என்ன? என்று கேட்டார். எனவே, பெண்களும் ஆண்களுக்குத் தாலி கட்டுவதே நியாயம் என்று வாதிட்டார். 'கற்புக்கரசி' போல 'கற்புக்கரசன்' என்ற வார்த்தை ஏன் இல்லை?!

1930-ல் விருதுநகரில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் ஈ.வெ.ரா பேசியபொழுது பெண்கள் சுயமரியாதை பெற சுதந்திர உணர்வு பெறத் தாலி கட்டும் முறை ஒழிந்தாக வேண்டும் என்றார். சுயமரியாதையுள்ள மனிதத் தன்மை அற்றுவிட்டது என்பதற்குத் தாலி கட்டும் பழக்கமே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றார். ஒரு தந்தைக்குரிய பாசத்துடனும், பொறுப்புடனும் பெண்ணிணத்தின் நன்மைக்காகப் பாடுபட்டதால்தான் “தந்தை பெரியார்” என்று பின்னாட்களில் அவர் அழைக்கப்பட்டார்.

குடும்ப நலத்திட்டம்:

பெரியார் பெண் கல்விக்காகப் பாடுபட்டார். “ஓநாயிடம் ஆடுகள் எப்படி சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும்?”. அதேபோல ஆண்கள் பெண்களுக்குச் சுதந்திரம் தருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றார் பெரியார். குடும்பக் கட்டுப்பாடு அவசியம் பற்றி 1928-ம் ஆண்டிலேயே பெரியார் பிரச்சாரம் செய்தார். “பெரியாரின் தீர்க்க தரிசனம் வியப்பளிக்கச் செய்கிறது அல்லவா? கர்ப்ப சூட்சி என்னும் ஒரு நூலினை வெளியிட்டார். அதைத்தான் பிற்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு, குடும்ப நலத்திட்டம் என்றார்கள்.

பெரியாரின் எதிர்ப்பு நூல் “மதர் இந்தியா”

பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனைகளுக்கு 1927-ல் வெளியான சர்ச்சைக்குரிய ஒரு புத்தகம் காரணமாக அமைந்துள்ளது. காந்திக்கும் காங்கிரஸுக்கும் சுத்தமாக பிடிக்காத புத்தகம் அது. அந்தப் புத்தகம் அமெரிக்க பத்திரிக்கையாளரான கேத்ரின் மேயோ எழுதிய “மதர் இந்தியா” எனும் நூல். இந்து சடங்கு சம்பிரதாயங்கள் எப்படியெல்லாம் பெண்களைச் சுரண்டுகின்றன என்பதை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தியிருந்தார் கேத்தரீன் மேயோ. குழந்தைத் திருமணம், பாலியல் நோய்கள், விதவைகள் நடத்தப்படும் விதம் குறித்த புள்ளி விவரங்களுடன் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். பதினான்கு வயதுக்கு முன்பாக பெண்கள் திருமணம் செய்து கொடுக்கப்படும் பாரம்பரியத்தை அரசு ஏற்பது குறித்தும் அவர் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால், அமெரிக்காவைச் சார்ந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரி கருத்து வெளிவந்தது, இந்திய சுயாட்சி என்பது பெண்களுக்கு மிக மோசமான விஷயமாக அமையும் என்பதைப் புலப்படுத்தியது.

கேத்தரீன் மேயோ பிரிட்டிஷ் உளவாளி என்ற சந்தேகம் பல இந்தியர்களுக்கு இருந்தது. காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை இந்து மதம்தான் பெண்களின் மிகச் சிறந்த பாதுகாப்பு என்றார்கள். மதர் இந்தியாவில் சொல்லப்பட்ட கருத்துகளை பெரியார் வேறு மாதிரி பார்த்தார். இந்து மதத்தின் மீதான தாக்குதல் அவருக்கு மகிழ்ச்சியளித்தது என்றாலும் இந்த சர்ச்சையினால் மேலே வந்த சமூகப் பிரச்சினைகளையும் ஐரோப்பாவில் உருவாகியிருந்த பெண்ணிய இயக்கங்களைப் பற்றியும் அவர் அறிந்துகொண்டார்.

தன்னுடைய உரைகளிலும் தன்னுடைய வாரப் பத்திரிகையிலும் நேரடியாகவும் போலிப் பூச்சுகள் இன்றியும் இவற்றை முன்வைத்தார் பெரியார். 1928-29-ல் கிராமப்புற ஆண்களும் பெண்களும் சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகொள்ள ஆரம்பித்தனர். பெரும்பாலும் காதல் திருமங்களான இவை பிராமண பூசாரிகள் இன்றியும் மந்திரங்கள் இன்றியும் நடத்தப்பட்டன. பல நாட்கள் நடக்கும் திருமணங்களுக்கு பதிலாக, திருமணம் எளிதாகவும் வேகமானதாகவும் முன்வைத்தார் பெரியார். ஆணாதிக்கத்தை ஒழிப்பது என்பது பெரியாரின் லட்சியங்களுள் ஒன்று. ஆனால் சில காலத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் சமமாக நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்கள் மிக முக்கியமானவையாக, திருப்புமுனைத் தருணங்களாக அமைந்தன.

குடும்ப நலத்திட்டம்:

தர்க்கரீதியான, பகுத்தறிவின் அடிப்படையிலான விவாதங்கள், ஆண் – பெண் இடையில் ஒளிவுமறைவற்ற பேச்சுகளுக்கு வழிவகுத்தன. இவை யாருக்கோ திருமணம் செய்துகொடுக்கும்போது, பெண்கள் ஏதும் தெரியாதவர்களாக இருப்பதை பெற்றோர் விரும்பினர். விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் பெண்கள் அறிவு ரீதியாவும், உடல் ரீதியாகவும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென பெரியார் கூறினார். இந்தப் பெண்கள் வளர்ந்து திருமணம் செய்யும்போது அவர்களே தேர்வுசெய்த ஆணைத் திருமணம் செய்வது சிறந்தது. குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமென பெரியார் விரும்பினார். இது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட கருத்து அல்ல. பெண்களின் உடலமைப்பு, பாலியல் நடவடிக்கைகள் ஆகியவை வாழ்வின் பிற அம்சங்களிலும் எப்படி எதிரொலிக்கும் என்பதை வைத்துச் சொல்லப்பட்ட கருத்து என்றார் ஈ.வெ.ரா.

பெரியாரின் எதிர்ப்பு குறள், பாடல்

''பெண்கள் அணு அளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் இந்தியா உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது'' என்ற தேசப்பிதாவின் நம்பிக்கையை மனதில் இருத்தியவர் பெரியார். பெண்ணடிமைச் சிந்தனைகள் காணப்படுகின்ற குறள்களையும் ஒளவையாரின் வாக்குகளையும் கூட அவர் எதிர்த்தார்.

"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை"

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

ஆண்களைப் பெண்கள் தொழுதெழ வேண்டும் என்றால், பெண்களையும் ஆண்கள் தொழுதெழ வேண்டும் என்றார் பெரியார். "தற்கொண்டான்" என்ற சொல்லுக்கு பெண்ணை - மனைவியை உடைமையாகக் கொண்டவன் என்ற பொருள். "தற்கொண்டாள் " என்று ஏன் கூறவில்லை எனக் கேட்டார் பெரியார்!

பெண்ணடிமையைப் பெருமையாக கருதிய மூடர்கள்,

'தையல் சொல் கேளேல்"

'பேதைமை என்பது மாதர்க்கு அணிகலன்"

போன்ற ஒளவையின் வாக்குகளை மேற்கோள் காட்டினார்கள். பெண்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்றால் ஒளவையாரின் பேச்சை மட்டும் செவி மடுக்கலாமா என்று அவர் வினவினார்.

விதவை மறுமணம்:

"வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?"

என்ற பாரதிதாசன் வரிகளை நினைவுகூரும் வகையில் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் 'விதவை மறுமணத்தை' ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார். பெண்களின் திருமண வயது 16க்கும் மேற்பட்டிருக்க வேண்டும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும், ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்களைப் பெண்களுக்கே ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா "பெண்கள் முன்னேறி இருந்தால் அச்சமூகமே முன்னேறிவிட்டது” என்று பொருள். அமெரிக்கச் சமுதாயமே அதற்கு நல்ல உதாரணமாக திகழ்கிறது" என்றார். இன்று பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. என்றாலும், பாலியல் வன்முறை உள்பட சந்திக்கும் சவால்களும் ஏராளமாகவே இருக்கின்றன.

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பையும், பெண் விடுதலையையுமே தனது முழு லட்சியங்களாகக் கொண்டு ஒரு நூற்றாண்டு காலம் போராடியவர் பெரியார். சாதி ஒழிப்புக்கும், பெண் விடுதலைக்கும் தடையாய் இருந்த மதம், கடவுள், சாஸ்திரங்கள் என எல்லாவற்றையும் கடுமையாகச் சாடி, அவற்றைச் சுக்கு நூறாக்கியவர். மனிதனுக்கு மனிதன் சமம் என்று சூளுரைத்தவர். அடிமைத்தனம் எந்த வகையிலானாலும் அதை எதிர்க்க சற்றும் தயங்காதவர்.

அவருடைய போராட்டத்தின் பலனாகத்தான் இன்றுவரை தமிழ்நாடு எந்தவிதமான அடக்குமுறைகளுக்கும் முதலில் குரல் கொடுக்கும் சுயமரியாதை மிக்க மாநிலமாய், போராடும் மாநிலமாய் தனித்த அடையாளம் பெற்றிருக்கிறது. இதில் தந்தை பெரியார் பேசிய பெண் விடுதலை என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு யாரும் பேசிராத வகையில் தனித்துவமானது.

பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்கத்தினால் அடிமைகளாக இருந்த, இருக்கின்ற பெண்ணினத்தின் விடுதலைக்காகப் போராடி, பெண்ணினத்தின் விடுதலைப் பாதைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை நடத்துவதைவிட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். இது தந்தை பெரியார் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரோட்டில் ஆற்றிய உரையின் சிறு துளி. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் ஆற்றிய இந்த உரை இன்றும் நம் சமூகத்துக்கு பொருத்தமாய்தான் இருக்கிறது

ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை நாம் ‘பெரியார்’ என அழைக்கிறோம். பெரியார் எனும் பட்டம் அவருக்கு 1938ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் அவருடைய பெண் விடுதலை கருத்துகளுக்கும், போராட்டங்களுக்குமாக பெண்களால் கொடுக்கப்பட்டது. பெண்கள் மாநாட்டில், பெண்களால் வழங்கப்பட்ட இந்தப் பட்டத்துக்கு நூறு சதவிகிதம் உரித்தானவர் பெரியார் என்றால் அது மிகையாகாது? பெண் கல்விக்குக் குரல் கொடுத்தல், இளம் வயது திருமணங்களுக்கு எதிர்ப்பு, கட்டாயத் திருமணங்களை ஒழித்தல், மறுமணங்களை ஊக்குவித்தல், பெண்களுக்குச் சொத்துரிமை என வாழும் காலமெல்லாம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரல் கொடுத்தவர் அவர்.

இந்திய விடுதலைக்கு முன்னரே ‘பெண் விடுதலை’ பற்றிப் பேசியவர் பெரியார். பெரியார் என்றொருவர் இல்லை என்றால், இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்க முடியாது. ‘பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்’ என ஆணாதிக்கத்தைச் சாட்டையால் அடிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டவர்.

உலகமெங்கும் திருக்குறளைக் கொண்டு செல்ல விரும்பியவர் பெரியார். ஆனால், அதற்காக அதில் உள்ள குறையையும் விவாதிக்காமல் அமைதி காக்கவில்லை. உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறள் நூலே சமத்துவம் பேசவில்லை என்னும் பேருண்மையை பதிவிட்டவர் அவர்.

சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.

“காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை; பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்க வேண்டும்” என்ற பொருளை இக்குறள் தருகிறது. இது பெண்களை இழிவுபடுத்துவதாய் உள்ளது என்று சாடினார் பெரியார். கல்வி கடவுளாக சரஸ்வதியும் செல்வத்துக்கு லக்ஷ்மியும் இருந்த நாட்டில்கூடப் பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் மறுக்கப்பட்டன. ஆனால், அதை எல்லாம் உடைத்துப் பெண்களுக்கு கல்வியுரிமையும், சொத்துரிமையும் பெற்றுத் தந்த மாபெரும் தலைவர் அவர்.

கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது என்றும், உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை எனவும், அப்படியே இருந்தாலும் அது ஏன் ஆண்களுக்கில்லை? ஏன் எந்த இலக்கியப் புராணங்களும் ஆணின் கற்பை சோதிக்கவில்லை? கொண்டாடவில்லை? எனக் கேள்விகளை எழுப்பியவர். கற்புக்காகப் புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மையன்பை, காதலை மறைத்துக்கொண்டு - காதலும், அன்புமில்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும் என்று பெண்கள் விடுதலைக்கு என்றைக்கும் பொருந்தும் கருத்துகளைத் துணிந்து பேசியவர் பெரியார்.எப்படி ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்கிறானோ, அதேபோல ஒரு பெண்ணும் தான் விரும்பும் ஆணைத் திருமணம் செய்யலாம். மறுமணம், திருமண விடுதலை, சொத்துரிமை போன்ற கருத்துகளைக் கொண்டு இச்சமூகம் பெண்ணுக்கு இழைத்த அநீதியைத் தோலுரித்தார்.

கெட்ட வார்த்தைகள் கூட ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிப்பதாய் மட்டுமே இருக்கின்றன. ஏன் விபச்சாரகன் என்ற சொல் வழக்கில் இல்லை? விபச்சாரம் செய்யும் நிலைக்கு ஒரு பெண்ணைத் தள்ளுவது ஆண் வர்க்கம்தானே? மது உடல் நலனுக்குக் கேடுதான். ஆண்கள் குடித்தால் அது உடல்நலம் பற்றியது. பெண்கள் குடித்தால் மட்டும் எப்படி கலாச்சாரம் சீர்குலையும்? பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என அவர்கள் முடிவு செய்யட்டும். அவர்கள் அலமாரியில் ஆண்களுக்கென்ன வேலை?

இது போன்ற, இச்சமூகம் பதில் கூறாமல் மௌனம் கொள்ளச்செய்யும் கேள்விகளைத் தொடுத்தவர்.

தற்போது, இந்தச் சமூகம் பேசத் தயங்கும் பெண்ணியக் கருத்தியலை அந்தக் காலத்திலேயே மிகவும் முற்போக்காகத் தீவிரமாகப் பேசியவர் அவர். உலகப் பெண்ணியவாதிகளின் Guide என அழைக்கப்படும் புத்தகம் “The second sex” அதிகப் பக்கங்களைக் கொண்ட புத்தகம். ஆனால், அதற்கு இணையாக வெறும் 60 பக்கங்களில் “பெண் ஏன் அடிமையானாள்” எனும் புத்தகத்தை எழுதிய மேதை அவர்.

இனப்பற்று, மொழிப்பற்று, சாதிப் பற்று, மதப் பற்று என எந்தப் பற்றும் இல்லாத மனிதர் அவர்.

பெரியாரின் பார்வையில் எது பெண்ணியம்?

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் உணராத உரிமைகளைப் பற்றியும், சுதந்திரம் பற்றியும் பேசுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’. இச்சமூகத்தில் ஆணுக்குப் பெண் கேள்விக்கிடமின்றி சரி நிகர் என சொல்வதே ‘பெரியாரின் பெண்ணியம்’. பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் ஒரு வட்டத்துக்குள் அடங்கும் அடிமைதான் எனக் கூறுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’. பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், செயலையும் தகர்த்தெரியும் தளமே ‘பெரியாரின் பெண்ணியம்’.

பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவற்றிலும் சம உரிமை வழங்குவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.

- பி.ஜீவானந்தம்

டிஜிட்டல் மாணவ பத்திரிகையாளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x