Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

கஞ்சா செடி வளர்ப்பை முறைப்படுத்துங்கள்!

செ.சரத்

கடந்த ஆண்டு, ஐநா சபையின் போதைப்பொருள் மருந்துகள் ஆணையம் கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இதனால், கஞ்சாவை மருந்துத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

ஆம், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் கஞ்சாவைச் சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்திவந்த நிலையில், இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட போதைப்பொருளாக இருந்துவந்தது. எனினும், கஞ்சாவில் இருக்கும் மருத்துவக் குணங்கள் அளப்பரியன ஆகும். கஞ்சாவை முறைகேடாகப் பயன்படுத்துவதிலிருந்தும், போதைப்பொருளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டும் அதனை நம் ஒன்றிய அரசு தடை செய்திருந்தது. இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐநா போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் கஞ்சாவை நீக்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சில பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஐநா போதைப்பொருள் மருந்துகள் ஆணையத்தின் 63-வது கூட்டத்தில் கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 57 உறுப்பு நாடுகளில் இந்தியா கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க ஆதரவாக வாக்களித்தது. மொத்தம் 27 நாடுகள் ஆதரவாக வாக்களித்த காரணத்தால், கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்குவதாக ஐநா அறிவித்துள்ளது.

கஞ்சாவின் வரலாறு என்பது ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்டதாகும். இதனை அறிவியல்ரீதியாக கானபிஸ் இண்டிகா (Cannabis indica), கானபிஸ் சட்டீவா (Cannabis sativa) என இரு செடிகளாக இந்தியாவில் வகைப்படுத்தியுள்ளனர். மேலும், கஞ்சா செடியின் இலைகள், மொட்டுகள், விதைகள், நார், அதனுடைய பிசினைக் கொண்டு உருவாக்கப்படும் எண்ணெய் என அனைத்தும் பயன்பாட்டுக்குரியவை. முக்கியமாக இந்தியாவில் கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் வலிநிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும், தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்திவந்துள்ளனர். பின்பு 19-ம் நூற்றாண்டில் வலிப்பு, மனநோய், அல்சைமர், புற்றுநோய் என மருத்துவப் பயன்பாட்டில் கஞ்சா இடம்பிடிக்க ஆரம்பித்தது.

இப்படி எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட கஞ்சா, போதைப்பொருள் என்னும் குறுகிய வார்த்தைக்குள் சிறைப்பட்டுப் போனதென்பது மனிதர்களின் வரலாற்றுப் பிழையே. இதன் பொருட்டே கஞ்சா மூலம் சமூகத்தில் நிலவும் வன்முறையை அறிந்த ஐநா சென்ற நூற்றாண்டில் உலகெங்கும் கஞ்சாவைப் பயன்படுத்தத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து 1985-ம் ஆண்டு முதல் இந்தியாவும் கஞ்சா பயன்பாட்டை அனைத்து வடிவத்திலும் தடைசெய்தது.

எனினும், மருத்துவத்தில் தனக்கென நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் கஞ்சாவை மீண்டும் பயன்பாட்டுக்குக்குக் கொண்டுவர ஆசைப்பட்ட அமெரிக்கா, 2004 முதல் தடையை நீக்கிக் கட்டுப்பாடுகளுடன் சில மாநிலங்களில் அதனை அனுமதித்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 26 மாகாணங்களிலும் தடை நீக்கப்பட்டதுடன், 11 மாகாணங்களில் அதிகாரபூர்வமாகத் தனிமனிதப் பயன்பாட்டிலும் இருக்கிறது. அத்துடன் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் எந்த வகையான கஞ்சாவைப் பயன்படுத்தலாம் எனத் தனது ஆராய்ச்சியின் மூலம் விரிவாகத் தெளிவுபடுத்தியது. சி.பி.டி. கொண்டிருக்கும் கஞ்சா சிபி-2 ரிசெப்டார் என்னும் ஏற்பியுடன் இணைவதால் மருத்துவம் சார்ந்த வலி நிவாரணியாக இருக்கும். எனவே, சி.பி.டி. கொண்டிருக்கும் கானபிஸ் என்ற கஞ்சாதான் அமெரிக்காவிலும் கனடாவிலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்தியாவில் உத்தரா கண்ட் மாநிலத்தில் 2018-ம் ஆண்டு முதல் சில கட்டுப்பாடுகளுடன் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக கஞ்சா செடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் மணிப்பூரிலும் அனுமதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது இமாச்சல பிரதேச மாநிலமும் அனுமதி தரப்போவதாகக் கூறியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் குல்லு, மண்டி மாவட்டங்களில் விளையும் கஞ்சாவுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உண்டு. அதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,000 கோடி வருமானம் இமாச்சல பிரதேச அரசாங்கத்துக்குக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் கானபிஸ் கஞ்சாவின் சந்தை வளர்ச்சி என்பது 2027-ல் 15.8 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய விதை தொழிற்சாலை அமைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் வர்த்தகத்தில் கானபிஸ் கஞ்சாவின் மதிப்பு என்பது 25 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் என்பதால், இந்திய அரசு அதில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என்றும் தொழில் வளர்ச்சி சார்ந்த ஏற்றுமதிக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. முக்கியமாக, இந்தியாவின் கானபிஸ் இண்டிகா மற்றும் கானபிஸ் சட்டீவா ரகங்களுக்கு அயல்நாட்டுச் சந்தையில் வரவேற்பு இருப்பதை உணர்ந்து இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் கஞ்சா முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனை சட்டபூர்வமாக மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் கஞ்சாவை அனுமதிக்க வேண்டும் என்று அன்றைய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மைத் துறை அமைச்சர் மேனகா காந்தி சட்ட முன்வரைவு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை ஆய்வுசெய்த அப்போதைய அமைச்சர் குழு, அதில் சிறுசிறு மாற்றங்களைச் செய்து கஞ்சாவை மருந்து வடிவில் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

எனவே, மருத்துவப் பலன் மற்றும் தொழில் சாத்தியங்கள் நிறைந்திருக்கும் கஞ்சா செடி வளர்ப்பை அரசு முறைப்படுத்த வேண்டும். புற்றுநோய் போன்ற நோய்களால் மிகுந்த வலியை எதிர்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: saraths1995@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x