Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

பெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற துறைகளுக்கும் முன்மாதிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியிலிருந்து விரைவில் செயல்படவிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஆலையானது, முன்பே அறிவிக்கப்பட்டபடி முழுவதும் பெண்களால் இயக்கப்படும் வாகனத் தொழிற்சாலையாக அமையவிருக்கிறது. முதற்கட்டமாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30%-லிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், தனியார் துறையிலிருந்து பெண்களுக்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை அளிக்கும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்பதோடு உற்பத்தித் தொழில் துறையின் மற்ற துறைகளும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவை.

போச்சம்பள்ளி இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையின் பூர்வாங்கப் பணிகள் 2020 டிசம்பரில் அன்றைய முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்துவருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே மின்வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்துவருகிறது. அதைக் கருத்தில் கொண்டு ஆண்டொன்றுக்கு ஒரு கோடி இ-ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் இலக்கோடு வாகன உற்பத்தியில் இறங்கியிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ரூ.2,400 கோடி முதலீட்டில் அந்நிறுவனம் உருவாக்கிவரும் வாகனத் தொழிற்சாலையானது முழுவதும் பெண் தொழிலாளர்களைக் கொண்டு செயல்படவிருக்கிறது என்பது உற்பத்தித் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் உற்பத்தித் தொழிற்துறையில் பெண்கள் போதிய கல்வித் தகுதியும் அனுபவங்களும் கொண்டிருந்தாலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெரும் சவாலாகவே இருந்துவருகின்றன. மருத்துவத் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளபோதும் அவற்றோடு ஒப்பிடுகையில் உற்பத்தித் தொழிற்துறையில் மிகவும் குறைவு. உற்பத்தித் தொழில் துறையில் பெண்களின் ஒட்டுமொத்தப் பங்கேற்பு 12%-தான் என்று மதிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பொறியியல் தொடர்பான துறைகளில் 3% மட்டுமே. பெண்கள் பெரிதும் தகவல் தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுக்கக் காரணம் நல்ல ஊதியம், பணியிடங்களில் நிலவும் பாலின சமத்துவம், உடலுழைப்பின் அவசியமின்மை ஆகியவைதான். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், உற்பத்தித் தொழில் துறையில் பங்கேற்பு குறைந்திருப்பதற்கு, அவர்களால் உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் ஈடுபட இயலாது என்ற அனுமானங்களும் முக்கியக் காரணம். அந்த அனுமானங்கள் தவறானவை என்று சமீப காலமாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. உலகின் மிகப் பெரிய கனிமச் சுரங்க நிறுவனமான வேதாந்தா, சமீபத்தில் லாஞ்சிகாரில் உள்ள தனது அலுமினியத் தொழிற்சாலையின் மத்திய கட்டுப்பாட்டு அறையை முழுவதும் பெண் தொழிலாளர்களின் பொறுப்பில் ஒப்படைத்தது அதற்கு நல்லதொரு உதாரணம். முழுமையான பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கி, பணியாற்றும் வாய்ப்பை அளிக்கும்பட்சத்தில் உற்பத்தித் தொழிற்துறையிலும் பெண்களால் ஆண்களுக்கு இணையான பங்கேற்பை அளிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x