Last Updated : 14 Sep, 2021 03:13 AM

 

Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

நாம் ஏன் விளையாட்டில் சிகரம் தொடுவதில்லை?

வாராது வந்த மாமணியாய் அமைந்துவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவுபெற்ற பாராலிம்பிக்கில் இந்தியா, 5 தங்கம் உள்பட 19 பதக்கங்களை வென்றெடுத்தது. 1968 முதல் 2016 வரை நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெற்ற ஒட்டுமொத்தப் பதக்கங்களைக் காட்டிலும் இது அதிகம். இந்தியர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். முன்னதாக ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கின. உற்சாக அலைகள் அப்போதே உயரலாயின. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களைக் கையகப்படுத்தியது. இதுவரை இந்தியா கலந்துகொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்த முறை பெற்ற பதக்கங்கள்தான் அதிகம்.

ஒலிம்பிக்கில் தொடங்கிய ஆரவாரம் பாராலிம்பிக்கிலும் நீண்டது. எனில், இப்போது உற்சாகம் வற்றிவிட்டது. சற்றே விலகி நின்ற கிரிக்கெட் மீண்டும் கால் மடக்கி அமர்ந்துகொண்டு விட்டது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இந்தியா போன்ற மனித வளமும் இளைஞர் திரளும் மிக்க ஒரு நாட்டுக்கு இந்தப் பதக்கங்கள் போதுமானவையா?

பாராலிம்பிக்கிலும் ஒலிம்பிக்கிலும் முதலிடத்தைக் கைப்பற்றிய சீனாவும் அமெரிக்காவும் பெற்ற பதக்கங்கள் முறையே 207, 113. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 24-வது இடம், ஒலிம்பிக்கில் 48-வது இடம். கடந்த நூறு ஆண்டுகளில் இந்தியா பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களின் கூட்டுத்தொகை வெறும் 35. ஏன் இந்த நிலை?

நாம் மாரியப்பனின் கதையிலிருந்து தொடங்கலாம். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம், சித்தாளாக வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார் தாய். ஐந்து வயதுச் சிறுவன் மாரியப்பனின் கால்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியது. ஆனால், அந்தச் சக்கரத்தால் மாரியப்பனின் கால்களை முடக்க முடியவில்லை. அவை தாண்டிக் குதித்த உயரம், அவரை 2016-ல் ரியோவுக்கும் 2021-ல் டோக்கியோவுக்கும் கொண்டு சென்றது. அவர் படித்த அரசுப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியருக்கு மாரியப்பன் ஒரு நட்சத்திரம் என்பது தெரிந்திருந்தது.

டோக்கியோவிலிருந்து சென்னை திரும்பியதும் மாரியப்பன் தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்தார். முதல்வரிடம் அவருக்கு ஒரு கோரிக்கை இருந்தது. இப்போது மாரியப்பன் ஒன்றிய அரசுப் பணியில் இருக்கிறார். தமிழ்நாடு அரசின் குரூப்-1 அலுவலராகத் தன்னைப் பணியமர்த்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை. மாரியப்பன் மட்டுமில்லை, சர்வதேசப் போட்டிகளிலும் தேசியப் போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் பலருக்கும் ஒன்றிய அரசோ மாநில அரசோ வேலைவாய்ப்பை நல்குகிறது. தங்கள் வாழ்வாதாரத்துக்கு அவர்களுக்கு ஒரு வேலை அவசியமாக இருக்கிறது. அதனால், நம்முடைய விளையாட்டு வீரர்களில் பலரும் அமெச்சூர்கள்தான். முழு நேரமும் பயிற்சியில் கவனம் செலுத்த முடியாதவர்கள். இது தங்களை நிரூபித்துக்கொண்டவர்களின் நிலை. வளர்ந்துவரும் இளம் வீரர்களில் பலரும் விளையாட்டு உடுப்புக்கும் சப்பாத்துக்கும் உள்ளூர்ப் புரவலர்களை இரந்து நிற்கிறார்கள்.

முன்பெல்லாம் கல்லூரிகளில் நுழைவதற்கும் அரசாங்க வேலைகளைப் பெறுவதற்கும் விளையாட்டுத் தகுதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. காலம் மாறிவிட்டது. பள்ளி இறுதி மதிப்பெண்களே கண்டுகொள்ளப்படாத ‘நீட்’டின் காலத்தில் நாம் வாழ்கிறோம். விளையாட்டைக் குறித்தும் உடல் வலுவைக் குறித்துமான நமது சிந்தனை மாற வேண்டும்.

இந்த இடத்தில் எனது நண்பனின் கதையைப் பகிர்ந்துகொள்கிறேன். நண்பனின் பெயர் ரத்தினம் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டக்காரன். வாலில் பந்தம் கொளுத்திவிட்ட ராக்கெட்டைப் போலச் சீறி வருவான். 100×4 ரிலே ரேஸில் நான்காவது ஓட்டக்காரன் எப்போதும் ரத்தினம்தான். பங்காளிகள் எப்படிச் சொதப்பினாலும் அவன் இறுகப் பற்றிவரும் குறுந்தடிதான் வெற்றிக்கோட்டை முதலில் கடக்கும். நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கிறபோது அவன் மாவட்ட அளவில் பிரபலமானான். ஆனால், அவன் பத்தாம் வகுப்புக்கு வர முடிந்ததே பழனியப்பன் சாரின் சிபாரிசில்தான் என்று ஒரு பேச்சு இருந்தது. பழனியப்பன் சார் விளையாட்டு ஆசிரியர். ரத்தினம் அவரின் செல்லப் பிள்ளை.

‘ரத்தினம் ஒரு நாள் 100மீட்டர் தூரத்தை 10 நொடிகளில் கடந்துவிடுவான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பழனியப்பன் சார். 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் காரல் லீவிஸ் அதைச் செய்தார். அந்தச் சாதனையை ரத்தினம் நிகழ்த்த வேண்டும் என்ற சாரின் விருப்பம்தான் நடக்கவில்லை. அப்படி எதையும் செய்வதற்கு இந்த தேசம் ரத்தினத்தை அனுமதிக்கவில்லை. ரத்தினத்தால் பத்தாம் வகுப்பைக் கடக்க முடியவில்லை. பழனியப்பன் சாரால்கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அதற்குப் பிறகு பதினோராம் வகுப்பை (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி.) அவன் கடக்கவேயில்லை. அத்துடன் அவன் பள்ளி வாழ்க்கை முடிந்தது. விளையாட்டும் பயிற்சியும் பள்ளியோடு இயைந்து கிடந்ததால், அவனது விளையாட்டு வாழ்க்கையும் முடிந்தது.

மேற்கு நாடுகளிலும், சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் விளையாட்டு வீரர்கள் இளம் வயதில் இனம்காணப்படுகின்றனர். அவர்கள் அறிவியலிலும் ஆங்கிலத்திலும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலும் ரத்தினத்துக்கு நேர்ந்ததுபோல் விளையாட்டுப் பயிற்சியின் கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்படுவதில்லை. விளையாட்டு வீரர்களை அரசு மட்டுமில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆதரிக்கின்றன. நம் நாட்டில் கார்ப்பரேட்களுக்கு கிரிக்கெட் மட்டுமே தெரிகிறது. ஆலய வாசலில் நிற்கும் நந்தன்களின் கண்களில் ஈசன் தெரிவதில்லை; கார்ப்பரேட்களின் கண்களுக்கு நந்தன்கள் தெரிவதில்லை.

‘விளையாட்டு வீரர்களை நகர்ப்புறங்களில் அல்ல, கிராமப்புறங்களில் தேடுங்கள்’ என்றார் வீரேன் ராஸ்குயின்ஹா. இந்திய ஹாக்கி அணியின் தலைவராக இருந்தவர். வீரேனின் கூற்றை நாம் இன்னும் நீட்டிக்கலாம். விளையாட்டு வீரர்கள் மேட்டுக்குடியிலிருந்து அல்ல, நடுத்தர வர்க்கத்திலும் உழைக்கும் வர்க்கத்திலும் இருந்துதான் அதிகமும் உருவாகிறார்கள். இதுவரை நடந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியல் இதைத் துலக்கமாக்கக் கூடும். செல்வத்தை அது இருக்கிற இடத்தில்தான் தேட வேண்டும்.

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒருவர் இந்தியர். இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் இளைஞர் (15-24 வயது). இப்படியான இளைஞர் பட்டாளம் நம் கையில் இருக்கிறது. அதே வேளையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 19 கோடிப் பேர் காய்ந்த வயிற்றோடு இரவு படுக்கைக்குப் போகிறார்கள் என்கிற புள்ளிவிவரம் நம்மைச் சங்கடப்படுத்துகிறது. விளையாட்டு வீரர்களுக்கு உறுதி கொண்ட உடல் வேண்டும். அதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வேண்டும். எல்லாத் தாய்மார்களாலும் செங்கல் சுமந்து மாரியப்பன்களை உருவாக்கிவிட முடியாது. அரசாங்க நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களை இனம்காண வேண்டும். அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு உண்டு-உறைவிடப் பள்ளிகளை நாடெங்கிலும் தொடங்க வேண்டும். முதல் கட்டமாக மாவட்டத் தலைநகர்களில் தொடங்கலாம். அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவும் தரமான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நல்ல விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும். இதற்கெல்லாம் அதிக காலம் வேண்டி வரலாம். ஆனால், அதற்கான தீர்க்கமான அடிகள் எடுத்து வைக்கப்பட வேண்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x