Published : 25 Jun 2014 08:00 AM
Last Updated : 25 Jun 2014 08:00 AM

உள்ளாட்சி அமைப்புகளும் உறைக்கும் உண்மையும்

திரும்பிப் பார்க்க வைக்கிறது, திருச்சி மாவட்டத்தில், முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டதும், கிளிக்கூடு ஊராட்சி நிர்வாகத்தின்கீழ் வருவதுமான கவுத்தரச நல்லூரில் சமீபத்தில் நடந்திருக்கும் சம்பவம்.

அந்தக் கிராமத்தின் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்குச் செல்ல, வழியில் உள்ள வாய்க்காலைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை. ஒவ்வொரு நாளும் சாகசம் செய்ய முடியுமா? எனவே, அந்த வாய்க்காலைக் கடக்க உதவியாக ஒரு பாலம் கட்டித்தருமாறு அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிவந்தனர். அதன் விளைவாக, பாலம் கட்ட ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான முதல் கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டன. எனினும், வாய்க்காலில் அதிக நீர்வரத்து இருந்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. நீர்வரத்து குறைந்த பின்னர், பணிகள் மீண்டும் தொடரும் என்று நினைத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் பின்னரும் எந்தப் பணியும் நடக்கவில்லை. என்னவென்று விசாரித்தபோது, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்காக மாற்றப்பட்டுவிட்டது என்றும் வேறு ஊராட்சிக்கே மாற்றப்பட்டுவிட்டது என்றும் இருவேறுவிதமான தகவல்கள் கிடைத்தன. தவிர, புதிய திட்ட மதிப்பீடு தயார்செய்த பின்னர் மீண்டும் பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பதில் வந்தது. ஆத்திரமடைந்த மக்கள் என்ன செய்திருக்கின்றனர் தெரியுமா? ஊராட்சி அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டவர்களைக் கட்டிடத்திலேயே சிறை வைத்தனர். இதுபோன்ற சம்பவங்களின் முடிவில் வேறென்ன நடக்கும்? ‘கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்று அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை நம்பி, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இன்னும் 15 நாட்களில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கும் என்றும், ஏழே நாட்களில் வாய்க்காலைக் கடக்க மரப்பாலம் கட்டித்தரப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இந்த விவகாரத்தில் முக்கியமான விஷயம் மக்கள் மனதில் எழுந்த கோபமும் அதை அவர்கள் வெளிப்படுத்திய விதமும்தான். உள்ளாட்சி அமைப்புகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மக்கள் அறிந்துவைத்திருக்கின்றனர். சட்டமன்றம் போன்ற அமைப்புகள் சட்டத்தை உருவாக்குவதற்கும் அதுதொடர்பான பணிகளுக்காகவும்தான். நிர்வாகம் தொடர்பான அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொள்வதோ உள்ளாட்சி அமைப்புகள்தான். அப்படிப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் சற்றும் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் பெரும் பிரச்சினை. ஒருகாலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் நிர்வாகம்கூட உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருந்தது. இன்றும் நாட்டின் பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் வசம்தான் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியங்கள் போன்றவை இருக்கின்றன. உள்ளபடி, மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தேவைகள் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திறம்பட நிர்வகிக்க உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும். மக்களின் நேரடிப் பங்களிப்புடன்தான் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட இடம் கிடைக்காதவர்களின் புகலிடமாகவும், குறுநில மன்னர்களின் ஆட்சிப் பிரதேசங்கள் போன்றும் நடைமுறையில் ஆகிவிட்டன உள்ளாட்சி அமைப்புகள். வெறும் முணுமுணுப்பும் புலம்பலும் இனி உதவாது, கோபங்கள் கேள்விகளாக உருவெடுக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது கவுத்தரச நல்லூர் சம்பவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x