Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM

பாரதி இன்று!

சமநிலைச் சமூகமே பாரதிக்கான மரியாதை!

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்/ இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று பிரகடனம் செய்துகொண்டவர் மகாகவி பாரதி. நூறாண்டுகள் கழித்தும் அவரது சொற்கள், இன்னும் கற்கண்டாக இருப்பதற்குக் காரணம், அவரது தமிழ் மனம். அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலைக்காகவும் பாடியவர் பாரதியார். ‘சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்/ தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு/ வாழும் மனிதர்க்கு எல்லாம்’ என்ற வரிகளில்தான் உண்மையான பாரதியார் வாழ்கிறார். அதனால்தான் அவரை ‘மக்கள் கவிஞர்' என்று மகுடம் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. ‘புரட்சிகரமாக எழுதியவர் மட்டுமல்ல, புரட்சிக்காரனாக வாழ்ந்தவர் பாரதி' என்று முத்தமிழறிஞர் கலைஞர் பேசினார். பாரதியாரின் எட்டயபுரம் வீட்டை அரசுடமை ஆக்கினார் அந்நாள் முதல்வர் கலைஞர். ‘சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு/ தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்' என்றார் பாரதியார். அவர் விரும்பிய சமநிலைச் சமூகம் அமைப்பதே அவருக்குக் காட்டும் உண்மையான மரியாதை!

(‘இந்து தமிழ் திசை’க்கு முதல்வர் பிரத்யேகமாக வழங்கியது.)

----

சமத்துவக் கருத்துகளைப் பரப்பியவர் பாரதி!

ஆர்.நல்லகண்ணு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் / விடுதலைப் போராட்ட வீரர்.

நான் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே பாரதி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. பெண்ணுரிமை, சாதி எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து தன் கவிதைகளில் வலியுறுத்தியவர் அவர். சமத்துவக் கருத்துகளைப் பரப்பியதில் பாரதியின் கவிதைகளுக்கு மட்டுமல்லாமல், கட்டுரைகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நான் பிறப்பதற்கு முன்பே பாரதி இறந்துவிட்டார். அப்போது எங்கள் பகுதியில் இருந்த கிராமங்களிலெல்லாம் எப்போதும் பாரதியார் பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ பாடலைப் பாடிக்கொண்டே ஊர்வலமாகச் செல்வோம். 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சியை யுகப் புரட்சி என்று வர்ணித்துக் கொண்டாடியவர் பாரதி. ரஷ்யப் புரட்சியைப் பாராட்டி இந்தியாவிலேயே முதன்முதலில் எழுதியவர் பாரதிதான். சுதந்திரம் கிடைப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று பாடியவர் அவர்.

---

பாரதியின் முழக்கம் இன்றும் என்னுள்!

கொடிக்கால் ஷேக் அப்துல்லா, எல்லைப் போராட்ட வீரர்.

இளமையில் மட்டுமல்ல, இப்போதும் எனக்கு உந்துசக்தி அளிக்கக்கூடியவை பாரதியின் வரிகள். நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரம் கொண்ட சமயத்தில் நான் சிறு பையன்தான். ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், பொதுக்கூட்டத்தில் பேசுபவர்களிடையே பாரதியின் வரிகள் புழங்கிக்கொண்டிருந்தன. இப்போதும் அந்த முழக்கங்கள் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. வைக்கம் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் பாரதியின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ எனும் வரிகளைப் பாடியபடி சென்றதாகக் கூறுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாரதியின் வரிகள் எப்போதும் பெரும் சக்தி அளிக்கக்கூடியவை.

---

பாரதி தரும் பேரனுபவம்

பா.வெங்கடேசன், எழுத்தாளர்.

ஒரு எழுத்தாளருக்கு மொழியைப் பயன்படுத்த மட்டுமல்ல, அவசியமான இடங்களில் மொழியைக் கைவிடவும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற பாடம் நான் பாரதியிடமிருந்து கற்றுக்கொண்டது. கண்ணம்மாவை அதிதீவிரமான படிமங்களால் செதுக்குவது மட்டுமல்லாமல் ‘நல்லவுயிர்' என்று மிகத் தொடக்க நிலைச் சொல்லாடலுடன் சரணடைவதாகட்டும், ‘அழகுத் தெய்வ'த்தை ‘மூலத்தைச் சொல்லிடவோ வேண்டாமோ’ என்கிற கேள்விக்கு விடையாக வெறுமே ‘முகத்திலருள் காட்ட’ வைப்பதாகட்டும், இவையெல்லாம் அனுபவத்தின் உச்சியில் மொழியின் போதாமையை எதிர்கொள்ளும் அபூர்வமான படைப்புக் கணங்கள். இதனால் மூலத்தை எட்டும் பேரனுபவம் மொழியைத் துறந்து வாசகரிடம் இயங்கத் தொடங்கிவிடுகிறது.

---

பாரதி எந்நாளும் அழியாத மகா கவிதை

மனுஷ்ய புத்திரன், கவிஞர்.

பாரதியை நேரடியாகப் படித்தறியாதவர்களுக்கும் பாரதியின் சில வரிகளேனும் தெரியும். அய்யன் திருவள்ளுவருக்குப் பின் அப்படி வெகுசனப் பொது உளவியலுக்குள் படர்ந்துவிட்ட கவியரசன் பாரதி. அவன் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் பாரதியின் பாடல்கள் இன்றும் சமகாலத்துக்கானவையாக இருக்கின்றன. மானுட விடுதலையாகட்டும், பண்பாட்டு விடுதலையாகட்டும் பாரதியின் வரிகள் காலத்துக்கேற்பப் புதிய உள்ளடக்கங்களைப் பெற்று, மனக்கிளர்ச்சி அடைய வைக்கின்றன. எங்கெல்லாம் புதுமை நாடலும் மாற்றத்துக்கான வேட்கையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பாரதி அழிவற்று இருக்கிறான்; இருப்பான். பாரதி மறைவு நூற்றாண்டிலும் நாம் சொல்லக்கூடியது இதுதான்: ‘இன்னும் பல நூற்றாண்டு இரும்!’

---

பாரதி என் வழிகாட்டி

கண்டராதித்தன், கவிஞர்

எனது பதின்ம வயதின் மத்தியில் அறிமுகமாகிய பாரதி, இன்றுவரை என் நல்வினைகளின் வழிகாட்டியாகவும், தோழனாகவும், மூத்த கவியாகவும் இருப்பதாக உணர்கிறேன் ஆற்றல்மிக்க பாரதியின் வரிகளிலிருந்துதான் முதன்முதலாக லட்சியவாதப் போக்குகள் குறித்தும் அறிந்துகொண்டேன். பாரதியாரின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இந்நேரத்தில், தங்கள் இளமைப் பருவத்தை அவரது கவிதைகளுடன் தொடங்குமாறு இளம் வயதினரைக் கேட்டுக்கொள்வதும் சமூகக் கடமைதான்.

---

நவீனத்துவத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்

பொன்முகலி, கவிஞர்.

கடந்த ஒரு நூற்றாண்டாய் தமிழில் கவிதை எழுதவருகிற எவரும் பாரதியின் பாதிப்பில்லாமல் எழுத முடியாது என்பது பாரதியின் தாக்கத்தை உணர்த்துவது. கவிதைக்கான அவருடைய மன எழுச்சியும் பித்தும் படிக்கும் எவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. நவீனத்துவம் எனும் பெரும் தேரை ஒற்றை ஆளாகத் தமிழ் கவிதை உலகுக்கு இழுத்து வந்தவர். மேற்கில் கோலோச்சிய ரொமான்டிசிசம் எனும் மாபெரும் இயக்கத்தை இங்கே அறிமுகப்படுத்தியவரும் அவரே. அவருடைய ‘சின்னஞ்சிறு கிளியே’, ‘கண்ணன் என் காதலன்’ தலைப்பில் அமைந்த பாடல்கள், ‘நின்னையே ரதி என்று’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் விருப்பத்துக்குரியவை.

---

பாரதியின் கோட்டிலிருந்து வந்தவர்கள் நாம்

சபரிநாதன், கவிஞர்.

காலத்தால் முந்தைய பல கவிஞர்களைவிட பாரதியின் படைப்புகள் நெருக்கமாகத் தோன்றுவதற்குக் காரணம், அவை தற்கால மனவெளிக்குள் எதிரொலிப்பதுவும் அவற்றிலுள்ள மந்திர வேகமும்தான். அவரது ஆவேசங்களை, சிந்தனைகளை, மனப் போராட்டங்களை, பிரார்த்தனைகளை இப்போதும் ஒருவரால் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஓர் இளம் கவிஞராகவே வாழ்ந்து முடிந்த பாரதி, தீவிரமாக இயங்கியது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள். அக்குறுகிய காலவெளியில் நிகழ்ந்துள்ள அவரது பங்களிப்பின் ஆழமும் விசாலமும் படைப்பாற்றலும் பிரமிப்பூட்டுபவை. ரஷ்ய இலக்கியவாதிகள் எல்லோரும் கோகலின் ‘மேல்கோட்’டிலிருந்து வெளிவந்தோம் என தஸ்தயேவ்ஸ்கி கூறியதைப் போல, பாரதியின் பித்தான் போன அல்பகா கோட்டிலிருந்தே தமிழின் நவீன இலக்கியகர்த்தாக்கள் வந்துள்ளனர் என்று நகைச்சுவையாகச் சொல்லலாம்.

- தொகுப்பு: மகேஷ், கோபால், ரியாஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x