Published : 10 Sep 2021 04:41 AM
Last Updated : 10 Sep 2021 04:41 AM

நீயே ஒளி... நீதான் வழி!

சூ.ம.ஜெயசீலன்

உலகில் நிகழும் 100 இறப்புகளுள் ஒன்று தற்கொலையால் நிகழ்கிறது. அதிலும் 77% ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் தினமும் குறைந்தபட்சம் 36 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், இந்திய அளவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை குறிப்பிடுகிறது.

ஒருவர் தன் உயிரைத் தானே எடுத்துக்கொள்வதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. வறுமை, காதல் தோல்வி, போதைப் பழக்கம், திருமணம் தொடர்பான சிக்கல்கள், பணமிழப்பு, தேர்வில் தோல்வி, வேலையின்மை, தொழில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர்களின் இறப்பு, குழந்தை பெற இயலாமை, சுய கௌரவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தூண்டுதலாக இருக்கின்றன. உளவியலர் விக்டர் ஃபிராங்கிள், எதிர்பார்த்தது நடக்காமல் போவது அல்லது காலம் தாழ்த்துவது, தோல்வி, சலிப்பு, விபத்து, இயலாமை, மிரட்டல்கள் போன்றவை நம் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றன. அவ்வெற்றிடத்தை நாம் எதைக் கொண்டு நிரப்புகிறோம் என்பது மிகவும் முக்கியம் எனச் சொல்கிறார். வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் அர்த்தம் பொதிந்திருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அவ்வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், போதைப் பொருட்களால், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளால், மனச்சோர்வு, தனிமை, குற்றவுணர்வினால் அவ்வெற்றிடத்தைச் சிலர் நிரப்புகிறார்கள். இது தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என மேலும் விளக்குகிறார்.

நடந்து முடிந்த தற்கொலை குறித்து ஆய்வுசெய்வதற்கு உளவியல் உடற்கூறாய்வு (Psychological Autopsy) நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறையில், இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சிகிச்சை அளித்தவர்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பார்கள். இதோடுகூட, மருத்துவ மற்றும் மனநல சிகிச்சையின் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். அவ்வாறான உளவியல் உடற்கூறாய்வின்படி, நடந்து முடிந்த தற்கொலைகளுக்கு மனநலச் சிக்கல்கள் காரணமாக இருந்ததை எண்ணற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மனச்சோர்வு உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்பு 20 மடங்கு கூடுதலாக உள்ளதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தற்கொலை என்பது மனநோய் அல்ல. குணப்படுத்தக்கூடிய மனஅழுத்தம், மனச்சோர்வு, அதீத மகிழ்ச்சி அல்லது அதீத மனச்சோர்வு எனப்படும் இருமுனைக் கோளாறு, உணவு உண்ணுதல் கோளாறு போன்ற பலவற்றைக் கவனிக்காமல் விட்டதன் தீவிர விளைவே, தற்கொலைக்கு இட்டுச்செல்கிறது.

தற்கொலை என்பது நம்மளவில் நின்றுவிடுவதல்ல. குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் உடல், மன, பொருளாதார அளவில் பாதிக்கிறது. சமூகத்தின் முன் குற்றவுணர்வோடு வாழ வைக்கிறது. மேலும், மரபணு வழியாக நம் அடுத்தடுத்த தலைமுறையையும் தற்கொலையை நோக்கித் தள்ளுவதாக எண்ணற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவேதான், தற்கொலை எண்ணம் உள்ளவர்கள், மனநல ஆலோசனைக்கு வரும்போது “இதற்கு முன்பு, உங்கள் குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டுள்ளார்களா?” என மனநல மருத்துவர்கள் கேட்கிறார்கள்.

பொதுவாக, தற்கொலை நடவடிக்கைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். (1) எல்லாருக்கும் சுமையாக இருப்பதாகவும், தம்மை மற்றவர்கள் ஏமாற்றிவிட்டதாகவும் நினைத்து, தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைப்பது; (2) எந்தெந்த வழிகளிலெல்லாம் நிறைவேற்றுவது எனத் திட்டமிடுவது, வழிகளைத் தேர்ந்தெடுப்பது; (3) தற்கொலைக்கு முயல்வது. இதில் எந்த நிலையில் நாம் இருந்தாலும் நண்பர்கள் அல்லது நம்மீது அக்கறையும் அன்பும் உள்ளவர்களிடம் பகிர்ந்துகொண்டு மனதை இலகுவாக்க அச்சப்படக் கூடாது. தனியறையில் முடங்கக் கூடாது.

நமக்குத் தெரிந்தவர்கள் அதீத பதற்றத்துடன் இருந்தாலோ, பேசுவதையும் பழகுவதையும் குறைத்துத் தனிமையை அதிகம் நாடினாலோ அவரோடு பேச எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். கைபேசியில் அழைப்பவரின் குரலில் ஆழ்ந்த சோகம் அல்லது பதற்றத்தை உணர்ந்தால், எவ்வளவு முக்கியமான வேலையில் நாம் இருந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு, அழைத்தவருடன் பேச வேண்டும். தான் பேசுவதைக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்பதே அவர் மீதும், அவரின் எதிர்காலம் மீதும், மற்றவர்களின் மீதான அவரது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இதனை, “சிறு வயதில் குறைவான தன்மதிப்பு உடையவனாகவே இருந்தேன். தற்கொலை எண்ணமெல்லாம் இருந்தன. ஆனால், ஆன்மிகத்தில் என்னை ஈடுபடுத்தியது, ரோஜா படம் வெற்றி பெற்றது, மற்றும் அன்பெல்லாம் கிடைத்தவுடன் அதெல்லாம் போய்விட்டது” எனும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

எனக்கென்று யாருமே இல்லை. நான் நல்லவனாக இருந்து என்ன பயன்? யாரையுமே நம்பக் கூடாது என்னும் எதிர்மறைக் கருத்து வலுப்படுகிறபோது, நண்பர்களையோ நல்ல உறவுகளையோ தேடிச் சிலர் போக மாட்டார்கள். நண்பர்களே அழைத்துப் பேசினாலும் தவிர்ப்பார்கள். வாழ்வதற்குப் பதிலாகச் செத்துவிடலாம் எனவும் சொல்வார்கள். ஆற்றுப்படுத்தும் அமர்வுக்கு வந்த ஒருவர், “எனக்குப் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்றார். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்த ஆற்றுப்படுத்துநர், “உங்களைப் பொறுத்தவரையில் ‘பெரிய’ என்பதன் வரையறை என்ன?” என்று கேட்டார். வந்தவருக்குப் புரியவில்லை. கேள்வியை மீண்டும் கேட்ட ஆற்றுப்படுத்துநர் “பெரிய என்றால் கிரிக்கெட் பந்து அளவா? கால்பந்து அளவா? திருச்சி மாவட்டம் அளவு பெரியதா? பூமிப்பந்து அளவு பெரியதா?” வந்தவர் யோசிக்கத் தொடங்கினார்.

அடுத்தடுத்த அமர்வுகளில் எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாகச் சீரமைக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. “நான் தகுதியற்றவன், பிரச்சினையைத் தீர்க்கும் அளவு ஆற்றலற்றவன்” எனத் தொடக்கத்தில் சொன்னவர், “எவ்வளவோ சிக்கல்களை நான் சரிசெய்திருக்கிறேன். இதையும் என்னால் சரிசெய்ய முடியும்” என்றார். “யாருக்குமே நான் முக்கியமல்ல” என்றவர், “என் மீது அக்கறை கொண்டுள்ள பலர் உடன் இருக்கிறார்கள்” என்றார். இப்போது அவர் நலமுடன் வாழ்கிறார். சரியான நேரத்தில் உதவி நாடுவதும், உடனிருப்பை நல்குவதும் நம்மையும் அயலாரையும் காப்பாற்றும்.

- சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர், உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பிலிப்பைன்ஸ்,
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

செப்டம்பர்-10: தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x